புதன், டிசம்பர் 25, 2013

எலக்ட்ரானிக் கொலைகள் - சிறுகதை.



ள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டேன். மீண்டும் அந்த எண்ணம் என்னுள் தலை தூக்கியது. சிறிது காலமாகவே இப்படிதான் இருக்கிறது. பாதி இரவில் கண்விழிப்பதும், கூடவே கொலை செய்யும் எண்ணம் ஏற்படுவதும். சுற்றும்,முற்றும் பார்த்தேன். கண்ணனும் குழந்தைகளும் தூங்கிகொண்டிருந்தார்கள். எப்படி இவர்களால் இப்படி தூங்க முடிகிறதேன்றே தெரியவில்லை.

எனக்கு மட்டும் தான் இந்த மாதிரி தூங்க முடியாமல் இம்சையாய் இருக்கிறது.எல்லோரையும் கொன்று தீர்த்துவிட்டால் நிம்மதி என்று தோன்றுகிறது. 

நாட்டில் இந்த மாதிரி மக்களுக்கு கேடு விளைவிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அவர்களை எல்லாம் களை எடுத்தே ஆகவேண்டும். அதற்காகத்தான் இந்த மாதிரி நவீன கருவிகள் கண்டுபிடிக்க பட்டு இருக்கின்றன. அந்த மாதிரியான எலெக்ட்ரானிக் கருவி ஒன்றை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறேன். 

தினமும் நடுஇரவில் விழிப்பதும் அந்த எலெக்ட்ரானிக் கருவியால் போட்டு தள்ளுவதும் சில நாட்களாக நடக்கிறது. இதனால், இரவிலும் தூக்கமில்லை,பகலில் வீட்டு வேலை,ஆபிஸ் வேலை என்று பகலிலும் தூக்கமில்லை. 

யோசித்துக்கொண்டே அந்த ஆயுதத்தை எடுத்துக்கொண்டு எழுந்தேன். என்னுடனேயே வெள்ளை நிறத்தில் இன்னொரு உருவமும் எழுந்தது. அதிர்ச்சி ஒரு நொடி உடம்பை உலுக்கியது. உற்றுப்பார்த்தேன். 

“ஆ! இது என்ன?”

அந்த வெள்ளை உருவம் என்னைபோலவே இருந்தது.

“யா..யா..யார்..நீ?” நான் கேட்டதாக நினைத்துகொண்டிருந்தேன். ஆனால், என் வாயில் இருந்து வார்த்தைகளே வரவில்லை.

அது சிரித்தது. என் கேள்வியை மனத்தினுள் புகுந்து படித்தது போல், “நாந்தான் உன் மனசாட்சி. நீ சினிமாவில் எல்லாம் பார்த்ததில்லை? ஒருத்தர் தன் மனசாட்சியோடு பேசிக்கொள்வதை...?”

“ஓ...!” இப்போ கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது.

“என்ன செய்யப்போற?” அதட்டலான குரலில் கேட்டது.

“கொக்....கொ...கொலைகள்.”

“என்ன துணிச்சல்!? அதை கொஞ்சங்கூட தயக்கமே இல்லாம சொல்றியே!?”

“இதில் என்ன தயக்கம்!? மக்களுக்கு தீங்கு செய்பவர்களை, போட்டு தள்ள வேண்டியது தான்.”

“அது அரசாங்கத்தோட வேலை, நீயேன் தினமும் பாதிராத்திரியில் எழுந்துண்டு இப்படி செய்யற?”

“எல்லாரும் அரசாங்கத்தையே எதிர்ப்பார்த்திருக்க கூடாது.அது மட்டுமில்ல நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்.”

“என்ன? வசனம் பேசறியா? செய்யறது கொலைகள் அதுக்கு என்ன உனக்கு திமிர் பேச்சு வேண்டிகிடக்கு?”

“இது தப்புன்னா, இந்தமாதிரி செய்யறதுக்குன்னு  எலெக்ட்ரானிக் கருவியெல்லாம் தயாரிச்சு விக்கறாங்களே, அதுக்கு என்ன சொல்லற?”

“முட்டாள் ! உன்ன நீ காப்பாத்திக்கலாம், ஆனா இன்னொரு உயிர கொல்ல உனக்கு உரிமை கிடையாது.”

“எத்தனை பேர இவங்க கொன்னிருக்காங்க தெரியுமா? அதுல எத்தனை குழந்தைகள் தெரியுமா? இவங்களையெல்லாம் விட்டுவைக்கக்கூடாது.”

