ந
|
ள்ளிரவில் திடீரென்று
தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டேன். மீண்டும் அந்த எண்ணம் என்னுள் தலை தூக்கியது.
சிறிது காலமாகவே இப்படிதான் இருக்கிறது. பாதி இரவில் கண்விழிப்பதும், கூடவே கொலை
செய்யும் எண்ணம் ஏற்படுவதும். சுற்றும்,முற்றும் பார்த்தேன். கண்ணனும் குழந்தைகளும்
தூங்கிகொண்டிருந்தார்கள். எப்படி இவர்களால் இப்படி தூங்க முடிகிறதேன்றே
தெரியவில்லை.
எனக்கு மட்டும் தான் இந்த
மாதிரி தூங்க முடியாமல் இம்சையாய் இருக்கிறது.எல்லோரையும் கொன்று தீர்த்துவிட்டால்
நிம்மதி என்று தோன்றுகிறது.
நாட்டில் இந்த மாதிரி
மக்களுக்கு கேடு விளைவிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அவர்களை எல்லாம் களை
எடுத்தே ஆகவேண்டும். அதற்காகத்தான் இந்த மாதிரி நவீன கருவிகள் கண்டுபிடிக்க பட்டு
இருக்கின்றன. அந்த மாதிரியான எலெக்ட்ரானிக் கருவி ஒன்றை வாங்கி வீட்டில்
வைத்திருக்கிறேன்.
தினமும் நடுஇரவில்
விழிப்பதும் அந்த எலெக்ட்ரானிக் கருவியால் போட்டு தள்ளுவதும் சில நாட்களாக
நடக்கிறது. இதனால், இரவிலும் தூக்கமில்லை,பகலில் வீட்டு வேலை,ஆபிஸ் வேலை என்று
பகலிலும் தூக்கமில்லை.
யோசித்துக்கொண்டே அந்த
ஆயுதத்தை எடுத்துக்கொண்டு எழுந்தேன். என்னுடனேயே வெள்ளை நிறத்தில் இன்னொரு
உருவமும் எழுந்தது. அதிர்ச்சி ஒரு நொடி உடம்பை உலுக்கியது. உற்றுப்பார்த்தேன்.
“ஆ! இது என்ன?”
அந்த வெள்ளை உருவம்
என்னைபோலவே இருந்தது.
“யா..யா..யார்..நீ?” நான்
கேட்டதாக நினைத்துகொண்டிருந்தேன். ஆனால், என் வாயில் இருந்து வார்த்தைகளே வரவில்லை.
அது சிரித்தது. என்
கேள்வியை மனத்தினுள் புகுந்து படித்தது போல், “நாந்தான் உன் மனசாட்சி. நீ
சினிமாவில் எல்லாம் பார்த்ததில்லை? ஒருத்தர் தன் மனசாட்சியோடு பேசிக்கொள்வதை...?”
“ஓ...!” இப்போ கொஞ்சம்
ஆசுவாசமா இருந்தது.
“என்ன செய்யப்போற?”
அதட்டலான குரலில் கேட்டது.
“கொக்....கொ...கொலைகள்.”
“என்ன துணிச்சல்!? அதை
கொஞ்சங்கூட தயக்கமே இல்லாம சொல்றியே!?”
“இதில் என்ன தயக்கம்!?
மக்களுக்கு தீங்கு செய்பவர்களை, போட்டு தள்ள வேண்டியது தான்.”
“அது அரசாங்கத்தோட வேலை,
நீயேன் தினமும் பாதிராத்திரியில் எழுந்துண்டு இப்படி செய்யற?”
“எல்லாரும் அரசாங்கத்தையே
எதிர்ப்பார்த்திருக்க கூடாது.அது மட்டுமில்ல நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக
பாதிக்கப்பட்டேன்.”
“என்ன? வசனம் பேசறியா?
செய்யறது கொலைகள் அதுக்கு என்ன உனக்கு திமிர் பேச்சு வேண்டிகிடக்கு?”
