நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 24, 2015

SUBSCRIBER NOT REACHABLE AT THE MOMENT FRIENDS.


என் கிட்ட இருக்கிறது ஒரே ஒரு ஓட்ட நோக்கியா. எனக்கு என்ன பெரிசா தேவை. பச்சை அமுத்தினா பேசணும், செவப்ப அமுத்தினா நிறுத்தணும் அம்புடுதேன். எனக்கு இருக்கிற ஜாக்கிரதைக்கு இதுவே ரொம்ப ஜாஸ்தி. அன்னிக்கி ஸ்கூல் சாமான் வாங்க நிறைய கடைக்கு போயிட்டு எதோ ஒரு கடையில போனை விட்டுட்டு, அப்புறம் ஒவ்வோரு கடையா தேடினேன். என் போனை எவனும் தொடக்கூட மாட்டான். இருந்தாலும் காக்கைக்கும் தன் போன் பொன் போன் இல்லீயா?

ரொம்பவே கவலைப்பட்டேன். எப்படியோ நான் விட்டுட்டு போன கடையில எடுத்து வச்சிருந்து குடுத்தான். “ரொம்ப நன்றிப்பா தம்பி”ன்னு சண்முகசுந்தரம் ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டுட்டு, தொலைஞ்சு போயி திரும்ப கிடைச்ச என் தங்கத்தோட வீடு வந்து சேர்ந்தேன்
.
இன்னோரு நாள் என் தங்கத்தை கையில வச்சிண்டு கொஞ்சிண்டு இருக்கிறச்சே கை தவறி கீழ விழுந்துடுத்து. அதுல அதுக்கு நடுவுல கொஞ்சம் பக்கம் காணாம போயிடுத்து. எஸ்.எம்.எஸ் மட்டும் வரவேயில்ல. இத கண்டுபிடிக்கறத்துக்கே எனக்கு கொஞ்சநாள் ஆச்சு.

அப்புறம் கிட்ட தட்ட சீக்காளி குழந்தைய தூக்கிண்டு சுத்தற அம்மா மாதிரி அப்பவும் விடாம அதை தூக்கிண்டு சுத்திண்டு இருக்கிறச்சே, ஒரு நாள் திடீர்ன்னு திரும்பவும் என் கையிலருந்து கீழ விழுந்துடுத்து. தமிழ் சினிமால விபத்துல பழைய ஞாபகத்தை எல்லாம் இழந்துடற ஹீரோவுக்கு திருப்பியும் ஒரு விபத்துலயே பழைய ஞாபகமெல்லாம் வர்றா மாதிரி, கீழ விழுந்த போனை எடுத்து திருப்பியும் செட் பண்ணினவுடனே வந்துது பாருங்க 150 மெசேஜஸ் ஒரே நேரத்துல....

இதெல்லாமாவது பரவாயில்ல, போன வாரம் நாத்தனார் பையன் கல்யாண ரிசப்ஷனுக்கு போயிட்டு, போனை வழக்கம் போல திருவிழா கூட்டத்துல தொலைச்சிட்டு திண்டாடிண்டு இருக்கேன். இப்பத்தான் தெரிஞ்சிது, என் போன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லயே ஏற்காட் எக்ஸ்பிரஸ் ஏறி பொண்ணு வீட்டுகாரங்களோட தலை தீபாவளிக்கு ஈரோடுக்கு போயிடுத்துங்கற விஷயம்.

இப்போ ஈரோடு போயி திரிச்சி திருநின்றவூர் வந்துடுத்து. இந்த கூத்துல நான் கெட்ட கேட்டுக்கு என் தம்பி பொண்டாட்டி எனக்கு ஸ்மாட் போன் வாங்கி குடுத்திருக்கா. போனாவது ஸ்மார்ட்டா இருந்தாத்தான் உண்டு. அதை பத்திரமா வச்சுக்க, நமக்கு ஸ்மார்ட்னெஸ் பத்தாது.

ஆக மொத்தம், இப்போதைக்கு என்னை யாரும் காண்டாக்ட் பண்ண முடியாது. Subscriber not reachable at any moment friends.

புதன், ஆகஸ்ட் 27, 2014

சன் ஸ்க்ரீன் லோஷன்


”என் கையெல்லாம் கருப்பா, சுருக்கம் சுருக்கமா இருக்கு பாரேன் உஷா, இதுக்கு என்ன பண்ணலாம்?”

வாயில் நூலை கவ்வியபடி என் புருவத்தை ராவிக்கொண்டிருந்த உஷா ஒரு கணம் அதை நிறுத்திவிட்டு என் கைகளை உற்று பார்த்தாள்.

“ம்…ம்..சன் டான்ஸ். வெளியில போகும் போது எதாவது சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்கோ.”

”நான் தான் வெளியிலயே போறதில்லையே. மிஞ்சி போனா மாடிக்கு துணி உலர்த்த போவேன் அவ்வளவுதான்.”

“அதுவே போதும் சன் டான்ஸ் வர்றத்துக்கு. சன் ஸ்க்ரீன் போட்டுக்கோ.”