“சரி, உன் ஒருத்தியால இவங்க எல்லாரையும் ஒழிச்சிட முடியுமா?”

“வா...வா...வந்தியா இந்த கேள்விக்கு, என்னடா இன்னமும் இந்த கோழைத்தனமான கேள்வி வரலியேன்னு பாத்தேன்.வெக்கமா இல்ல இப்படி கேட்கறதுக்கு உனக்கு? எல்லோரும் நம்ம மட்டுமே செஞ்சு ஒரு வேலை ஆகிடும்ன்னு நினைச்சா ஆரம்பிக்கிறாங்க? என்வரையில் என்னால ஆனத நான் செய்யறேன்.எல்லோரும் சேர்ந்து செஞ்சா ஒருநாள் இவங்களை மொத்தமா ஒழிச்சிடலாம்.”

“சரி, இவ்வளவு நாளா செய்யறியே உன்னால அவங்களை ஒழிக்க முடிஞ்சுதா? என்னைக்குமே ஒரு பிரச்சனையோட ஊற்றுக்கண் எங்க இருக்குன்னு பார்த்து அதை தான் அழிக்கணும். அப்பத்தான் அது திரும்பத்திரும்ப வராம இருக்கும்.”

“இப்போ தான் என்னமோ பெரிய மகாத்மா மாதிரி கொலை செய்யறது தப்புன்னு கிளாஸ் எடுத்த? திடீர்ன்னு மொத்தமா அழிக்கறதுக்கு வழி சொல்லற?”

"அழிக்கிறதுக்கு இல்ல, உருவாகாமலே இருக்கிறதுக்கு வழி சொல்லறேன்."

"இப்போ சொல்லு திருப்பியும் கேட்கிறேன், உன்னோட செயலால அவங்க எல்லோரையும் மொத்தமா ஒழிச்சிட முடியும்ன்னு நீ நினைக்கிறியா? இன்னமும் எத்தனை நாளைக்கு இப்படி தூக்கத்தை தொலைத்து விட்டு தவிக்கப்போற?”

நான் யோசிக்க தொடங்கினேன்.
நான் யோசித்து கொண்டிருக்கும் போதே அது ச்சேச்சே அவள் சொன்னாள்,”வீட்டோட சுற்றுப்புறத்தை தூய்மையா வச்சிக்கணும், தண்ணிய தேங்க விடக்கூடாது, குப்பையை உடனே,உடனே டிஸ்போஸ் பண்ணிடனும். இதெல்லாம் செஞ்சியானா இந்த கொசுக்கள் பரவாது. நீயும் ராத்திரி முழுக்க கொசு பேட்டை வச்சிண்டு அடிச்சிண்டே இருக்கவேண்டிய அவசியமும் இருக்காது.புரிஞ்சுதா?”

“புரிஞ்சுது” என்றேன் மெல்ல புன்னகைத்தப்படி.

“என்ன புரிஞ்சுது?”

“நீ ஒரு புத்திசாலியோட மனசாட்சின்னு.”

இப்போது அவளும் புன்னகைத்தாள்.என் மனசாட்சி விழித்த வேளையில் நானும், கொசு பேட்டும் தூங்க தொடங்கினோம்.

வியாழன், அக்டோபர் 24, 2013

வோய் திஸ் மச் நாய்ஸ் கேர்ள்ஸ்...!?

இன்னிக்கு இதுங்களை ஸ்கூல்க்கு கொண்டுவிடும் பணி என்னிடம் வந்துவிட்டது. மாடியில் இருந்து இறங்கும்போதே கிழே காத்திருந்தது அது. "ஹாய் வோயட்டி !" என்றபடியே இறங்கினார்கள். அதுவும் இவர்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கி வால் வாசல் கதவில் "டப், டப் " என்று அடித்து சத்தம் கேட்கும் படி வேகமாக ஆட்டியது.

"அக்காவோடல்லாம் ஸ்கூல்லுக்கு வரியாடா ?"

"ரொம்ப முக்கியம் நாய்க்கு படிப்பு." (மனதிற்குள் நொந்து கொண்டேன்.)

ொஞ்ச ஆரம்பித்தார்கள். அதுவும் தன் பெரிய உடம்பை ஆட்டி விளையாடியது. வெள்ளையாய்,பெரிசாய் இருப்பதால் "ஐராவதம்" என்று பேர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

"சரி,சரி, வாங்கோ, டைம் ஆச்சு !"

