செவ்வாய், மே 08, 2012

சித்தி............................!


"மஞ்சுளா மேடம்!, பாப்பா யாரு?"

"என்  பொண்ணு தான் சார்!"

"மஞ்சுளா மேடத்துக்கு இவ்வளவு பெரிய பொண்ணா !?, எங்களுக்கு தெரியவே தெரியாதே !"

(வெட்க சிரிப்புடன்) "அக்கா பொண்ணு சார்!"

"அதானே பார்த்தேன், மேடத்துக்கு ரெண்டும் பையன் தானேன்னு யோச்சிச்சேன்!"

சித்தி  என்னை அவள் அலுவலகத்திற்கு முதன்முதலில் அழைத்து சென்ற போது  நடந்த உரையாடல் தான் மேலே சொல்லப்பட்டது.
 
-------------------------------------------------------------------------------------------------------------

"அம்மா கையை புடிச்சிக்கோ ! அம்மா கையை புடிச்சிக்கோ !" 

சாலையை கடக்கும் போது சித்தி சொல்ல, அம்மா எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்து,

ஓ.........! அம்மா என்றது தன்னை தானா! என்று தெளிந்தது இன்று நடந்தது போல் இருக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ஊரே வீட்டில் இருந்தாலும் கோடை விடுமுறையில் என்னையும் தம்பியையும் தன் வீட்டில் இரண்டு நாட்களாவது கொண்டுபோய் வைத்து கொள்ளும் அன்பு. மின்சார ரயிலை முதன் முதலில் நாங்கள் பார்த்தது தாம்பரத்தில் இருக்கும் அவள் ஒண்டி குடித்தன வீட்டிற்கு அழைத்து போகும் போது தான்.
-------------------------------------------------------------------------------------------------------------

""டேய் ! ஹரி அந்த மந்தர கோலை எடேண்டா !" (ரிமோட்)
"ஏய் ! காத்தாடியை சுத்த விடு" (பேன் போடு)
"யானைக்கு யாரு கோமணம் கட்டறது!?" (பூனைக்கு யாரு மணி கட்டறது என்பதன் வேறு வடிவம்)
 "எல்லாம் ஏதாவது உலத்தினால் எலி வாலையாவது  உலத்துமாம். "

சித்தியின்  பிரசித்தமான வசனங்களில் சில இவை.
-------------------------------------------------------------------------------------------------------------

கல்கி, ஆனந்த விகடன் படித்து விட்டு "ஏய் ! இந்த ஜோக்கை  பாரேன்டி." என்று என்னோடு பகிர்ந்து கொள்ளும் தோழமை.

சிறு வயதில் இருந்தே தொந்தரவு கொடுத்து வந்த ருமாடிக் நோயால் ஒரு காலை சாய்த்து சாய்த்து நடப்பதை என் தம்பி "சித்தி, நீ ஒரு லேடி  சனி பகவான்!" என்று கிண்டல் செய்தாலும் அதை புன்னகையோடு ஏற்று மகிழும் குழந்தை மனம்.
-------------------------------------------------------------------------------------------------------------

சித்தப்பாவை பணி நிமித்தம் நெடும் காலம் பிரிந்து இருந்தாலும்,அதனால் பல துன்பங்களை சந்தித்தாலும் அவரிடம் மாறாத காதல்.
  
சரியில்லாத காலோடு தினமும் நாம ராமாயணம் சொல்லி நூற்றி நான்கு நமஸ்காரங்கள் செய்யும் மனஉறுதி.

வாழ்த்த ஐம்பது ஆண்டுகளில் பெரும்பாலும் துன்பத்தையே பெற்றிருந்தாலும், "என்ன பாரு ! எவ்வளவு சௌக்கியமா இருக்கேன். பகவான்  என்னை நன்னா வச்சிருக்கார்!" என்று சொல்லும் நிறைந்த மனது.

-------------------------------------------------------------------------------------------------------------
கேன்சர்  சிகிச்சையால் தலை முடி அத்தனையும் கொட்டி போயிருக்க "இந்த வருஷம் எனக்கு இருப்பதைந்தவது கல்யாண நாள் வருது நான் விக் வச்சிண்டு அதுல நிறைய பூ வச்சிப்பேன்  என்ற உற்சாகம்.