“ஆனா மூஞ்சியும் தானே வெயில்ல காயறது. அது கருப்பா ஆகவேயில்லீயே?”

காசியில் வேண்டாத கஸ்டமரையும் விட்டுவிடலாம் என்று ஒரு விதியிருந்திருந்தால் உஷா ஐந்து வருடங்களுக்கு முன்பே என்னை காசியில் தத்தம் கொடுத்திருப்பாள். அவளை பொறுத்தவரையில் நான் ரெகுலர் கஸ்டமர் இல்லை, ரெகுலர் கஷ்டமர்.

“சன் ஸ்க்ரீன் போட்டுக்கோ, அவ்வளவு தான்.” என்றாள் அழுத்தமாக.
--------------------------------------------------------------------------------------

”ஏண்டீ ப்ரியா ! என் கையெல்லாம் கருப்பா, சுருக்கம் சுருக்கமா இருக்கே, உஷா எதாவது சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்க சொல்றா, என்ன போட்டுக்கலாம்?”

”அட ஆமாக்கா ! கருப்பா, சுருக்கமாத்தான் இருக்கு. இதெல்லாம் வயசானாதானே வரும்” என்றவள் நான் முறைப்பதை பார்த்துவிட்டு “அதான் உங்களுக்கு எப்படின்னு தான் யோசிக்கிறேன். நான் ரெகுலரா வாங்கற கடையிலயே ஹெர்பல் ப்ராடெக்ட்ஸ் இருக்கு. வாங்கி தரேன்.”
---------------------------------------------------------------------------------------------

”ஒரு பாட்டில் 250 ரூபாயா? ரொம்ப வேஸ்ட் ப்ரியா. இவ இதையெல்லாம் கேப்பாளே தவிர நாலு நாள் கூட யூஸ் பண்ணமாட்டா. இது அட்டர் வேஸ்ட்.”

“அதொன்னும் வேஸ்டில்ல அத்திம்பேர், இது ஹெர்பல் தான் மூணு வருஷம் ஷெல்ப் லைப் இருக்கு.”

”என்னவோ போ ! மூணு வருஷம் இல்ல முப்பது வருஷம் ஆனாலும் இது அப்படியே தான் இருக்கும்.”

“வாயவச்சுண்டு சும்மாவே இருக்க முடியாதா உங்களால, எத ஆரம்பிச்சாலும், அது நடக்காது, உருப்படாதுன்னு தொஸ்கு சொல்லிண்டு.”
---------------------------------------------------------------------------------------------

இது நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், போன வாரம் ப்ரியா வந்திருந்த போது ஷெல்பை குடைந்தவள்,”அக்கா இந்த சன் ஸ்க்ரீன் லோஷனை யூஸ் பண்ணலையாக்கா? “

“நான் எங்கடீ வெளியில போறேன் இதை போட்டுக்க? அதோட கொஞ்சம் சூரிய வெளிச்சம் மேலபடறது தான் நல்லதாமே!!”

“இதையெல்லாம் இப்ப யோசிக்கிறவ எதுக்கு இதை வாங்கணும். நான் அப்பவே சொன்னேன். கேட்டாத்தானே.”

“எல்லாம் நான் யூஸ் பண்ணுவேன். நீங்க பேசாம இருங்கோ.”

”அக்கா ! நீங்க தான் இப்போ ஆபீஸ் போறீங்கல்ல, போட்டுக்கலாமே?”

“அது காலங்கார்த்தால வெயில் வர்றத்துக்குள்ளயே ஆபீஸ் போயிடறோம், அங்க உள்ளயே தானே இருக்கோம். அப்புறம் வெயில் போனவிட்டு தானே வீட்டுக்கு வர்றோம். அதோட எனக்கு மறந்து போயிடறது ப்ரியா.”

பவர் ஸ்டார் மாதிரி மண்டையை ஆட்டி “ம்…ம்… மறந்து போயிடறதுங்கறது தான் நிஜம். மத்ததெல்லாம் சாக்கு.”

“ஆமா, சாக்கு, கோணின்னுண்டு, பேசாம இருங்கோ. நான் நாளையில இருந்து போட்டுக்கறேன் ப்ரியா.”

இன்று காலை மறக்காமல் சன் ஸ்க்ரீன் லோஷனை எடுத்து போட்டுக்கொண்ட போது, “எந்த காலேஜ் படிக்கிறீங்க?”

“காலேஜா???, நானா!!!!”

”மம்,..,மீ” சிந்து வந்து காலை கட்டிக்கொள்ள, கேட்டவர்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். கற்பனையே அழகாக இருந்தது.

செருப்பை மாட்டி வெளியில் வந்த போது, ரெண்டு மூன்று மழை துளிகள் என் மேல்பட்டு தெறித்தன. அன்னாந்து பார்த்தேன். என்ன கொடுமை இது? இன்றைக்கென்று பார்த்து சன்னே மேக ஸ்க்ரீனுக்குள்.