வீட்டு கேட்டை தாண்டினோம். வெள்ளையும்,பழுப்புமாய் ஒன்று தெருவில் வந்து கொண்டிருந்தது.

"அம்மா ! இது எங்க பிரெண்டும்மா !"

"அது சரி, வோயட்டி தம்பி, இது பிரெண்ட்டா?" (மனசுக்குள்ளயே)

அடுத்து அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

"போடி என்ன இருந்தாலும் "குட்டு (goodu)" தான் ரொம்ப சமத்து என்மேல ரெண்டு காலையும் போட்டுண்டு எப்படி ஏறி நிப்பான் தெரியுமா?"

"இல்ல "மிஸ்க்கு (mishkku)" தான் சமத்து நம்ம பர்மிஷன் இல்லாம நக்கவே நக்காது."

"goodu, புசு,புசு ன்னு சிங்க குட்டி மாதிரி இருக்கான் பார்த்தியா."

"ஏன் mishkku வும் தான்."

ரெண்டும் தெரு முனையில் இருக்கும் வீட்டில் இருக்கும் ரெண்டு கோல்டன் ரெட்ரிவர் வகை நாய்கள்.

"ரெக்ஸ் அன்னிக்கு என்ன பார்த்து எப்படி வாலாட்டினான் தெரியுமாம்மா!?"

"எனக்கிட்ட வாலாட்டி இருந்தா அப்போ தெரிஞ்சிருக்கும் அதுக்கு." (கறுவிக்கொண்டேன், இதுவும் மனசுக்குள்ளயே தான்)

தெருமுனை தாண்டினோம். ஒரு வீட்டில் இருந்து "குக்வக்,குக்வக்" என்று ஒரு பொமரேனியன் செல்லமாக கத்தியது.

"அம்மா, அதுதாம்மா "லக்கி" ரொம்ப சமத்து எங்க பிரெண்ட்."

அடுத்ததாக எதாவது ஒரு பக்கியை அறிமுகபடுத்துவார்களோ என்று பயமாக இருந்தது.

ஒருவழியாய் ஸ்கூலில் விட்டு விட்டு வந்து தலைவரிடம் கேட்டேன் "ஏம்ப்பா, நம்ம பொண்ணுங்களுக்கு யாரும் மனுஷ பிரெண்ட்ஸ்யே இல்லியோ...!?"

புதன், அக்டோபர் 23, 2013

வைகுண்ட வாசம்

 "வைகுண்ட வாசம்", யாருக்கு கிடைக்கும்? யாரு நிறைய புண்ணியம் பண்ணி இருக்காளோ அவாளுக்குத்தான் கிடைக்கும்ன்னு சொல்லுவா. வைகுண்டத்துக்கு போனவாளுக்கு மறு பிறவியே கிடையாதாம். பகவானோடையே வைகுண்டதுலையே இருப்பாளாம்.ஆனா, வைகுண்டத்துல ஆறுமாசம் வாழ்ந்துட்டு திரும்பி நரகத்துக்கு வந்தவர்களை  பற்றி நீங்க கேள்வி பட்டிருக்கிறீர்களா...? நாந்தான் அது (ஐய்....! சுத்தமா மர கழண்டுடுத்து போலிருக்கே !).

"முன்னம் அவன் நாமம் கேட்டாள்" ன்னு ஆரம்பிக்கற "சிவகாமியின் சபதம்" நாவலோட ஹை லைட் அப்பர் தேவார பாடல்ல வருமே ஒரு எடத்துல "பின்னர் அவன் ஆரூர் கேட்டாள்" ன்னு. அந்த மாதிரி எனக்கு என்னவோ ஸ்ரீரங்கத்து மேல ரொம்ப ஈர்ப்பு. (ஓ...! உன்னபத்தி உனக்கு அப்படியெல்லாம் வேற ஒரு நினைப்பா..!)

திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் ன்ன உடனேயே தலைவர் கிட்ட ஸ்ரீரங்கத்துல வீடு பாருங்கோன்னு சொல்லிட்டேன். அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கும், சுத்தி இருக்கிறவா எப்படி இருப்பா, அங்க வீடு கிடைக்குமா, இப்படி எதை பத்தியுமே யோசிக்காம சொன்னேன். தலைவரும் அப்பல்லாம் "மனைவி சொல் மிக்க மந்திரமில்லை" ன்னு தான் இருந்தார். (கல்யாணமான புதுசு இல்லியா,அதான்...!) (நீ போன பின்னாடி அங்க இருக்கிறவா எப்படி இருந்தா?, ஓடி இருப்பாளே!)