-------------------------------------------------------------------------------------------------------------

சித்தி ! இதெல்லாம் நீ எனக்கு சொல்லாமல் சொல்லி கொடுத்த வாழ்க்கை  பாடங்கள். இப்போதெல்லாம் நான் கல்கி,ஆனந்த விகடன் படிப்பதில்லை.
படித்தாலும்,அவற்றை பகிர்ந்து கொள்ள உன்னை போல் யாருமில்லை.

பலருக்கும் என்னை உன் மகள் என்று தானே தெரியும்.
நீ என்னை நேசித்தது போலவே என் தலைவனையும் நேசித்தாய். 

நான் உன் அன்பிற்கு எதுவுமே செய்யவில்லையே!
நீ என்னிடம் எதுவுமே எதிர்பார்க்கவில்லையே !

சித்தி ! நான் உனக்கு என்ன செய்ய முடியும்? 

----------------------------------------------------------------------------------------------------------------------------

சித்தியின் அறுபதாவது பிறந்த நாள் மே பத்தாம் தேதி (May 10).
அவள் நினைவாகவே இந்த பதிவு.

திங்கள், ஏப்ரல் 23, 2012

ஆட்டோ கிராப் - பிரபலமாகாத ஒரு பிரபலத்துடன் ஓர் சந்திப்பு.

பேட்டியாளர் : வணக்கம்.

 பிரபலம் : வணக்கம்.

பேட்டியாளர் : நீங்கள் இன்னமும் பிரபலமாகவில்லையே உங்களை போய்                   பேட்டி காண சொல்லி உள்ளார்களே என்று எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.

பிரபலம் : அப்படியெல்லாம் சொல்லகூடாது. இந்த பேட்டிக்கு பின் நான் பிரபலமாகிவிட்டு போகிறேன்.

பேட்டியாளர் : சரி ! நீங்கள் பிறந்த இடம்.

பிரபலம் : சிங்கார சென்னையில் ஒரு பிரபலமான அரசு மருத்துவமனையில்.

பேட்டியாளர் : உங்கள் பிறந்த தேதி.

பிரபலம் : அது என்ன காந்தி ஜெயந்தியா ! அத நீங்க தெரிஞ்சுகிட்டு என்ன ஆக போகுது. 

 பேட்டியாளர் : உங்கள் உடன் பிறந்தவர்கள் ?

பிரபலம் : அவங்கல்லாம் என் கூட எங்க பிறந்தாங்க?, உஷாரா என்ன முன்னாடி விட்டுட்டு எல்லோரும் பின்னாடி இல்ல பிறந்தாங்க.

பேட்டியாளர் : உங்கள் கல்வி தகுதி

பிரபலம் : காமராஜர் என்ன படிச்சாரா. அவர் முதலமைச்சர் ஆகல?

பேட்டியாளர் : இந்த கேள்விக்கு இது பதில் இல்லையே?

பிரபலம் : பின்ன, நான் ரொம்ப படிக்கலைங்கிரத என் வாயாலையே சொல்லவைக்க நீங்க முயற்சி பண்ணினா...இப்படித்தான் பதில் வரும்.

பேட்டியாளர் : உங்கள் வாழ்க்கை துணையை பற்றி...?

பிரபலம் : எங்கிருந்தோ வந்தான்,இடை ஜாதி நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.

பேட்டியாளர் : உங்கள் பிள்ளைகள் பற்றி....?

பிரபலம் : இப்போதான் பரிட்சை எழுதி கிட்டிருக்கேன். இன்னும் பல வருடங்கள் கழித்து தான் தெரியும் நான் பாஸா, பெய்லா என்பது.

பேட்டியாளர் : உங்களுக்கு பிடித்த உணவு.

பிரபலம் : சைவ உணவு.

பேட்டியாளர் : நீங்கள் கவலைப்படுவது?

பிரபலம் : என் உடல் நிலை குறித்து.

பேட்டியாளர் : நீங்கள் கவலைப்படாதது?

பிரபலம் : என் நிதி நிலை குறித்து.