செவ்வாய், ஜூன் 24, 2014

தியேட்டர் எஃபெக்ட்ஸ் - பார்ட் I



நான் சின்ன குழந்தையா இருக்கிறச்சே என்னை தூக்கிண்டுஅவர்கள்சினிமாவுக்கு போனாங்களாம் எங்க அம்மா, அப்பா. அங்க ஸ்கிரீன்ல வந்தமேரி பிஸ்கெட்அட்வர்டைஸ்மெண்ட பார்த்து,”ஹை ! பிச்சி ! பிச்சி !” ந்னு (பக்கி மாதிரி) கத்தினேனாம். இது தான் என் முதல் தியேட்டர் அனுபவம் பற்றிய பதிவு.

அப்புறம்வறுமையின் நிறம் சிவப்புபார்க்க போயி என் தம்பியும், கசினும் தொலைஞ்சு போயி கிடைச்சது. “துடிக்கும் கரங்கள்பார்க்க போயி என் சின்ன தம்பி விடாம அழுததால பாதியிலேயே திரும்பி வந்தது. இதெல்லாம் நிழலா நியாபகம் இருக்கிற விஷயங்கள்.

முதல் முதலா வந்த 3டி படமானமை டியர் குட்டிச்சாத்தான்பார்க்கறச்சே அந்த கண்ணாடிய கீழ குனிஞ்சு போட்டுண்டுட்டு நிமிரவும். படத்துல மந்திரவாதி ஏதோ ஒரு நெருப்பு சக்கிரம் மாதிரி ஒன்னுத்த விடவும் சரியா இருந்துது. நெருப்பு சக்கிரம் மூஞ்சிகிட்ட வர பயந்து வீல்!”ன்னு கத்தினது இன்னமும் நன்னா ஞாபகம் இருக்கு.

அப்புறம் கமலா தியேட்டர்லதர்ம துரைபடம் பார்க்க நானும், தம்பிகளும், மாமா பசங்களும் போயிட்டு, டிக்கெட் குடுக்க ஆரம்பிக்கறச்சே பணம் போறாதுன்னு தெரிஞ்சு போயி என் மாமா பையன் வீட்டுக்கு பஸ்புடிச்சு போயி பணம் எடுத்துட்டு வந்து டிக்கெட் வாங்கினது. பின்ன, ரஜினி படமாச்சே டிக்கெட் கிடைக்குமா?

ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறச்சே, கூடபடிக்கிற கிராமத்துலர்ந்து வந்த பொண்ணு அவங்க அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்ன்னும் அவர் சினிமா பார்க்க விடமாட்டார்ன்னு சொல்லி எப்படியாவது ஒரு சினிமாவுக்கு கூட்டிகிட்டு போகும்படியா கெஞ்சினா. நாம தான் ஊருக்கு உபகாரியாச்சே. எங்க அப்பா கிட்ட சொல்லி பாவம்ன்னு சினிமாவுக்கு அவள கூட்டிண்டு போக பர்மிஷன் வாங்கினேன். குறிப்பிட்ட அந்த நாள் என்னமோ எங்க ஸ்கூலுக்கு மட்டும் லீவா போன ஒரு ஒர்கிங் டே. பார்த்தா காலங்கார்த்தால எட்டு மணிக்கெல்லாம் எங்க வீட்டுக்கு வந்து நிக்கறா. ராத்திரியெல்லாம் எக்ஸைட்மெட்ல தூங்கியே இருக்க மாட்டா போலிருக்கு


ஏய் ! எங்க அப்பாகிட்ட உங்க அப்பா எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிட்டதால நான் போயிதான் ஆகணும்ன்னு சொல்லிட்டு வந்திருக்கேம்மா. ப்ளீஸ்ப்பா ! சீக்கிரம் போலாம்ப்பா !” என்று கெஞ்சினாள் 
.
சரின்னு கிளம்பினோம். எந்த தியேட்டர்ல காலங்கார்த்தால படம் போடுவாங்க. நான் கொஞ்சம் லேட்டா போகலாம்ன்னு சொன்னாலும் அந்த பொண்ணு கேக்கல. ஒவ்வொரு தியேட்டரா போய் கேவலமாஎப்ப படம் போடுவீங்க?”ன்னு  கேட்டுண்டே போனோம். எனக்கா மகா எரிச்சல். ஆனா, பாவம் அவளுக்கு ஆசை வெட்கம் அறியவில்லை. எதாவது ஒரு படம் பார்த்தே ஆகணும்ன்னு ஒரே அடம். கடைசில, இப்போபத்மராம் கல்யாண மண்டபமாஇருக்கிறராம்தியேட்டர்ல ஒரு ராமராஜன், கௌவுதமி நடிச்ச படம் பார்த்தோம். அதுக்கு தியேட்டர் வாசல்லயே திறக்கரவரைக்கும் காத்திண்டிருந்து முதல் ஆளா டிக்கெட் வாங்கினோம். அந்த தியேட்டர் வாச்மேன் எங்களை ஒரு மாதிரியா பார்த்தான்.