 ஆனா பகவானும் நான் கொஞ்சகாலம் வைகுண்டதுல இருக்கணும்னு விதிச்சிருந்திருக்கார். ஸ்ரீரங்கத்துல, அம்மா மண்டபம் ரோட்ல, அம்மா மண்டபத்துக்கு கிட்டகையே ஒரு பிளாட்ல வீடு கிடைச்சுது. ஒரு நண்பர் சொல்லிவச்சு, நாங்க தான் வரணும்ன்னு நிறைய பிரயத்தனம் பண்ணி தான் அந்த வீடு கிடைச்சது. (நம்பிட்டோம் !)

நாங்க குடி போனது ஒரு ஆனி மாச கடைசி நாள். மறுநாளில் இருந்து ஆடி மாதமும்,அதோடே பண்டிகைகளும் தொடக்கம், ஆடி முதல் தை வரை எல்லா பண்டிகைகளையும் ஒரு தடவை கொண்டாடிட்டு திருப்பியும் இந்த சென்னை நரகத்துக்கே சாரி நகரத்துக்கே வந்தாச்சு. (நீ வந்த பின்னாடி தான் அது நரகமாகிட்டதா நிறையப்பேர் பேசிக்கறா..!)

தொடரும்...

பின் குறிப்பு : வாசகர்களுக்கு சிரமம் தரக்கூடாதென்பதர்க்காக அவர்களின் விமர்சனங்களும் அடைப்புகளுக்குள் முன்கூட்டியே தரப்பட்டிருக்கின்றன.


 

சனி, அக்டோபர் 05, 2013

MY FIRST GUEST FOR NAVARATHIRI

Long live Blogger ! Blogger editor is not providing  me with tamil fonts. So, with lots and lots of hesitation I am giving my first english post.  I am forced to write in English.  Here is the lady who comes to my home as the very first person in navarathiri every year. I am glad to inform you all that, this decoration I found all by myself. Many others may also have created this or ever much better than this. If so, kindly let me know through your comments. I can learn the other methods also.


May Matha Bhuvaneshwari shower her immense grace on all of us.


VILAKKU NACHIYAR


ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

மறக்க முடியாத ஜோக்குகள்

படித்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் என்னால் மறக்க முடியாத சில நகைச்சுவை துணுக்குகள் இங்கே. இவற்றை எங்கே,எப்போது படித்தேன் என்பது நினைவில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

மந்திரி : மன்னா ! இப்போது அந்தபுரத்திற்கு போகாதீர்கள், மகாராணியார் தங்கள் மேல் மிகவும் கோபமாக இருக்கிறார்.

மன்னர் : எப்படி சொல்கிறீர்கள் ?

மந்திரி : கையில் உள்ள கத்தியால் பழம் ஒன்றை நறுக்கி கொண்டே,"உன்னைத்தான் நான் அரிவேன், மன்னவனை யார் அரிவார்...?" என்று பாடிகொண்டிருக்கிறார் மகாராஜா !

-------------------------------------------------------------------------------------------------------------
பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :

டாக்டர் (பைத்தியத்திடம்)  : என்ன எழுதற ?

பைத்தியம் : லெட்டர்.

டாக்டர் : யாருக்கு?

பைத்தியம் : எனக்கு தான்.

டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?

பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு  தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.

(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))

-------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் : அந்தாளை ஏன் எல்லோரும் சேர்ந்து அடிக்கிறாங்க ?

மற்றொருவர் : ஜோதிடர்கள் மாநாட்டில் பாட கூப்பிட்டால்,
"நடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று பாடி இருக்கிறார், பின்ன அடிக்கமாட்டங்களா !?

-------------------------------------------------------------------------------------------------------------

மருமகள் : நான் என் குழந்தைகளுக்கு எல்லா சாப்பாடும் நான் ஸ்டிக்ல்ல தான் செஞ்சு தரேன்.

மாமியார் : அதான் உன் குழந்தைகள் யாரோடும் ஒட்டவே மாட்டேன்கறதுகளா !?

------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

தவமாய் தவமிருந்து...

இதே சிங்கார சென்னையில ரொம்ப வருஷம் முன்னாடி நடந்த கதை இது.