பேட்டியாளர் : நீங்கள் பெருமை படுவது ?

பிரபலம் : இந்திய பெண்ணாய் பிறந்ததற்கு.

பேட்டியாளர் : நீங்கள் வருத்த படுவது?

பிரபலம் : அதிகம் படிக்க முடியாமல் போனதற்கு.

பேட்டியாளர் : உங்கள் பலம்?

பிரபலம் : சலியாத மனம்.

பேட்டியாளர் : உங்கள் பலவீனம்?

பிரபலம் : சோம்பேறித்தனம்.

பேட்டியாளர் : உங்கள் சாதனை என்று நீங்கள் நம்புவது?

பிரபலம் : சுற்றி இருப்பவர்கள் என்னிடம் பல திறமைகள் இருப்பதாக நம்பும்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருப்பது.

பேட்டியாளர் : சமீபத்திய சாதனை?

பிரபலம் : மேல் சொன்ன விஷயத்தையே உலகளாவிய முறையில் செய்து கொண்டிருப்பது. 

 பேட்டியாளர் : உங்களுக்கு பிடித்த உடை?

பிரபலம் : என்னை இளமையாய் காட்ட கூடிய உடை(அதை இன்னமும் நான் கண்டுபிடிக்க வில்லை).

பேட்டியாளர் : இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : உங்களை யாரவது பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்காமல், உங்களை நீங்களே பாராட்டி உற்சாகபடுத்தி கொள்ளுங்கள்.

பேட்டியாளர் : பெரியவர்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : "உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல", என்று இளையவர்களை பார்த்து சொல்லும் முன் உங்களுக்கு அது இருக்கிறதா என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள். 

 பேட்டியாளர் : பெண்களுக்கு நீங்கள் சொல்வது ?

பிரபலம் : தன்னம்பிக்கைக்கும், கர்வத்திற்கும் வித்தியாசம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள். 

 பேட்டியாளர் : ஆண்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : பெண்கள் புத்திசாலிகளாய் இருப்பதை நினைத்து பயப்படாதீர்கள். நீங்கள் அவர்களை பயன்படுத்தி கொள்ளும் சாமர்த்தியசாலிகளாய் இருப்பதை நினைத்து சந்தோஷ படுங்கள். 

 பேட்டியாளர் : உங்கள் அடுத்த திட்டம்?

பிரபலம் : உருப்படியாய் எதாவது எழுதி கிழிக்க வேண்டும்.

பேட்டியாளர் : உங்கள் நீண்ட கால திட்டம் ?

பிரபலம் : நாட்டிற்கு எதாவது உருப்படியாய் செய்ய வேண்டும்.

பேட்டியாளர் : இப்போது கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?

பிரபலம் : "உண்மையிலே நீங்கள் தான் கடவுளா?" என்று கேட்பேன். (பின்ன, என்னமாதிரி ஆசாமிங்களுக்கே காட்சி கொடுக்கிறார்ன்னா சந்தேகம் வராதா?)

பேட்டியாளர் : கடைசியாக ஒரு கேள்வி, நட்பு பற்றி உங்கள் கருத்து?

பிரபலம் : அது பயன் கருதாமல் வருவது,கலப்படம் இல்லாதது.

பேட்டியாளர் : உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி, 
பேட்டியளித்தமைக்கு மிக்க நன்றி.வணக்கம்.

பிரபலம் : இது ஒன்னும் பெரிய விஷயமில்ல, எப்பவுமே நான் இப்படித்தான் நேரத்தை வெட்டியா வீணாக்கிக்கிட்டு இருப்பேன்.

இந்த பிரபலம் வேறு யாருமல்ல, இந்த தளத்தின் ஆசிரியர் தான். இந்த தளம் தொடங்கி ஒரு வருடமாவதை(April 1 ஆம் தேதியோடு) கொண்டாடும் வகையில் இந்த உரையாடல் வெளியிடப்படுகிறது.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

வந்தேன் ! வந்தேன் ! மீண்டும் நானே வந்தேன் !