கிரோம்பேட்டையில இருக்கிறச்சே என் மாமா பசங்க வந்தா ஒரு சினிமா கட்டாயம் பார்ப்போம். அப்படி ஒரு தடவை ஒரு அம்பது ரூபாய் நோட்டை எடுத்துண்டு வெற்றி தியேட்டருக்கு போனோம். (அப்போல்லாம் அந்த அம்பது ரூபாய்ல நாங்க அஞ்சு பேரும் படம் பார்க்கலாம்). என் தம்பிகிட்ட தான் பணம் இருந்துது. “போயி டிக்கெட் வாங்குடா!”ன்னாபணத்த காணோம்ங்கிறான். “ஏய் ! சும்மா விளையாடாதடா!”ன்னேன். “இல்லக்கா! நிஜம்மாவே காணோம்!” கொஞ்ச நேர விசாரிப்புகளுக்கு பின் நிஜமாவே பணம் தொலைஞ்சு போச்சுங்கர விவரம் எனக்கு புரிஞ்சிடுத்து. எங்களுக்குள்ள நடக்குற இந்த கான்வர்ஷேஷன்ஸ ஒருத்தன் பார்த்துண்டே இருந்தான். இதை பார்த்தவுடனே அவன் தான் திருடன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்.

நேரா பக்கத்துல இருக்கிற கிரோம்பேட் போலீஸ் ஸ்டேஷன் போனோம்.அங்க எங்களோட அம்பது ரூபா காணாம போயிடுத்துன்னு கம்ப்ளைண்ட் பண்ணினோம்.அங்க இருந்த போலீஸ்காரர்,”எங்க வுட்டீங்க பசங்களா? நல்லா தேடிபாருங்கன்னாரு. நாங்க உடனேசார் ! ஒருத்தன் எங்களையே உத்து பார்த்துகிட்டு இருந்தான். அவன் தான் திருடியிருக்கணும். அவன் எங்க கிட்டயிருந்து திருடின பணத்துல படம் பார்க்கிறத்துக்காக தியேட்டர்லயே காத்துகிட்டிருக்கான். வந்து உடனே அரஸ்ட் பண்ணுங்க சார்!”ன்னோமே பார்க்கணும்

சுத்தி இருந்த மத்த போலீஸ்காரங்கள்ளாம் சிரிச்சாலும் அந்த பெரிய போலீஸ் மட்டும்அம்பது ரூபாய்க்க்கல்லாம் அரஸ்ட் பண்ண முடியாது பசங்களா.”ன்னு ஏதோ சமாதானமெல்லாம் சொல்லி திருப்பி அனுப்பிட்டார். வீட்டுக்கு வந்தா, “சினிமா பார்க்க குடுத்த பணத்த தொலைச்சிட்டா வேற பணமெல்லாம் இல்ல. வெறும்ன்ன மோட்டுவளைய பார்த்துண்டு ஒக்காந்துண்டு இருங்கோ.”ன்னு அம்மா திட்டிட்டா. வெறும்ன்ன மோட்டுவளைய பார்த்துண்டு ஒக்காந்துண்டு இருக்கிறத்துக்கா சம்மர் லீவு விட்டிருக்கு? நாங்க வழக்கம் போல வீட்ட சுத்தி ஓடி மாடி, சுவர், மரம் எல்லாம் ஏறிகுதிச்சு எங்களால முடிஞ்ச அளவுக்கு அக்கம்பக்கத்துல இருக்கற வயசானவாளையெல்லாம் மத்தியானத்துல தூங்கவிடாம நன்னா படுத்தி நாங்க படம் பார்க்க முடியாம போன ஆத்திரத்தை தீர்த்துண்டோம்.

தியேட்டர் எஃபெக்ட்ஸ் தொடரும்……

வியாழன், ஜனவரி 09, 2014

காக்காவான குயில் :(((

காட்சி 1:
 
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று காலை ஒன்பது மணி.



"காற்றுக்கென்ன வேலி......"

"மீரா!"

"கடலுக்கென்ன மூடி.... டிட்ன்க்டிடிங்....."

"மீரா"

"கங்கை வெள்ளம் சங்குக்குளே அடங்கி விடாது, மங்கை நெஞ்சம் பொங்கும் போது..."

"மங்கை நெஞ்சம் பொங்கறது இருக்கட்டும், பால் பொங்கிட போறது கவனி!"

"தெரியும்ப்பா, அடங்க மாட்டீங்க நீங்க? கொஞ்சமாவது பீல் பண்ணி பாட விடறீங்களா...!"

"ஸா..நி...ஸா..ஸரி
ஸரிஸரிஸரிஸாநி...."

"தண்ணி கேன்காரர் வந்தா பணம் குடுத்திடு!"

"ஸா..நி...ஸா..
ஸரிஸரிஸரி....சரிப்பா"

"மீரா"

"ஸ்ஸ்ஸ்....என்னப்பா வேணும் உங்களுக்கு?"

"இல்லப்பா நீ ஜலதோஷத்துலையும், ஜுரத்துலையும் கஷ்ட்டப்படரன்னு எங்க ஆபீஸ்ல டிரைவர்ரா இருக்கானே, அந்த நார்த் இந்தியன் பையன் அவன்கிட்ட சொன்னேன். அவன்தான் இந்த மருந்தை குடுத்தான். "இத மேடத்துக்கு குடுங்க சார், இன்னிக்கே நிவாரணம் கிடைச்சுடும்"ன்னு சொன்னான். ஆயுர்வேதிக்காம், ஒரு நாளைக்கு மூணு வேளை ஹாட் வாட்டர்ல கலந்து குடிக்கணுமாம்.இந்தா"

"சாரிப்பா!"