“இது தப்புன்னா, இந்தமாதிரி
செய்யறதுக்குன்னு எலெக்ட்ரானிக்
கருவியெல்லாம் தயாரிச்சு விக்கறாங்களே, அதுக்கு என்ன சொல்லற?”
“முட்டாள் ! உன்ன நீ
காப்பாத்திக்கலாம், ஆனா இன்னொரு உயிர கொல்ல உனக்கு உரிமை கிடையாது.”
“எத்தனை பேர இவங்க
கொன்னிருக்காங்க தெரியுமா? அதுல எத்தனை குழந்தைகள் தெரியுமா? இவங்களையெல்லாம் விட்டுவைக்கக்கூடாது.”
“சரி, உன் ஒருத்தியால இவங்க
எல்லாரையும் ஒழிச்சிட முடியுமா?”
“வா...வா...வந்தியா இந்த
கேள்விக்கு, என்னடா இன்னமும் இந்த கோழைத்தனமான கேள்வி வரலியேன்னு பாத்தேன்.வெக்கமா
இல்ல இப்படி கேட்கறதுக்கு உனக்கு? எல்லோரும் நம்ம மட்டுமே செஞ்சு ஒரு வேலை ஆகிடும்ன்னு
நினைச்சா ஆரம்பிக்கிறாங்க? என்வரையில் என்னால ஆனத நான் செய்யறேன்.எல்லோரும்
சேர்ந்து செஞ்சா ஒருநாள் இவங்களை மொத்தமா ஒழிச்சிடலாம்.”
“சரி, இவ்வளவு நாளா
செய்யறியே உன்னால அவங்களை ஒழிக்க முடிஞ்சுதா? என்னைக்குமே ஒரு பிரச்சனையோட
ஊற்றுக்கண் எங்க இருக்குன்னு பார்த்து அதை தான் அழிக்கணும். அப்பத்தான் அது
திரும்பத்திரும்ப வராம இருக்கும்.”
“இப்போ தான் என்னமோ பெரிய மகாத்மா மாதிரி கொலை
செய்யறது தப்புன்னு கிளாஸ் எடுத்த? திடீர்ன்னு மொத்தமா அழிக்கறதுக்கு வழி சொல்லற?”
"அழிக்கிறதுக்கு இல்ல, உருவாகாமலே இருக்கிறதுக்கு வழி சொல்லறேன்."
"இப்போ சொல்லு திருப்பியும் கேட்கிறேன், உன்னோட செயலால அவங்க எல்லோரையும் மொத்தமா
ஒழிச்சிட முடியும்ன்னு நீ நினைக்கிறியா? இன்னமும் எத்தனை நாளைக்கு இப்படி
தூக்கத்தை தொலைத்து விட்டு தவிக்கப்போற?”
நான் யோசிக்க தொடங்கினேன்.
நான் யோசித்து கொண்டிருக்கும் போதே அது ச்சேச்சே
அவள் சொன்னாள்,”வீட்டோட சுற்றுப்புறத்தை தூய்மையா வச்சிக்கணும், தண்ணிய தேங்க
விடக்கூடாது, குப்பையை உடனே,உடனே டிஸ்போஸ் பண்ணிடனும். இதெல்லாம் செஞ்சியானா இந்த
கொசுக்கள் பரவாது. நீயும் ராத்திரி முழுக்க கொசு பேட்டை வச்சிண்டு அடிச்சிண்டே
இருக்கவேண்டிய அவசியமும் இருக்காது.புரிஞ்சுதா?”
“புரிஞ்சுது” என்றேன் மெல்ல புன்னகைத்தப்படி.
“என்ன புரிஞ்சுது?”
“நீ ஒரு புத்திசாலியோட மனசாட்சின்னு.”
இப்போது அவளும் புன்னகைத்தாள்.என் மனசாட்சி
விழித்த வேளையில் நானும், கொசு பேட்டும் தூங்க தொடங்கினோம்.