அப்பாடி ! ஒரு வழியா வீட்டை மாத்தி, பசங்க பரிட்சை முடிஞ்சு, தம்பி நிச்சயதார்த்தம் முடிஞ்சு சீக்கிரமாஆஆஆஆஆஆஆஆஆஆ வந்துட்டேன் இல்ல !? 

கடைசியா நான் எழுதின ஜோதிட பதிவு யாருக்குமே புரியலைன்னு நினைக்கிறேன்.தங்கமணி எழுதிய accounts கவிதை மாதிரி ஆகிவிட்டது. 

என் தம்பி கூட "என்ன ராகு,கேது பெயர்ச்சி அது இதுன்னு என்னமோ தத்து பித்துன்னு எழுதி வச்சிருக்க!?" என்று கடுமையாக விமர்சித்தான். 

பின்னர் நான் விளக்கி சொல்லிய பின்தான் அவனுக்கும் புரிந்தது. "அதனால இப்போ என்ன பண்ணபோற....?" என்று நீங்கள் பயத்தோடு கேட்பது புரிகிறது. ஆமாம், அதே தான், ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை எழுதலாம் என்று ஒரு எண்ணம்.

இதனால் என்னை ஒரு தேர்ந்த ஜோதிடர் என்று நீங்கள் எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். என் ஜோதிட அறிவு நான் படித்த ஜோதிட, ஆன்மீக இதழ் களில் இருந்து பெற்ற தகவல்களின் தொகுப்பே. நான் ஜோதிடத்தை பற்றி எழுதுவது என்பது, மருத்துவ கல்லூரி வாசலில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணி திடீரென்று கல்லூரியின்னுள் சென்று பாடம் நடத்துவது போல்தான்.

இருந்தாலும் அடிப்படையான விஷயங்களை யார்வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதால் தைரியமாக அடுத்த பதிவில் இருந்து துவங்கலாம் என்று இருக்கிறேன்.

ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அதை பார்த்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை போய் விடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஜோதிடத்தை சரியாக தெரிந்து கொள்ளாததே இதற்கு காரணமாகும்.

அதனால் அடுத்த பதிவில் உங்களுக்கு "கெரகம்" புடிக்கும் என்பதை இப்போதே கணித்து சொல்கிறேன்.

வியாழன், ஜனவரி 12, 2012

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கான பதிவு)


"இது சனி பெயர்ச்சியா தானே இருக்க முடியும் !? எப்படி ராகு-கேது பெயர்ச்சியாச்சு!?"ன்னு நீங்க யோசிக்கலாம். வாஸ்தவம் தான் இந்த க்ரஹமும் சனி அத்தனைக்கு பொல்லாதது தான். ஆனால் சனிக்கு மகரம், கும்பம்னு இரண்டு சொந்த வீடுங்க இருக்கே. இந்த க்ரஹதுக்கு சொந்தமா ஒரு வீடும் கிடையாது. அது மட்டுமில்லாம இந்த கிரஹத்தோட ஜோடி கிரஹமும் இதுவும் எப்பவும் எதிர் எதிர் திசையில தான் இருக்கும்,யோசிக்கும்,செய்யும். அதனால இந்த கிரஹத்த ராகுனும் இதன் ஜோடி கிரஹத்த கேதுனும் வச்சிக்கலாம்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியானது இந்த மாச கடைசில நிகழ போகிறது. ரொம்ப வருசத்துக்கு பிறகு நடக்கிற ஒரு அதிசய வானவியல் நிகழ்வுங்கிறதால இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பலன்கள் : இந்த கிரக  பெயர்ச்சியினால பதிவுலகத்துக்கு மகத்தான நற்பலன்கள் ஏற்பட போகின்றது. எப்படியும் இந்த கிரகம் அடுத்த வீட்டுக்கு போய் அந்த பலன்களை தரத்துக்கு ஒரு மாசமாவது ஆகுமே! பின்ன, போன் கனெக்சன் மாத்தி நெட் கனெக்சன் திரும்பவந்து, அங்க சாமான்களை எல்லாம் அரேஞ்சு பண்ணி செட்டில் ஆகிட்டு அப்புறமா தானே மற்றவர்களை படுத்துவதை பற்றி யோசிக்க முடியும். ஆக, இந்த பெயர்ச்சியினால் பதிவுலக மக்கள் அனைவருக்கும்  மொக்கை போஸ்டுகளில் இருந்தும். ரம்ப கமெண்ட்ஸ்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில் சொல்ல போனால் இந்த பெயர்ச்சியால் இந்த கிரகம் தான் பாடாய் பட போகிறது. 