"எதுக்கு சாரி?"

"இல்ல எப்பவும் போல நீங்க நச்சரதுக்கு தான் கூப்படறேளோன்னு நினைச்சு, எரிஞ்சு விழுந்துட்டேன்."

"சீ..சீ...பரவாயில்லை, மறக்காம மருந்த சாப்பிடு."
                                                            

காட்சி 2: 
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று இரவு ஏழு மணி.



"மீரா.....மீரா!"

"ஏய் ! அம்மா எங்க ?"

கிச்சனுக்கு வந்து,"உடம்பு எப்படிப்பா இருக்கு? மருந்த சாப்பிட்டியா?"

"அடப்பாவி ! ஏதோ ஒரு மருந்தை குடுத்து குயில் மாதிரி இருந்த என் குரலை காக்கா மாதிரி ஆக்கிட்டேன்களே..!"

கத்தினேன், கதறினேன், என்ன புண்ணியம்? என் குரல் எனக்கே கேட்கவில்லை.

என் நிலையை பார்த்து முகம் முழுக்க பூரித்து, அட! அந்த மருந்தை குடுக்கும் போதே டிரைவர் சொன்னான், "இன்னிக்கி ஒரு நாள் இந்த மருந்தை மேடம் சாப்பிட்டால் போதும் சாப், உங்களுக்கு ஒரு வாரத்திற்கு அவங்க பாட்டுலருந்து நிவாரணம் கிடைக்கும்ன்னு, நிஜம் தான். நாளைக்கு அவனுக்கு சரவண பவன்ல லஞ்ச் ஸ்பொன்சர் பண்ணிட வேண்டியதுதான்."

"கிர்கிர்கிர்கிர்கிர்கிர்கிர்.......!"

வியாழன், அக்டோபர் 24, 2013

வோய் திஸ் மச் நாய்ஸ் கேர்ள்ஸ்...!?

இன்னிக்கு இதுங்களை ஸ்கூல்க்கு கொண்டுவிடும் பணி என்னிடம் வந்துவிட்டது. மாடியில் இருந்து இறங்கும்போதே கிழே காத்திருந்தது அது. "ஹாய் வோயட்டி !" என்றபடியே இறங்கினார்கள். அதுவும் இவர்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கி வால் வாசல் கதவில் "டப், டப் " என்று அடித்து சத்தம் கேட்கும் படி வேகமாக ஆட்டியது.

"அக்காவோடல்லாம் ஸ்கூல்லுக்கு வரியாடா ?"

"ரொம்ப முக்கியம் நாய்க்கு படிப்பு." (மனதிற்குள் நொந்து கொண்டேன்.)

ொஞ்ச ஆரம்பித்தார்கள். அதுவும் தன் பெரிய உடம்பை ஆட்டி விளையாடியது. வெள்ளையாய்,பெரிசாய் இருப்பதால் "ஐராவதம்" என்று பேர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

"சரி,சரி, வாங்கோ, டைம் ஆச்சு !"

வீட்டு கேட்டை தாண்டினோம். வெள்ளையும்,பழுப்புமாய் ஒன்று தெருவில் வந்து கொண்டிருந்தது.

"அம்மா ! இது எங்க பிரெண்டும்மா !"

"அது சரி, வோயட்டி தம்பி, இது பிரெண்ட்டா?" (மனசுக்குள்ளயே)

அடுத்து அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

"போடி என்ன இருந்தாலும் "குட்டு (goodu)" தான் ரொம்ப சமத்து என்மேல ரெண்டு காலையும் போட்டுண்டு எப்படி ஏறி நிப்பான் தெரியுமா?"

"இல்ல "மிஸ்க்கு (mishkku)" தான் சமத்து நம்ம பர்மிஷன் இல்லாம நக்கவே நக்காது."

"goodu, புசு,புசு ன்னு சிங்க குட்டி மாதிரி இருக்கான் பார்த்தியா."

"ஏன் mishkku வும் தான்."

ரெண்டும் தெரு முனையில் இருக்கும் வீட்டில் இருக்கும் ரெண்டு கோல்டன் ரெட்ரிவர் வகை நாய்கள்.

"ரெக்ஸ் அன்னிக்கு என்ன பார்த்து எப்படி வாலாட்டினான் தெரியுமாம்மா!?"

"எனக்கிட்ட வாலாட்டி இருந்தா அப்போ தெரிஞ்சிருக்கும் அதுக்கு." (கறுவிக்கொண்டேன், இதுவும் மனசுக்குள்ளயே தான்)

தெருமுனை தாண்டினோம். ஒரு வீட்டில் இருந்து "குக்வக்,குக்வக்" என்று ஒரு பொமரேனியன் செல்லமாக கத்தியது.

"அம்மா, அதுதாம்மா "லக்கி" ரொம்ப சமத்து எங்க பிரெண்ட்."

