புதன், அக்டோபர் 26, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி - 2

வணக்கம் சகோதர சகோதரிகளே!,

"லக்ஷ்மி கடாக்ஷம்" என்று சென்ற பதிவிற்கும் இந்த பதிவிற்கும் ஏன் தலைப்பிட்டேன் என்று புத்திசாலிகளான உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

இருந்தாலும் நானே தெளிவு படுத்திவிடுகிறேன். ஒருவருக்கு கிடைக்கும் தனலாபம் மட்டும் தான் "லக்ஷ்மி கடாக்ஷம்" என்பதில்லை. நல்ல நட்பு, சத் புத்திர பாக்கியம், ஆரோக்கியமான உடல்  யாவுமே "லக்ஷ்மி கடாக்ஷம்" தானே!?

அந்த வகையில் என் பழைய நட்புகள் திரும்ப கிடைத்தது,குழந்தைகள் மூலம் கிடைத்த பெருமை ஆகியவையுமே "லக்ஷ்மி கடாக்ஷம்" தான்.

குழந்தைகள் நவராத்திரியில் உள்ளூர் அம்மன் கோவில்கள் இரண்டில் நடனமாடினார்கள். அவை நவராத்திரிக்கு முன்பே முடிவானவை. ஆனால், விஜய தசமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டான்ஸ் டீச்சர் போன் செய்து,"கேளம்பாக்கத்தில் ஸ்ரீ குபேர லக்ஷ்மி கோவிலில் விஜய தசமி அன்று ஆட அழைத்துள்ளார்கள், பல குழந்தைகள் லீவுக்கு ஊருக்கு போய்விட்டார்கள் . உங்கள் மகளை சேர்த்துகொள்ளலாமா?" என்று கேட்டார்கள்.

நான் சற்றும் யோசிக்காமல்,"நிச்சயமாய் மிஸ்! கொடுத்து வைத்திருக்க வேண்டுமே என் பெண்!" என்று சொல்லிவிட்டேன்.

"அப்படியானால் புது பாட்டு தயார் செய்யவேண்டும். இனிவரும் இரண்டு நாட்களுக்கும் உங்கள் பெண்ணை பயிற்சிக்கு அனுப்புங்கள். கோவிலுக்கு நீங்களே தான் வரவேண்டி இருக்கும், பரவால்லையா?" என்று கேட்டார்கள். 

எதைபற்றியும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன்.பின்னர் தான் நினைவு வந்தது அந்த ஊர் வண்டலூர் தாண்டி எங்கோ இருக்கிறதென்று தான் கேள்வி பட்டிருக்கிறேனே தவிர, வழியோ வேறு தகவல்களோ தெரியாது. விஜய தசமி அன்று தலைவருக்கும் கட்டாயம் அலுவலகம் செல்லவேண்டும்.

தலைவரிடம் சொன்னபோது,"ஓ! அப்படியா ! வெரி குட் ! குழந்தைகளை அழைச்சிண்டு போய்ட்டு வந்துடு, என்னால வரமுடியாது." என்றார் கூலாக.

விஜய தசமி அன்று என் அம்மாவும் வந்திருந்தார். கோவிலுக்கு டான்ஸ் பார்க்க  நானும் வருகிறேன் என்றார். சரியென்று, ஒரு தெரிந்தவர்கள் (டான்ஸ் கிளாஸ் மூலம்) காரில் குழந்தைகளையும் அழைத்து கொண்டு கிளம்பினோம்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஆலய முகப்பு , இரத்னமங்கலம்


அது கேளம்பக்கம்  தாண்டி ரத்னமங்கலம் என்ற அழகான சிறு கிராமம். அங்கு ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு கோவில் கட்டயுள்ளார்கள். அந்த கோவிலில் கோவில் மதில் சுவர் வண்ணம் முதற்கொண்டு எல்லாமே பச்சை தான். பச்சை பட்டு பாவாடை தான் அணிந்து நடனமாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லபட்டிருந்தது.

கோவிலுக்கு சென்றவுடன் என் அம்மா கோவிலை சுற்ற போய்விட்டார். நான் குழந்தைகளுக்கு பூ,நகைகள் ஆகியவற்றை சரி செய்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருந்தேன். கற்பக்ரஹதிர்க்கு முன் ஒரு மேடை போன்ற இடம் அதில் வித விதமாக கொலு பொம்மைகள் வைக்க பட்டிருந்தன. இந்த கோவிலில் இப்படித்தான் கொலு வைப்பார்கள் போலிருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.

அங்கு வியாழகிழமை சாயங்காலம் விசேஷமாம் அதிலும் அன்று விஜய தசமி அல்லவா, அதனால் "ஷோடச லக்ஷ்மி பூஜை" ஏற்பாடாகி இருந்தது. என் அம்மா  சுற்றி விட்டு சிறிது நேரத்தில் வந்தார். கையில் இந்த "laughing buddha" என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒரு பொம்மை. "இங்க பாருடி ! இந்த குபேரன் பொம்மை வீட்டுல வச்சிண்டா ரொம்ப நல்லதாம், இருபத்தியஞ்சு ரூபாய் கொடுத்து வாங்கினேன்!"

என் வாய் சும்மா இருக்கவில்லை. "இது குபேரனா !? ஏதோ சீனா பொம்மை மாதிரி இருக்கு, இத வச்சிண்டா பணம் வருமா? இல்ல பணம் வந்தா எல்லாமே தான் வருமா!? எம்மா இப்படி இதையெல்லாம் நம்பர....!?" என்றேன்.