இந்த கிரகம் போகிற புது ராசியின் பக்கத்துக்கு ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கிரகத்தின் உப கிரகங்கள் இந்த கிரகத்தை விட பொல்லாதவை, அதிக வீரியமுள்ளவை. அவை எப்போதும் தான் இருக்கும் வீட்டில் இருந்து பக்கத்துக்கு வீடுகளை பார்க்கும் தன்மை உடையவை ஆதலால் கூடுதல் எச்சரிக்கை அவசியமாகிறது.

வக்கிர காலம் : இந்த அறிவிப்பு வெளியான உடனே கிரக பெயர்ச்சி ஏற்பட்டு விடாது. எனவே, அவ்வப்போது இந்த கிரகம் வக்கிரமாகி மீண்டும் பதிவுலகை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரம் : இந்த கிரகத்தை புகழ்ந்து தினமும் ஆயிரத்தெட்டு கமெண்டுகளால் அர்ச்சித்தால் கிரக தோஷம் நீங்கி அளவற்ற நற்பலன்களை பெறலாம்.


பின் குறிப்பு : ஹி....ஹி.....ஹி... வீடு மாத்த போறோம். அதுக்குதான் இந்த பதிவு.


அனைவருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜனவரி 06, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

விஜி : ரமணியுடனான எனது நட்பு love marriage என்றால் விஜினுடனான நட்பு  ஒரு arranged marriage.  என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்த போது "தனியா அவ்வளவு தூரம் வரணும், கொஞ்சம் பார்த்துக்கோங்க மிஸ்!" என்று என் அம்மா புஷ்பா மிஸ்ஸிடம் சொல்ல, அவர்கள் பதிலுக்கு "இதோ இந்த பொண்ணு கூட அந்த ஏரியா லர்ந்து தான் வருது, உங்க பொண்ணை இவ கூட வர சொல்லுங்க." என்றார்.

அதோடு விஜியையும் கூப்பிட்டு, "இனிமே இந்த பொண்ணையும் உன் கூட கூட்டிகிட்டு போ என்ன?" என்றார்.

இப்படியாக, என் அம்மாவும், புஷ்பா மிஸ்ஸும் என்னை விஜியிடம் கை பிடித்து கொடுத்தார்கள். அன்று முதல் ஐந்து வருடங்கள் நானும் விஜியும் ஒன்றாகவே இருந்தோம்.

விஜி கட்டையான,குட்டையான,மாநிறமான ஆனால் நல்ல களையான முகம். ஒரு சாயலில் நடிகை ராதிகா போல் இருப்பாள். "நீ ராதிகா போல் இருக்கிறாய்." என்று யாரவது சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவாள்.

விஜி வறுமையிலேயே வாழ்ந்தவள். அதற்கு மேல் இங்கு எழுதுவது அவளை இழிவுபடுத்தியதாகி விடும். நாங்கள் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால், பதினோராம் வகுப்பிற்கு இருவரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்தோம்.

பள்ளி கடைசி நாளில் கட்டிபிடித்து அழுவது போன்ற எந்த விதமான உணர்வு பூர்வமான விஷயங்களும் இல்லாமல், இயல்பாகவே பிரிந்தோம்.

விஜி ரொம்ப அழுத்தமானவள். என் வீட்டிற்க்கு இது வரை ஒரே ஒரு முறைதான் வந்திருக்கிறாள். ஆனால்,நான் அடிக்கடி அவள் வீட்டிற்க்கு போவேன். இந்த மானம், ரோசமெல்லாம் நட்பில் கிடையாது.

பின்னர்,இருவரும் வேறு வேறு திசையில் போய் விட்ட போதும் நான் முடிந்த போதெல்லாம் அவள் வீட்டிற்க்கு போய் அவளுடன் தொடர்பில் இருப்பேன்.  வாழ்கையில் மிக பெரிய துயரங்களை சந்தித்தவள் அவள். அவற்றை தாண்டி எப்படி வாழவேண்டும் என்பதை நிகழ் காலத்தில் வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறாள்.