அடுத்ததாக எதாவது ஒரு பக்கியை அறிமுகபடுத்துவார்களோ என்று பயமாக இருந்தது.

ஒருவழியாய் ஸ்கூலில் விட்டு விட்டு வந்து தலைவரிடம் கேட்டேன் "ஏம்ப்பா, நம்ம பொண்ணுங்களுக்கு யாரும் மனுஷ பிரெண்ட்ஸ்யே இல்லியோ...!?"

ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

மறக்க முடியாத ஜோக்குகள்

படித்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் என்னால் மறக்க முடியாத சில நகைச்சுவை துணுக்குகள் இங்கே. இவற்றை எங்கே,எப்போது படித்தேன் என்பது நினைவில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

மந்திரி : மன்னா ! இப்போது அந்தபுரத்திற்கு போகாதீர்கள், மகாராணியார் தங்கள் மேல் மிகவும் கோபமாக இருக்கிறார்.

மன்னர் : எப்படி சொல்கிறீர்கள் ?

மந்திரி : கையில் உள்ள கத்தியால் பழம் ஒன்றை நறுக்கி கொண்டே,"உன்னைத்தான் நான் அரிவேன், மன்னவனை யார் அரிவார்...?" என்று பாடிகொண்டிருக்கிறார் மகாராஜா !

-------------------------------------------------------------------------------------------------------------
பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :

டாக்டர் (பைத்தியத்திடம்)  : என்ன எழுதற ?

பைத்தியம் : லெட்டர்.

டாக்டர் : யாருக்கு?

பைத்தியம் : எனக்கு தான்.

டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?

பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு  தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.

(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))

-------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் : அந்தாளை ஏன் எல்லோரும் சேர்ந்து அடிக்கிறாங்க ?

மற்றொருவர் : ஜோதிடர்கள் மாநாட்டில் பாட கூப்பிட்டால்,
"நடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று பாடி இருக்கிறார், பின்ன அடிக்கமாட்டங்களா !?

-------------------------------------------------------------------------------------------------------------

மருமகள் : நான் என் குழந்தைகளுக்கு எல்லா சாப்பாடும் நான் ஸ்டிக்ல்ல தான் செஞ்சு தரேன்.

மாமியார் : அதான் உன் குழந்தைகள் யாரோடும் ஒட்டவே மாட்டேன்கறதுகளா !?

------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், ஜூன் 07, 2012

என் தலயின் தலையெழுத்து

அம்பது ரூபாய் பொருளை "பார்டி நைன் ருபீஸ் பிப்டி பைஸ்னா தாங்க !" என்று பேரம் பேசி வாங்கியதையே பெருமையாக நினைக்கும் சென்னை நகரத்து அப்பாவி யுவதிக்கும், அதே அம்பது ரூபாய் பொருளை அடித்து பேரம் பேசி ஐந்து ரூபாய்க்கு வாங்கும் கிராமத்து சாமர்த்தியசாலி இளைஞனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டதை விதியின் விளையாட்டு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது...!

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று இழுக்கும் என்ற அறிவியல் விதிகேற்ப நானும் என் தலயும் சேர்ந்துவிட்டோம்.


ஆனாலும், அவரது தன்னம்பிக்கை அலாதியானது. என்னை மாதிரி ஒரு செலவாளியையும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற அவரது உறுதியான நம்பிக்கையை என்னவென்று சொல்வது. 

நான் செய்தாலே அது அனாவசிய செலவாகத்தான் இருக்கும் என்பது அவரது திடமான எண்ணம். "இப்போதெல்லாம் நான் அப்படி இல்லை திருந்திவிட்டேன்." என்று நானே சொல்லியும் ஒரு பயனும் இல்லை.

"நகை வாங்கினால் கல் வைத்த நகை வாங்க கூடாது அதை திரும்ப போட்டால் நிறைய நஷ்டம் வரும்." என்று சொல்லி என் கல் நகை அணியும் ஆசையில் கல்லை தூக்கி போட்டு விடுவார்.

ஒரு முறை என் தங்கையிடம், "அத்திம்பேருக்கு கல் நகையே பிடிக்காது, அத போட்டா பாதி கூட தேராதும்பார்." என்று நான் சொல்லவும் அவளோ அப்பாவியாக "நகையை போட்டுண்டா ஏன் தேறாது ?" என்று புரியாமல் விழிக்க. நான் "இப்படி போட்டுண்டா இல்ல (கழுத்தை சுற்றி காண்பித்து ) இப்படி போட்டா" என்று துர எறிவது போல் சைகை காட்டவும் "ஐயோ ! வாங்கும் போதே யாராவது போடறத பத்தி யோசிப்பாளா ?" என்று அதிர்ச்சியாகி விட்டாள் . 

காஸ் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாங்கிய ஒரு காஸ் அடுப்பு. அதை தூக்கி தினமும் தேய்க்கும் எனக்கு வெய்ட் லிப்டிங்கில் தங்க பதக்கமே கொடுக்க வேண்டும். அதை மாற்றி தரசொல்லி நானும் தர்ணா போராட்டமெல்லாம் நடத்தியாகிவிட்டது.

