புதன், ஜூலை 04, 2012

இரு நல்லவர்கள்

சென்ற பதிவில் நான் எழுதி இருந்த கருத்துக்களை சற்றே விரிவாக இந்த பதிவில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

என் இரு தோழியர்களுக்குள் பெரிய ஈகோ பிரச்சனை. என்னை பொறுத்தவரை இருவரும் நல்லவர்களே.அவர்கள் எனக்கு தோழியரே தவிர அவர்களுக்குள் தோழமை இல்லை. இருவரும் என்னிடம் தனியாக கேட்ட ஒரே கேள்வி , "எப்படி தான் அவங்க கூட பிரெண்டா இருக்கீங்களோ ?"

நான் மனதிற்குள் நினைத்துகொண்டேன் ," எல்லாம், உங்ககூட பழகற அனுபவம் தான்." சொல்ல முடியுமா..? உண்மையை சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும் உறவு பாதிக்கபடும். "அப்படி பட்டவங்க கூட பிரெண்ட்ஷிப் வச்சிக்கணும்னு என்னங்க அவசியம் எவ்வளவு திமிரா பேசறாங்க பாருங்க. உங்க குழந்தைகளை நீங்க வளர்க்கறத பற்றி விமர்சனம் செய்றாங்க, அவங்க கிட்ட ஆயிரம் குறை இருக்கு அத நீங்க சொன்னா என்னாகும் ?" இது ஒரு தோழியின் கருத்து.

உண்மை தான், அவர்கள் யார் என்ன சொன்னாலும் கேட்காத வகையை சார்ந்தவர்கள். நீங்கள் அமிர்தத்தையே கொடுத்தாலும் குடிக்கமாட்டார்கள். அவர்களே கண்டுபிடித்த விஷத்தை தான் குடிப்பார்கள், நம்மையும் அந்த விஷத்தையே குடிக்கச்சொல்லி நிர்பந்திப்பார்கள்.

சரி, இதற்கு என்ன செய்யலாம்?

1. அவர்கள் நாம் என்ன சொன்னாலும் ஏற்றுகொள்ள போவதில்லை என்னும் போது அவர்களுக்கு ஆலோசனை சொல்வதை நிறுத்துவது தான் நல்லது.

2. நாம் நம் கருத்தை சொன்னால் விவாதம் தான் வளரும். விவாதங்கள் என்றுமே முற்றுபெற்றதும் இல்லை. அவை நல்ல முடிவுகளை தந்ததும் இல்லை. எனவே, விவாதிக்காமல் அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டு விடுவது தான் நல்லது. பட்டு தெரிந்து கொள்ளட்டும்.

3. அவர்கள் உறவு நமக்கு தேவையா? ஆம், தேவைதான் அவர்களிடமும் பல நல்ல குணங்கள் நிறைந்திருக்கின்றன. நம்மிடமும் பல குறைகள் இருக்கின்றன. அதோடு, இந்த குணம் கொண்டவர்கள் தான் நம்மை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் அவர்கள் குறைக்காக நாம் விலக்கிக்கொண்டே போனால் நமக்கு யார்தான் மிஞ்சுவார்கள்?

4. அதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கவேண்டுமா? ஆம், கேட்கத்தான் வேண்டும். ஆனால், செயல்படுத்த வேண்டியதில்லை. இந்த குணம் உள்ளவர்களிடம் நீங்கள் அவர்கள் சொல்லும்போது சரியென்று கேட்டுகொண்டாலே போதும், அவர்கள் திருப்தியாகி விடுவார்கள். அதையும் மீறி அவர்கள் நம்மை நிர்பந்தித்தால் அதை நாசூக்காக மறுத்துவிட வேண்டும்.

5. இப்படி எதற்குமே சரிப்பட்டு வரவில்லை என்றால் அவர்கள் உறவை விலக்கிவிடலாம் .ஆனால் ,அப்போதும் அது எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்து கொள்ளக்கூடிய வகையில் இருக்கவேண்டும். பணம், பதவி எல்லாவற்றையும் விட மனித உறவுகள் விலை மதிக்க முடியாதவை அவற்றை க்ஷண நேரத்தில் முறித்து கொள்வது நல்லதல்ல.

6. அவர்கள் சொல்வதையும், செய்வதையும் நாம் நகைச்சுவை உணர்வோடு ரசிக்க கற்றுகொண்டால், உறவும் சீராக இருக்கும். அவ்வப்போது நமக்கு நல்ல பதிவுகளும் கிடைக்கும்.


ஏதோ ஒரு துணிக்கடையில் (போத்திஸ் என்று நினைக்கிறேன்.) துணி வாங்கும் போது "உறவுகள் மேம்பட" என்று சில ஆலோசனைகள் பிரிண்ட் செய்த அட்டைகள் தருவார்கள். நாமும் அதை பெருமையாக நம் வீட்டில் கதவிலும், இன்னும் பல இடங்களிலும் ஒட்டி வைத்திருப்போம். அந்த அட்டையில் உள்ளவற்றை நாம் வாழ்நாளில் பின்பற்றி பார்த்தாலே போதும் நமக்கு இந்த உலகமே உறவாகி விடும்.

ஒ..கே. இப்ப ஒரு ஜோக். நேற்று, ஒரு மாறுவேட போட்டிக்கு குழந்தைகளை அழைத்து சென்றிருந்தேன் (இதை பற்றிய பதிவை விரைவில் எழுதுகிறேன்.) 

அங்கே கர்ணன் வேடம் போட்ட குழந்தை "நான் தான் கர்ணன்! என் தாய் குந்தி !" என்று வசனம் பேசியவுடன், பெரியவள் என்னிடம் அம்மா !, "குந்தி தின்றால் குன்றும் மாளும் ன்னு பழமொழி சொல்லி கொடுத்தாங்களே எங்க மிஸ், குந்தி அவ்வளவா சாப்பிடுவாங்க? அதனாலதான் அவங்க மகனான பீமனும் நிறைய சாப்பிடறவரா பொறந்துட்டாரா...?" :)))

5 கருத்துகள்:

VijiParthiban சொன்னது…

மிகவும் அருமை .... அற்புதமான உண்மை... உறவுகள் மேம்படவேண்டும் என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு.
குழந்தைகள் கேட்ட கேள்வி அருமை.

Kavinaya சொன்னது…

இதற்கெல்லாம் முக்கியமான காரணம், நமக்கு வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கண்டு கொள்ளாமல் விட வேண்டும் என்ற தெளிவு இல்லாதுதான். சிந்திக்க வைத்த பதிவிற்கு நன்றி!

சுசி சொன்னது…

@ சே.குமார் : நன்றி சார் ! வருகைக்கும், கருத்துக்கும்.

@ விஜி பார்த்திபன் : நன்றி மேடம் !, தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

@ கவிநயா : சரியா சொன்னீங்க ! எது முக்கியம் என்கிற தெளிவு இல்லாததே இதற்கு காரணம்.

எல் கே சொன்னது…

good qtn by yoour junior