திங்கள், பிப்ரவரி 19, 2018

ஒற்றைக்கொலுசு (சிறுகதை)


அதிகாலையில் வழக்கம் போல் எங்கள் பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அது ஒன்றும் பெரிய பூங்கா இல்லை. ஆனால், சிறியதாக இருந்தாலும் இந்த பகுதி மக்களால் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
சுற்றிலும், கொன்றை,நாவல்,அரசு முதலிய மரங்களும், நடைப்பாதையை ஒட்டி பலவகையான பூச்செடிகளும், ஒரு ஓரத்தில் குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல் முதலான சாதனங்களும், நடுவில் வட்ட வடிவில் செயற்கை நீருற்றும், சரியான இடைவெளியில் மின்விளக்குகளும், தண்ணீர் குழாய்களும் உண்டு.
அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் மட்டுமே பெரும்பாலும் வருவார்கள். மாலையில் நடைபயிற்சி செய்வோர், விளையாட சிறுவர்,சிறுமியர், காற்று வாங்கி கதை பேச வருபவர்கள் என பலரும் வருவார்கள்.
நான் அலுவலகத்தில் இருந்து வர நேரமாகும் என்பதால் அதிகாலையிலேயே சுமார் பத்து சுற்றுகள் நடந்துவிட்டு போய் விடுவேன். மாலையில் என் மனைவி என் ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு வந்து மற்ற சிறுவர்களோடு விளையாட விட்டுவிட்டு, தானும் தோழிகளோடு பேசி பொழுதைப்போக்கி விட்டு வந்துவிடுவாள்.
இன்று நான் நடக்க ஆரம்பித்த போது, பூங்காவில் வயதான ஆண்கள் இரண்டு பேரும், வயதான பெண்மணி ஒருத்தரும், நடுத்தர வயது பெண்மணி ஒருத்தரும் என என்னைத்தவிர நான்கு பேர் மட்டுமே இருந்தார்கள். நேற்று இரவு பெய்த மழையின் ஈரம் இன்னமும் நடைபாதையில் மீதமிருந்தது. புல்வெளிகளில் நீர்த்துளிகள் பூத்திருந்தன.
மொத்தம் பத்து சுற்று கணக்கு, அரைமணி நேரத்திற்கு.
நடக்க ஆரம்பித்தேன்.