"விஜி, கல்யாணம் பண்ணிக்கோடீ!, நீ நல்லாஇருப்ப." என்று நான் கெஞ்சும் போதெல்லாம் "ப்ச், பார்க்கலாம், என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் நான் வேறு எதை பற்றியுமே யோசிக்கணும்."  என்று சொன்னவள், சொன்னபடியே உழைத்து வறுமையுடன் போராடி வெற்றி கண்டிருக்கிறாள். தன் தங்கைக்கு திருமணத்தை நல்ல விதமாக முடித்து வைத்து விட்டு தானும் ஒரு நல்லவரை பார்த்து திருமாணம் செய்து கொண்டிருக்கிறாள்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன் என் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு புகைப்படம் வந்தது. அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விஜியின் திருமண புகைப்படமே அது.

இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். விஜி ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்திருந்தாள். இன்றைய தினம் நான் அதை குறிப்பிட கூடாது என்றாலும் அவளில் தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் எல்லோரும் அறியும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இதை குறிப்பிட்டேன்.


இன்று மார்கழி மாதம் ரோகினி நக்ஷத்திரம் சார் பதிவாளரான ரமணிக்கும், சலியாத மன உறுதி கொண்ட விஜிக்கும் பிறந்தநாள். என் நட்புகளுக்கு நான் செய்யகூடியது எதாவது உண்டென்றால் அது அவர்கள் நல்வாழ்விற்க்காக இறைவனை வேண்டுவதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.


என் அருமை தோழிகளின் பிறந்த நாளுக்காகவே இந்த பதிவு.


                                                          சுபம்

செவ்வாய், ஜனவரி 03, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

ரமணி : ரமணியும் நானும் நட்பானது ஒரு சுவாரசியமான நிகழ்வு. என் மகள் படிக்கும் வகுப்பிலேயே அவர்கள் மகனும் படிக்கிறான். சில வருடங்களுக்கு முன் அவன் இந்த பள்ளியில் சேர்ந்த புதிதில், பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக ஒரு மரத்தடியில் காத்திருப்போம். நான் யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது ரமணி தானாகவே வந்து பழக்கமானார். அப்போது அவரை பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லை. ஆனால், சிறிது நாட்களிலேயே அவருக்கு ஒரு பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கு இரண்டு நாட்கள் தான் வேலை பார்த்தார். பின்னர், தாக்கு பிடிக்க முடியாமல் விட்டு விட்டார். ஆனால்,மீண்டும் மரத்தடி மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான் அவரை நம்மவர் என்று என்னை எண்ணவைத்தது. 

அந்த இரண்டு நாட்கள் பள்ளி அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட விதம் அலாதியான நகைச்சுவை நிறைந்தது. பின்னர் நாங்கள் இருவரும் இணைந்தாலே அந்த மரத்தடிக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடும். நாங்கள் இருவரும் பேசுவதை கேட்கவே அந்த மரத்தடியில் ஒரு கூட்டம் கூட ஆரம்பித்தது. அதில் சிலருக்கு பொறாமையும் ஏற்பட்டது. எங்களில் ஒருவர் வரவில்லை என்றாலும், "என்ன உங்க பார்ட்னர் வரலையா?", என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே தொடர்ந்திருந்தால் அந்த மரத்திற்கு எங்கள் பெயரையே வைத்திருப்பார்கள். ஆனால், அதற்குள் ரமணிக்கு வேறு ஒரு பள்ளியில் வேலை கிடைத்து விட்டதால் எங்கள் நட்பில் சிறு இடைவெளி ஏற்பட்டது. 

அவர் தமிழில் எம்.பில். பட்டம் பெற்றவர் என்பதால் உயர் நிலை வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியை ஆனார். இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபின் இப்போது மீண்டும் வேலையை விட்டுவிட்டு என்னோடு தான் வெட்டியாக சுற்றிகொண்டிருக்கிறார்.