ஒரு கால் உடைந்து ஒரு பக்கமாய் குடைசாய்ந்து இருக்கும் ஒரு எலெக்ட்ரிக் ரைஸ்குக்கர். குழந்தைகளின் புழுக்கை பென்சில்களை அதற்கு அண்ட கொடுத்துத்தான் அதில் சாதமே சமைக்க வேண்டும். 

இதையெல்லாம் மாற்றி தர சொன்னால் அது அனாவசிய செலவாம் . "ஏன் ? வெடிக்காம,வடிக்கரதொல்யோ ? அது போறாதா ? " ன்னு வேற எடக்கா ஒரு கேள்வி.

கடைசியில் ஊரிலிருந்து வந்த அவரின் ஒன்று விட்ட அக்கா, ஒன்று விட்ட தம்பியின் மனைவி எல்லோரும் "எப்படி இதுல சமைக்கிறேங்க !?" என்று கேட்க ஆரம்பிக்கவும், "சரி இப்படியே விட்டா இதுவே இவளோட சாதனையா ஆனாலும் ஆகிடும்ன்னு", பயந்து புதுசா காஸ் அடுப்பும்,ரைஸ் குக்கரும் வாங்கறதுக்கு ஒத்துகிட்டார்.

முதல்ல விவேக்ஸ் தான் போனோம். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் அங்கே இருந்த எல்லா டிவிலையும், "வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு" என்று பாட ஆரம்பித்து விட்டது.

"ஏம்ப்பா, பொண்ணுங்க காதல் வேண்டாம்ன்னா ,பின்ன வேற யார காதலிப்பாங்க..!?" என்று அப்பாவியாய் டௌட் கேட்ட என்னை ஒரு முறை முறைத்து விட்டு, "ம்ம்ம்ம்.... அந்த பாட்டு உனக்கில்ல எனக்கு", என்றார் கோபமாக.

அங்கே ரைஸ் குக்கரை செலக்ட் செய்து கொடுத்து விட்டு நான் பராக் பார்க்க போய்விட்டேன். அவரிடம் மாட்டிகொண்ட சேல்ஸ் லேடி பாவம். கையில் துண்டு போட்டு பேரம் பேசாத குறையாய் நன்றாக கல்லில் நார் உரித்து கொண்டிருந்தார்.

பின்னர் எல்லாம் முடிந்து எடுத்தாரே அந்த கிப்ட் கூப்பனை,பாவம் அந்தம்மா. என்னிடம் வேறு இரகசியமாக "நாம இந்த கடைக்கு ஏன் வந்தோம்கிற விஷயம் இப்பத்தான் அந்தம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் இல்ல..!?" என்று வேறு சொல்லி சிரிக்கிறார்.

அடுத்தது, தாம்பரம் சரவணாஸ் போனோம். இங்கு காஸ் அடுப்பு வாங்க. ப்ரெஸ்டிஜ் அடுப்பு நன்றாக இருந்தது. ஆரம்பித்து விட்டார் "அது காஸ்ட்லி
வேற வாங்கிக்கோ" என்று ஒரே தொனப்பல்.

"மனைவிய ரொம்ப நேசிக்கிறவங்க ப்ரெஸ்டிஜ் வேணாமுன்னு சொல்ல மாட்டாங்க" இந்த விளம்பரத்த நீங்க பார்த்ததில்ல....?

"நான் நேசிக்கலடி, எனக்கு ப்ரெஸ்டிஜ் வேணாம்."

"என்ன சொன்னீங்க....!?" (கர்ர்ர்ரர்ர்ர்.....)

"ஏய் ! கோவபடாதப்பா ரெண்டு பர்னர் இருக்கிறது வாங்கிக்கோ போரும், மூணு பர்னர் அடுப்புக்கும் ரெண்டு பர்னர் அடுப்புக்கும் ஆயிரம் ரூபாய் வித்தியாசம் வருது, ஒரு பர்னருக்கு ஆயிரம் ரூபாயா...! :((" என்று கெஞ்சி எல்லாம் பார்த்தார்.


"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா" என்று கேட்கும் கவுண்டமணி போல் "மூணு பர்னரே தான் வேணுமா,"ன்னு எல்லாம் கேட்டு பார்த்தார்.


"நான் என்ன அடுப்பு மேல நின்னுண்டு டான்சா ஆடபோறேன், உங்களுக்கு சமைச்சு போடத்தானே கேட்கிறேன். மூணு பர்னர் அடுப்பும், ரைஸ் குக்கரும் இருந்தா ஸ்கூல் திறந்த உடன் ரொம்ப உபயோகமா இருக்கும்." என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன்.



நான் சண்டித்தனமாக மண்டையை ஆட்டுவதை பார்த்த அந்த சேல்ஸ் மேனுக்கு மனசுக்குள் ஒரே வானவேடிக்கை தான். "ஹையா ! இந்தம்மா புடிவாதம் புடிக்க ஆரம்பிசிடிச்சு விலை எப்படி இருந்தாலும் இந்த ஆளு வாங்கித்தான் ஆகணும் என்று ஒரே குஷி. அது அவன் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.