அவங்க ஒரு இளம் தம்பதி. அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு ரொம்ப வருத்தம். அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு சொல்லமுடியாது. என்னன்னா, அந்த அம்மாவுக்கு ரெண்டு மூணு தரம் உண்டாகி உண்டாகி கலஞ்சிடிச்சி.

இப்படி நடந்ததால அந்தம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க. டாக்டர் கிட்ட போனாங்க. டாக்டரும் ஒண்ணும் பெரிசா பிரச்சனை இல்லைன்னு சொல்லி மருந்து குடுத்தாங்க.

அந்த அம்மாக்கு கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகம். அதனால, அவங்க நாத்தனார் கிட்ட குழந்தை பிறக்கறதுக்கு எதாவது பரிகாரம் பண்ணலாமான்னு கேட்டாங்க. அவங்களும், அம்பாள் உபாசன பண்ற ஒரு மாமி கிட்ட தம்பி பொண்டாட்டிய கூட்டிகிட்டு போனாங்க.


அந்த மாமி அம்பாள நல்லா பூஜை பண்ணி, ஒரு வாழப்பழத்துல்ல அம்பாள் மந்திரத்தை ஜபிச்சு குடுத்து , "இதை ஸ்வாமியை வேண்டிண்டு சாப்பிடு குழந்தை தங்கும்,"ன்னு சொல்லி அனுப்பினாங்க.

அந்தம்மா அந்த பழத்த பய பக்தியோட வாங்கிட்டு போய் அவங்க வீட்டு ஸ்வாமி ரூம்ல்ல வச்சிட்டு, குளிச்சிட்டு வந்து சாப்பிடலாம்ன்னு போனாங்க.

குளிச்சிட்டு வந்துப்பார்த்தா பழத்த காணூம். எங்க போயிருக்கும்ன்னு பதறிக்கிட்டே அங்கையும்,இங்கையும்மா தேடினாங்க. அப்போ அங்கவந்த அவங்க மாமனார்,"என்ன தேடரம்மா ன்னு?" கேட்டாரு.

"இங்க ஒரு பழம் வச்சிருந்தேன், அதைதான்."

"ஒரு அதுவா சுவாமி பிரசாதம் வீணாபோகக்கூடாதேன்னு நான் தாம்மா சாப்பிட்டேன்."

இத கேட்ட உடனே அந்த அம்மாவுக்கு ரொம்ப பயமா போய்டிச்சு. மாமனார் கிட்ட ஒண்ணும் சொல்லாம, நாந்தனார தேடி ஓடினாங்க. அவங்க அப்பா அந்த பழத்த சாப்பிட்டுட்ட விஷயத்த சொன்னாங்க.

அவங்களும் என்ன செய்யறதுன்னு தெரியாம ரெண்டு பேருமா அந்த மாமிகிட்டே திருப்பியும் போய் விஷயத்தை சொன்னாங்க. அந்த மாமியும்  "பதறாதீங்கோ !, சம்பதம்மில்லாதவா சாப்பிட்டா அது பலிக்காம போய்டும் அவ்வளவு தான் (பின்ன அது என்ன மருந்தா ?!, வியாதி இல்லாதவங்க சாப்பிட்டா கேடு வரத்துக்கு). நான் திருப்பியும் மந்திரிச்சு தரேன், இந்த வாட்டியாவது  ஒழுங்கா சாப்பிடு." ன்னு சொல்லி அடுத்த முறை வெண்ணெயில மந்திரிச்சு கொடுத்தாங்க.

இந்த வாட்டி அந்த அம்மா சரியா அம்பாள் பிரசாதத்த  சாப்பிடவும் அவங்களுக்கு குழந்தை தங்கிடிச்சு. அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். தனக்கு பக்தியுள்ள குழந்தை பிறக்கனும்ன்னு தினம் தினம் கடவுளை வேண்டிகிட்டே இருந்தாங்க. (ஆனா பாருங்க தனக்கு புத்தி உள்ள குழந்தை வேணும்ன்னு கேட்க அவங்க தவறிட்டாங்க. இதுக்கு தான் சொல்லறது எப்பவுமே நாம கடவுள் கிட்ட கேட்டா சரியா கேட்க தெரியாம போயிடலாம். அதனால கடவுள் தரத ஏத்துக்கணும்.) :)))

இப்படியாக ஒரு கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் அவங்களுக்கு ஒரு பாப்பா பொறந்துச்சு. பாப்பா அவங்க ஆசைப்பட்டா மாதிரியே ரொம்ப அழகாவும் (!?!?!?), பக்தியாவும் வளந்துது. ஆனா, அந்த பாப்பாவுக்கு தான் ஏன் பொறந்தோம்? தான் இந்த ஒலகத்துல என்ன செய்யணும்? இப்படி எதுவுமே தெரியலை.