இப்போதும் அவர் பள்ளி அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் போது   உண்மையிலேயே அந்த பணியை அவர் எவ்வளவு நேசித்தார் என்பதை உணர முடிகிறது.

"அப்பா ! உங்களுக்கு அந்த வேலைல எவ்வளவு புதிய புதிய அனுபவங்கள் இல்லே ரமணி !?", என்று நான் கேட்டால், "அதுக்கு உங்களுக்கு தாங்க நன்றி சொல்லணும் நீங்க தானே அந்த விளம்பரத்த பார்த்து சொன்னிங்க", என்பார்.

"விளம்பரத்தை பார்த்து தானே சொன்னேன். வேலையே நானா பார்த்துவச்சேன்?" என்பேன்.

இப்போது பதிவெழுத ஆரம்பித்த பின் நாங்கள் சந்தித்து கொள்ளும் போதெல்லாம்  பதிவுலகம் பற்றித்தான் பேசுகிறோம். அவர் பதிவுகளை படிப்பதில்லை என்றாலும் நான் தினமும் நான் எழுதியதை, படித்ததை அவருடன் பகிர்ந்து கொண்டு விடுகிறேன். எனவே, பதிவுலகில் எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரையும் ரமணிக்கும் தெரியும்.

சென்ற வாரத்தில் ஒருநாள் ரமணிக்கு போன் செய்தேன். "ஏங்க, sub-registrar க்கு தமிழ்ல்ல என்னன்னு சொல்லுவாங்க?"

அவரும் நான் ஏதோ தமிழில் சந்தேகம் கேட்கிறேன் என்று எண்ணிக்கொண்டு "ம்...ம்...ம்...யோசிச்சு சொல்லறேங்க."

நான் உடனே,"சார்பதிவாளர் ன்னு வச்சிக்கலாமா?"

"ஆமாங்க, சார்பதிவாளர் தான் சரி!"

"சரி!, அப்படின்னா இன்னைலருந்து நீங்க சார்பதிவாளர் !"

"என்ன சொல்லறிங்க...!!!!"

"நான் பதிவிடுகிறேன் அதனால் நான் பதிவாளர், நீங்க என் மூலமா பதிவுகளை படிக்கிறீர்கள், கருத்துகளையும் சொல்கிறீர்கள் அதனால் நீங்கள் சார்பதிவாளர்."

"!!!!!!!!!" 

                                                                                                                                       .....தொடரும் 

திங்கள், டிசம்பர் 26, 2011

சித்தமெல்லாம் எனக்கு சித்தா மயமே !

கொஞ்ச வருடங்களாகவே முதுகு வலியும் வலது கை வலியும் என்னை ஒரு கைதியாகவே மாற்றி விட்டிருகின்றன. இதில் பயபடுத்தும் விஷயம் என்னவென்றால், இரவில் தூங்கும்போது கைகள் மரத்து சில்லிட்டு போய் விடும். கொஞ்ச நேரம் நின்றாலும் கால்கள் வலி பின்னி எடுத்து விடும். படுத்தால் மரத்து போய் விடும். இப்படியே வலிகளோடு என் வாழ்க்கை இணைக்கப்பட்டுவிட்டது.

"இவ்வளவு சொல்றியே அதற்கு என்ன சிகிச்சை எடுத்தாய்?" என்கிறீர்களா. நியாயமான கேள்வி தான். ஆனால், நான் பெரிசாய் சிகிச்சை என எதுவும் முயற்சிக்கவே இல்லை (அப்படி ஒத்துக்கோ !).

அதற்கு காரணம் சலித்து போன ஆஸ்புத்திரி வாசமே (அது சரி யாருக்கு தான் ஹாஸ்பிடல் போக பிடிக்கும்).

இந்நிலையில் தான் இங்கு பலரும் தாம்பரத்தில் உள்ள  தேசிய சித்த மருத்துவ கழகத்தில் நல்ல சிகிச்சை தருவதாகவும் தாங்கள்  அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.

அப்படி ஒரு நாள் என் தோழி ரமணியிடம் பேசி கொண்டிருந்த போது அவர்கள் கணவரும் அவரும் கூட அங்கு சிகிச்சை பெறுவதாகவும், நல்ல முறையில் குணம் தெரிவதாகவும் கூறினார்கள்.