விவேகில் பிடித்ததை எல்லாம் சரவணாசில் விட்ட எரிச்சலோடு, அழுது கொண்டே வாங்கி கொடுத்தார்.

வீடு வந்து சேர்ந்த போது என் உடன்பிறப்பு வீட்டு வாசலில் காத்திருந்தான். கைநிறைய சாமான்களோடும், முகம் நிறைய பூரிப்போடும் வந்த என்னை பார்த்த அவன் கண்களில், உலக கோப்பையை வென்று வந்த மகளை பார்க்கும் ஒரு தந்தையின் பெருமிதம் தெரிந்தது.

"ஐ..அத்திம்பேர் உனக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்திருக்காரே அக்கா வெரி குட்..!" என்றவனிடம்,

"உன் அக்காவ அங்கேயே விட்டுட்டு வந்திருப்பேன், ஆனா சொல்லமுடியாது, அங்கிருந்து கால் டாக்ஸி புடிச்சு வந்திட்டு, அதுக்கும் ஐந்நூறு ரூபாய் குடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவா, அப்புறம் அதையும் நான் தானே அழணும்னு தான் கதறி அழுதுகிட்டே எல்லாத்தையும் கேட்ட மாதிரியே வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்துட்டேன்." என்றவரை பார்க்க பரிதாபமாக தான் இருந்தது.

பின் குறிப்பு : காஸ் அடுப்பும், எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரும் நன்றாக வேலை செய்கிறது.

படங்கள் உதவி : google.

வியாழன், ஜனவரி 12, 2012

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கான பதிவு)


"இது சனி பெயர்ச்சியா தானே இருக்க முடியும் !? எப்படி ராகு-கேது பெயர்ச்சியாச்சு!?"ன்னு நீங்க யோசிக்கலாம். வாஸ்தவம் தான் இந்த க்ரஹமும் சனி அத்தனைக்கு பொல்லாதது தான். ஆனால் சனிக்கு மகரம், கும்பம்னு இரண்டு சொந்த வீடுங்க இருக்கே. இந்த க்ரஹதுக்கு சொந்தமா ஒரு வீடும் கிடையாது. அது மட்டுமில்லாம இந்த கிரஹத்தோட ஜோடி கிரஹமும் இதுவும் எப்பவும் எதிர் எதிர் திசையில தான் இருக்கும்,யோசிக்கும்,செய்யும். அதனால இந்த கிரஹத்த ராகுனும் இதன் ஜோடி கிரஹத்த கேதுனும் வச்சிக்கலாம்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியானது இந்த மாச கடைசில நிகழ போகிறது. ரொம்ப வருசத்துக்கு பிறகு நடக்கிற ஒரு அதிசய வானவியல் நிகழ்வுங்கிறதால இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பலன்கள் : இந்த கிரக  பெயர்ச்சியினால பதிவுலகத்துக்கு மகத்தான நற்பலன்கள் ஏற்பட போகின்றது. எப்படியும் இந்த கிரகம் அடுத்த வீட்டுக்கு போய் அந்த பலன்களை தரத்துக்கு ஒரு மாசமாவது ஆகுமே! பின்ன, போன் கனெக்சன் மாத்தி நெட் கனெக்சன் திரும்பவந்து, அங்க சாமான்களை எல்லாம் அரேஞ்சு பண்ணி செட்டில் ஆகிட்டு அப்புறமா தானே மற்றவர்களை படுத்துவதை பற்றி யோசிக்க முடியும். ஆக, இந்த பெயர்ச்சியினால் பதிவுலக மக்கள் அனைவருக்கும்  மொக்கை போஸ்டுகளில் இருந்தும். ரம்ப கமெண்ட்ஸ்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில் சொல்ல போனால் இந்த பெயர்ச்சியால் இந்த கிரகம் தான் பாடாய் பட போகிறது. 

இந்த கிரகம் போகிற புது ராசியின் பக்கத்துக்கு ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கிரகத்தின் உப கிரகங்கள் இந்த கிரகத்தை விட பொல்லாதவை, அதிக வீரியமுள்ளவை. அவை எப்போதும் தான் இருக்கும் வீட்டில் இருந்து பக்கத்துக்கு வீடுகளை பார்க்கும் தன்மை உடையவை ஆதலால் கூடுதல் எச்சரிக்கை அவசியமாகிறது.

வக்கிர காலம் : இந்த அறிவிப்பு வெளியான உடனே கிரக பெயர்ச்சி ஏற்பட்டு விடாது. எனவே, அவ்வப்போது இந்த கிரகம் வக்கிரமாகி மீண்டும் பதிவுலகை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரம் : இந்த கிரகத்தை புகழ்ந்து தினமும் ஆயிரத்தெட்டு கமெண்டுகளால் அர்ச்சித்தால் கிரக தோஷம் நீங்கி அளவற்ற நற்பலன்களை பெறலாம்.


பின் குறிப்பு : ஹி....ஹி.....ஹி... வீடு மாத்த போறோம். அதுக்குதான் இந்த பதிவு.


அனைவருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்