"இப்படி பேசற, நீயும் ஒரு நாள் இதெல்லாம் வாங்கத்தான் போற அப்போ தெரியும் உனக்கு."

"நானா?, இந்த மாதிரி பொம்மையெல்லாம் வாங்கவே மாட்டேன்.அந்த மாதிரி ஒரு நிலைமை எனக்கு ஒரு நாளும் வராது."

நான் இப்படி சொன்னதும் என் அம்மாவிற்கு வந்ததே ஒரு கோபம்,"வேண்டாண்டி!, சந்நிதில்ல நின்னுண்டு இப்படியெல்லாம் பேசாத படுவடி நீ !" (விஜய தசமி ஆசீர்வாதம்) என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி சென்று நின்று கொண்டார்.

எனக்கு ஒரே யோசனை,"நான் தவறாக என்ன சொன்னேன்?, இறைவனை பொருட்செல்வதிர்க்காக வணங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வேளை மகளின் திருமணம், குடும்பத்தில் யாருக்கோ பெரிய சிகிச்சை தேவை படும் நோய் என்று எதாவது வந்தால் அப்போது எனக்கு பணம் தேவை படுமோ? பெரிய வசதிகள் ஏதும் இல்லாத போதும் நான் பணத்தை பற்றி பெரிதும் கவலை படுவதில்லை."

இவ்விதம் எண்ணி கொண்டே நின்று கொண்டிருக்கையில் டான்ஸ் டீச்சர் என்னிடம்,"சீக்கிரமா என் கூட வாங்க !" என்று சொல்லிவிட்டு விறு விறுவென சந்நிதியை சுற்றி நடக்க ஆரம்பித்தார்.

என்ன ஏதென்று புரியாமலே நானும் பின் தொடர்ந்தேன். நான்,டான்ஸ் டீச்சர், எங்களை காரில் அழைத்து வந்த மானஸா அம்மா, டீச்சரின் அக்கா, டீச்சரின் மாமி ஆகியோர் சந்நிதியை சுற்றி கொண்டு சென்று அங்கு கொலு பொம்மைகள் வைக்க பட்டிருந்த மேடை போன்ற பகுதிக்கு சென்றோம்.

அங்கு, "ஷோடச லக்ஷ்மி பூஜைக்கு பணம் கட்டி இருந்த உபயதாரர்கள் ஐந்து பேர் வரவில்லை அவர்களுக்கு பதில் நீங்கள் இந்த பொம்மைகளுக்கு பூஜை செய்யலாம். ஆனால், பூஜை தொடங்குவதற்குள் அவர்கள் வந்து விட்டால் நீங்கள் எழுந்து விடவேண்டும்.பூஜை முடிந்த பின் பிரசாதங்கள் நீங்கள் எடுத்து கொள்ளலாம். இந்த பொம்மைகள் உபயதரர்களுக்கு (அவர்கள் பணம் கட்டியிருப்பதால்) கொடுக்கப்படும். நீங்கள் பூஜை செய்ய வாய்ப்பு கிடைத்ததையே பாக்யமாக கருதலாம்." என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.

                                                                                                                                     .......தொடரும்

பின் குறிப்பு : அங்கு பூஜை முதலானவற்றை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. இந்த போட்டோ நெட்டில் சுட்டது.

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி - 1


பதிவுலக சகோதர சகோதரிகளே !

நலம் தானே !, நானும் என் சுற்றமும், நட்பும் யாவரும் நலமே. நவராத்திரி கொண்டாடங்கள் இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எனக்கும் நவராத்திரி மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும், உடல் நிறைந்த வலிகளோடும் இனிதே முடிந்தது. "வலிகள் எப்பவும் இருக்கிறது தானே இப்போ என்ன புதுசா!", என்கிறீர்களா. அதுவும் சரிதான்.

இம்முறை குழந்தைகள் மூன்று கோவில்களில் நடனமாடினார்கள். புதுசா கொலு படி வாங்கினோம். அஷ்டலக்ஷ்மி செட் வாங்கினோம். இவை யாவற்றையும் விட மகிழ்ச்சியான விஷயம், சுமார் பதினேழு வருடங்களுக்கு பின் என் உயிர் தோழியை சந்தித்ததும், அவளுடனான நட்பை புதிப்பித்து கொண்டதுமாகும்.

என் இள வயது தோழிகள் மதுபாலா, ஜோத்ச்னா ஆகியோரை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். இருவருக்குமே ஆணும், பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள், நல்ல கணவன், மது தொழில் ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளாள். 

மதுவை சென்ற வருடமே சந்தித்து விட்டேன். அது ஒரு சுவாரசியமான நிகழ்வு.   ஜோத்ச்னாவை தற்செயலாய் சாலையில் சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சி  அடைந்தாள். இருவரும் பரஸ்பரம் குடும்பத்துடன் மற்றவர் வீட்டிற்கு சென்று வந்தோம்.

குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளை செல் போனில் தான் படம் பிடித்தேன். அவற்றை இங்கே இணைக்கிறேன். எவ்வளவு தெளிவாக இருக்குமோ தெரியவில்லை. எனக்கு எதையுமே சுருக்கமாக சொல்ல தெரிவதில்லை. விஜய தசமி அன்று ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி நடந்தது. அதை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.