முதல் சுற்று....முடிந்து, இரண்டாவது சுற்று.....நடக்கும் போது தான் அதைப்பார்த்தேன். சேறு படிந்து, பாதி மண்ணில் புதைந்தும், பாதி வெளியே தெரிந்துமாய் அழகான ஒற்றை வெள்ளிக்கொலுசு.
அதன் பளபளப்பு அது சமீபத்தில் தான் வாங்கப்பட்டது என்பதை உணர்த்தியது. பாவம், யாருடையதோ. சிரமப்பட்டு நடந்து கொண்டிருந்த முதியவர்கள் பூங்காவின் மறுபக்கத்தில் இருந்தார்கள். அந்த நடுத்தர வயது பெண்மணி அப்போது தான் என்னை கடந்து சென்றிருந்தார்.
எடுக்கலாமா? வேண்டாமா? எடுத்து யாருடையது என்று கேட்டு கொடுத்து விடலாம். வேறு யார் கண்ணிலாவதுபட்டால் அதை உரியவர்களிடம் சேர்ப்பார்கள் என்பது நிச்சயமில்லை. யாருடையது என்று எப்படி கண்டுபிடிப்பது? ஆனால், அதை யோசிக்க இப்போது நேரமில்லை.முதலில் இதை பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டு தான் மேற்க்கொண்டு யோசிக்க வேண்டும்.
சட்டென்று அதை எடுத்து என் அரை பேண்டின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நடையை தொடர்ந்தேன். ஏதோ தவறு செய்துவிட்டது போல் படபடப்பாக இருந்தது..
மூன்றாவது சுற்று....எனக்கு முன்னால் இதை கடந்து போனவர்கள் யாரவது இதை பார்த்திருப்பார்களோ? பார்த்துவிட்டு நமக்கேன் வம்பு என்று போயிருப்பார்களோ? இப்போது அதே இடத்தை மீண்டும் கடக்கும் போது, அந்த கொலுசு அங்கேயில்லாததை கண்டு நான் எடுத்ததை ஊகித்துவிடுவார்களோ? பார்த்தால் படித்தவனாய் தெரிகிறான், இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே என்று நினைப்பார்களோ? ஆனால், நான் உரியவரிகளிடம் இதை ஒப்படைக்கத்தானே எடுத்தேன், மற்றவர் நினைப்பதை பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?
நான்காவது சுற்று....இதற்கு உரியவரை எப்படி கண்டுபிடிப்பது? இது நிச்சயம் சிறு குழந்தைகள் அணியும் கொலுசு இல்லை, பெரியதாக இருக்கிறது. என்னை கடந்து நடந்து சென்ற இரு பெண்களின் கால்களையும் பார்த்தேன். அவர்கள் காலில் ஒற்றை கொலுசு இல்லை. அதோடு அது சேற்றில் சிக்கியிருந்த விதத்தை பார்த்தால் நிச்சயம் நேற்று மாலையிலேயே தவறி விழுந்திருக்கவேண்டும்.
ஐந்தாவது சுற்று...பூங்காவை பராமரிக்கும் கேசவன் சாரிடம் கொடுத்து யாருடையது என்று விசாரித்து கொடுத்துவிட சொல்லலாமா? வேண்டாம்! பூங்கா பராமரிப்பிற்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டிருந்தார், ஒருவேளை இது அதற்கு உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்து விடுவார்.
ஆறாவது சுற்று....போலீஸில் ஒப்படைத்து விடலாமா? அவர்கள் எப்படி உரியவரை கண்டுபிடிப்பார்கள்? “சின்ரெல்லா” கதையில் வருவது போல் இந்த ஒற்றை கொலுசை ஓவ்வொரு வீடாக எடுத்து சென்று எல்லா பெண்களின் கால்களிலும் போட்டுப்பார்த்து யாருடையது என்று கண்டுபிடிப்பார்களா? ஊஹும்... அது சரியாக வராது.
ஏழாவது சுற்று...யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறதே, பேசாமல் கோவில் உண்டியலில் போட்டு விடலாமா? அதற்கு இது அங்கேயே கிடந்திருக்கலாமே? இது கோவிலுக்கு சேரலாம் என்றால், பூங்கா பராமரிப்பிற்கு பயன்படலாம். வேறு யாருக்காவது பயன்படலாம், அவ்வளவு ஏன் உரியவர்களே இன்று மாலை திரும்ப வந்தால் அவர்கள் கண்ணிலேயே பட்டு மீண்டும் அவர்களிடமே போய் சேரலாம்? அப்படியிருக்க இதை நான் எடுத்திருக்க வேண்டியதே இல்லையே?
எட்டாவது சுற்று...ஒரு தாளில் என் பெயரையும், அலைபேசி எண்ணையும் எழுதி பூங்கா சுவற்றில் ஓட்டிவிட்டு, உரியவர்கள் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டு மற்றொரு கொலுசோடு என் வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கலாமா?
ஏன் எனக்கு அலுவலகத்தில் வேறு வேலையே இல்லையா? ஏற்கனவே வரும் விளம்பர அழைப்புகள் தொல்லை தாங்க முடியவில்லை, இதில் என் அலைபேசி எண்ணை பொது சுவற்றில் எழுதி வைத்துவிட்டால் அவ்வளவு தான்.
ஒற்றை கொலுசோடு கூட்டம் கூட்டமாய் பெண்கள் என் வீட்டை முற்றுகையிடுவது போல் ஒரு கணம் கற்பனை செய்து பார்த்தேன், பயங்கரமாயிருந்தது.
ஒன்பதாவது சுற்று...வேறொரு பெண்ணின் ஒற்றை கொலுசோடு நான் வீடு சென்றால் என் மனைவியின் எதிர்வினை என்னவாக இருக்கும்? ஏனோ மனைவியின் ஒற்றை சிலம்பை விற்க சென்ற கோவலன் நிலை நினைவிற்கு வந்தது. ஏன் எனக்கு இந்த வேண்டாத வேலை? அடுத்தவர் பொருள் அரைமணி நேரமாய் என் கையில் இருப்பதே இவ்வளவு மன உளைச்சலாய் இருக்கிறதே! இந்த பொது சேவை செய்யவில்லை என்று என்னை யார் கேட்டார்கள்? யானோ சேவகன்? யானே கள்வன்! என்று பாண்டியனாய் மாறி தீர்ப்பேழுதினேன்.
பத்தாவது சுற்று...இந்த பொறுப்பு நமக்கு ஆகாது. இதை இருந்த இடத்திலேயே திரும்ப போட்டுவிட்டால் என்ன? யார் கண்ணில் இது படவேண்டும் என்று இருக்கிறதோ, பட்டுவிட்டு போகட்டும். அது தான் சரி. யோசித்துக்கொண்டே கொலுசு கிடந்த இடத்திற்கு வந்த போது, யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு சட்டென்று அந்த கொலுசை நழுவ விட்டேன்.
மனதிலிருந்து பெரும் பாரம் இறங்கியது போலிருந்தது. வீட்டிற்கு வந்து ஆயாசத்தோடு சோபாவில் சாய்ந்தவனுக்கு, காப்பி கொண்டு வந்து கொடுத்த என் மனைவி, தயங்கியபடியே ” உங்க கிட்ட ஒண்ணு சொல்லணுங்க, நேத்து சாயங்காலம், பார்க்குக்கு பையன விளையாட கூட்டிகிட்டு போனேங்க. அப்பக்கூட என் ரெண்டு கொலுசும் கால்ல இருந்துதுங்க. வீட்டுக்கு வந்த பின்னாடி பார்த்தா என் ஒரு கால் கொலுச காணலைங்க. வீடு முழுக்க தேடிப்பார்த்துட்டேன். வீட்டுல விழல, தெருவுல விழுந்துச்சோ, பார்க்குல விழுந்துச்சோ தெரியல.ராத்திரி மழை வேற ஆரம்பிச்சிட்டதால திரும்ப போயி பார்க்க முடியல. இன்னிக்கி போயி தேடிப்பார்க்கணுங்க. இதப்பாருங்க ஒண்ணு மட்டும் இருக்குது,” என்றபடியே நீட்டிய ஒற்றை கொலுசு, பூங்காவில் பார்த்த கொலுசைப்போலவே இருந்தது.