கல்யாணம்
நிச்சயமாகி இருந்த போது, என் அக்கா (பெரியப்பா பெண்) “சினேகிதியே
படம் போகணும் துணைக்கு வரியாடீ?”ன்னு கேட்டா, இந்த விஷயத்துல எல்லாம் யாருக்கும் நான் இல்லன்னே சொல்லமாட்டேன். சரின்னுட்டேன். அக்கா சொன்னா, “நான் டிக்கெட் வாங்கிண்டு உதயம் தியேட்டர்ல வெயிட் பண்ணறேன், நீ வந்துடு.” நானும் சரின்னுட்டேன். இப்போ ஆபீஸ்ல என்ன பொய் சொல்லறது?
ஒரு ஐடியா வந்துது.
எங்க பாஸ் கிட்ட் போயி, ”மாப்பிள்ளை வீட்டுக்காரங்க
ஏதோ கல்யாண விஷயமா பேச வராங்களாம் அப்படியே என்னையும் பார்க்கணும்ன்னு பிரியப்படறாங்களாம்”,ன்னு ஒரு டூப் உட்டுட்டு கிளம்பி படத்துக்கு போயிட்டேன். என் போறாத நேரம் அப்போதைய என் காதலர், அதான் எங்க தலைவர்
ஆபீஸுக்கு என்ன தேடிண்டு போயி நின்னிருக்கார்.
எங்க பாஸ்
வெள்ளந்தியா,”உங்க அம்மா,அக்கால்லாம் வீட்டுக்கு வராங்கன்னு மேடம்
அப்பவே கிளம்பிட்டாங்களே”ன்னு சொல்ல தலைவருக்கு செம பல்பு.
கல்யாணத்துக்கப்புறம்
கைதியாகி வீட்டு சிறையிலேயே கொஞ்ச வருஷம் போனதுக்கப்புறம் நான் ரொம்ப கெஞ்சி கேட்டு, யாருக்கும் தெரியாம ரொம்ப
ப்ளான் பண்ணி, ஒரு ”வெட்டிங் டே”க்கு “சண்டை கோழி” படத்துக்கு போக
டிக்கெட் வாங்கினோம். அதுவும் அந்த படத்துல வர, ”தாவணி போட்ட தீபாவளி…” பாட்டு அப்போ குட்டிபாப்பாவா இருந்த
என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தான் அந்த படத்துக்கு கூட்டிட்டு போகவே தலைவர்
சம்மதிச்சார்.
இந்த விஷயத்தை
நான் பெருமையா என் பொறந்த வீட்டுல சொல்ல அவ்வளவு தான். நாங்க பைக்ல தியேட்டருக்கு
கிளம்பினதுலர்ந்து ஒவ்வொரு பத்தடிக்கும் யாராவது ஒருத்தர் என் அம்மா, மாமா, அத்தை, அக்கா இப்படி ஒவ்வொருத்தரா
போன் பண்ண ஆரம்பிச்சாங்க.
“மாப்பிள்ளை கல்யாண நாள் வாழ்த்துகள்!”
இவர் உடனே, “ஹி…ஹி…நன்றி!”
அடுத்தது
அந்த பக்கத்திலிருந்து,”சினிமாவுக்கு போறீங்களாமே? வாழ்த்துகள்!”
இவர் “!?!?!?”
என் அக்கா
ஒருபடி மேலே போய்,”என்ன படம் மாப்பிள்ளை போறீங்க?”
இருந்த
கடுப்புல தலைவர் பல்லை கடித்தபடி,”ம்..ம்..சண்டை கோழி. உங்க தங்கச்சிக்கு பொருத்தமான படம்.”
கடுப்பான
தலைவர் என்னிடம் சொன்னது,”போற போக்கை பார்த்தா, தியேட்டர்ல விஷாலுக்குக்கூட கட்
அவுட் வச்சிருக்காங்களோ இல்லையோ… முதல் முதலாக திரைப்படம் பார்க்கவரும்
எங்கள் குலவிளக்கே!”ன்னு போட்டு உங்க வீட்டு ஆளுங்க உனக்கு கட்
அவுட் வச்சிடுவாங்க போலிருக்கே.”
அந்த படத்தை
பார்க்கவிடாமல் என் பொண் அழுததும்,
சரியாக அந்த பாட்டு வரும் போது தூங்கி போனதும் இங்கே பதிவு செய்தே ஆகவேண்டிய
தகவல்கள்.
அதன் பின்
பல வருடங்கள் தியேட்டர் பக்கமே போகாமல் இருந்து ”பயணம்” படம் வந்த போது,
ராதா மோகன், நாகார்ஜுனா, ப்ரகாஷ்ராஜ் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்போடு போனோம். படத்தில் சீரியஸ் காட்சிகள் வரும்போதெல்லாம் எல்லாம் மக்கள் சிரித்தார்கள்.வெறுத்துவிட்டோம்.
அதோடு, தியேட்டர்களில் திரைப்படம்
ஆரம்பிக்கும் முன் புகை பழக்கத்தின் கேடுகளை விளக்கும் டாக்குமெண்டரி ஒன்று போடுவார்களே?
“என் பெயர்….” என்று, அந்த
படத்தில் நாளை நாம் வரக்கூடாதென்றால் தியேட்டரில் சினிமா பார்ப்பதை நிறுத்திக்கொள்ள
வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அவ்வளவு சிகேரட் நெடி.
எதாவது ஒரு சானலில்,”உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக….”
என்று போடுவதையே பார்த்துக்கொள்ளலாம். அதுவும்
இல்லையென்றால், சினிமா பார்க்கவில்லை என்றாலும் ஒன்றும் குடி
முழுகிவிடாது.
3 கருத்துகள்:
நல்லது... தொடர்கிறேன்...
சினிமா பார்த்த அனுபவம் அருமை...
கடைசிப் பாரா உண்மையிலும் உண்மை.
கடைசியில் சொன்னது உண்மை. இப்போ வர சினிமாவெல்லாம் பாதி நேரம் கண்ணை மூடிக்கிட்டுதான் பார்க்கும்படி இருக்கு. அதுக்கு பார்க்காமலே இருக்கலாம்.
காதல் எப்போ? க.நி.மு. வா, க.நி.பி. வா?
(க.நி = கல்யாணம் நிச்சயம்)
கருத்துரையிடுக