சரி, நாமும் போய் பார்க்கலாமே என்று தோன்ற, ஒரு நாள் ரமணியுடன் அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும் போதே நல்ல மூலிகை மணம். அதை சுவாசித்தாலே பாதி நோய் குணமாகி விடும். அரசாங்க மருத்துவமனையா அது !? சுத்தம்,சுத்தம் எங்கும் பளிச்!...பளிச் !

முதல் முதலாய் பதிவு செய்து கொள்ள ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள். 

அறைகளின் பெயர்கள் எல்லாம் அழகு தமிழில் மருத்துவம்,நோய் நாடல் இப்படி.

உள்ளே ஒவ்வொரு அறையிலும் நிறைய மருத்துவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் உள்ளே நுழைந்து ஒரு அழகான, சற்று மாநிறமான, கிராமத்து களை (சித்த மருத்துவத்திற்கு பொருத்தமான முகம்) உள்ள இளம் பெண் டாக்டரை தெரிவு செய்து கொண்டேன்.

அன்பாக ,கனிவாக விசாரிக்கிறார்கள். மிகமுக்கியமாக நல்ல தமிழில் பேசுகிறார்கள்.

என்னம்மா தொந்தரவு?  
இனிப்பு அதிகமா சாப்பிடாதீங்க ! 
இதை சாப்பிடுங்க சுவையா இருக்கும்! 

ஐந்து நாட்களுக்கான மருந்து மட்டும் தான் தருகிறார்கள்.  அதிகமாக கொடுத்தால் சிலர் அவற்றை வெளியில் விற்று விடுகிறார்களாம். ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் போக வேண்டும். எனக்கு அந்த மருந்து ஒத்து கொள்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த மருத்துவ மனை எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் நிச்சயம் குணமாகும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

நான் இந்த பதிவின் தலைப்பை சொன்னவுடன் ரமணி "என்னங்க இன்னும் ஒரு வேளை மருந்து கூட நீங்க சாப்பிடலை அதற்குள் சித்த மருந்திற்கு இவ்வளவு பெரிய விசிறி ஆகிடீங்களே!?" என்றார்.

"மற்ற மருந்துகளை காட்டிலும் இதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது, காரணம் இது இறை நம்பிக்கையோடு தொடர்புடையது என்பது மட்டுமல்ல இங்கு இருக்கும் சுத்தம், இவர்களின் அன்பான கவனிப்பு ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கை தான்." என்றேன்.

ரமணியும் அதை ஆமோதித்தார்.

எனக்கு அவர்கள் கொடுத்த குறிப்புக்கள் சிலவற்றை உங்களுக்கு தருகிறேன், உபயோகமாக இருக்கும்.

*சர்க்கரையில் உள்ள வேதி பொருட்கள், நம் எலும்புகளை வலுவிழக்க செய்து விடுமாம். வருட கணக்காய் சர்க்கரை சாப்பிட்டால் முதுகு வலி,கழுத்து வலி எல்லாம் நிச்சயம். எனவே, சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி உபயோகியுங்கள்.

* முளை கட்டிய பயறு தினமும் ஒரு கை பிடி அளவு கட்டாயம் சாப்பிட வேண்டும்.

* புளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்.

* கணினியில் வேலை செய்தால், வேலை முடிந்து எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதுகு வலி, கழுத்து வலிக்காக சிகிச்சை பெறுகிறவர்கள், கட்டாயம் இந்த குறிப்புகளையும் முயன்று பாருங்கள்.

பின் குறிப்பு : சமீபத்தில் bio-technology professor  ஒருவரை சந்தித்தேன். அவர் நம் பாரதத்தில் உள்ளது போல் bio-diversity உலகில் வேறு எங்குமே இல்லை என்றார்.  எத்தனையோ விதமான தாவரங்கள், உயரினங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு தேவையான வேலையை செய்து கொண்டிருகின்றன என்றார். நம் தேசத்தின் பொக்கிஷங்களை நாம் மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். சித்த மருத்துவமும் அப்படியே.