இப்படியே அந்த பாப்பா வளர்ந்து பெரிய அக்காவா, அம்மாவாவும் ஆய்டிச்சு. அப்பவும் அவங்களுக்கு அவங்களோட வாழ்க்கையோட குறிக்கோள் என்ன என்கிறது தெரியலை. "நான் பிறந்த நாளில் என்ன சிறப்பு ? எல்லாம் சாதரணமா தானே இருக்கு?" ன்னு நினச்சிக்கிட்டே இருப்பாங்க.  இப்படி தவமாய் தவமிருந்து, நம்மளை நம்ம அம்மா எதுக்கு பெத்தாங்க ன்னு யோசிப்பாங்க.

அப்பத்தான் அவங்களுக்கு "சிநேகா" வ பத்தி தெரிய வந்தது. இவங்க   பிறந்த அதே நாளில் தான் அந்த சிநேகா வும் பிறந்திருந்தா. ஆனா, அவங்கள  விட ரொம்ப சின்னவளா இருந்தாலும் ரொம்ப பெரிய காரியமெல்லாம் அவ செய்யறா. அது என்னனா, யாராவது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்குன்னு சிநேகா கிட்ட சொன்னா, அவ அவங்களுக்கு ஆறுதல் சொல்லி அவங்கள வாழவைக்கிறா.

இது தெரிஞ்சப்ப தான் இவங்களுக்கு ஒரு உண்மை புரிஞ்சுது , "வாழ்க்கைல ஏதாவது ஸ்பெஷல் வேணும் ன்னு நினைக்கிறத விட வாழ்க்கையே ஒரு ஸ்பெஷல் தாங்கிறது தான் அது."

இன்றையநாள் கடவுளால நமக்கு தரப்பட்டிருக்கிறது. இதை பயனுள்ள வகைல கழிக்கன்னும்.

உங்களுக்கு சிநேகாவ தொடர்பு கொள்ளணும்னா இங்க கிளிக் பண்ணி "சிநேகா" ன்னு கூப்பிடுங்க அவ ஓடி வந்திடுவா. இல்லன்னா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க :044 - 2464 0060.  சிநேகா கிட்ட பேசலாம்.

அப்புறம், ஒரு முக்கியமான விஷயம். நான் மேலே சொன்ன கதைல வந்தவங்களுக்கும் சினேகாவுக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாள்.

SEPTEMBER 10 :  ANTI-SUICIDE DAY.

வாழ்க்கைங்கிறது ரொம்ப pericious.  வாழறதே பெரிசுங்கிறது, தன் அன்புகுரியவங்களை இழந்தவங்களுக்கு புரியும். "சும்மா, எனக்கு ---------- வாவது வாழ்ந்திருக்க கூடாதான்னு?" அவங்க புலம்பறத கேட்கும் போது நாம ஒவ்வொருத்தரும் பலருக்கும் தேவையா இருக்கோம்.அதை சரியா பூர்த்தி செய்யணும் ன்னு தோணும்.

"எனக்கு அன்பு கிடைக்கல, நான் பரிட்சைல பாசாகல, என்னை யாரும் புரிஞ்சுக்கல", இப்படி நினைக்காம, "நான் அன்பு செலுத்துவேன், நான் பலர் பாசாக ஊக்குவிப்பேன், நான் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிப்பேன்."

 இப்படி நினைக்கலாமே. "தவமாய் தவமிருந்து பெற்ற வாழ்க்கையை வீணாக்கலாமா!?"

வாழ்கை வாழ்வதற்கே.!

புதன், செப்டம்பர் 04, 2013

குருவே சரணம்

 "PARENTS ARE THE FIRST TEACHERS, AND THE TEACHERS ARE THE SECOND PARENTS."  என்பார்கள். நிற்பது,நடப்பது,உண்பது,உறங்குவது,பேசுவது என பலவற்றையும் சொல்லிதராமலே பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். சிலவற்றை அவர்கள் கற்றும் தருகிறார்கள். எனவே, PARENTS ARE THE FIRST TEACHERS.


நம்மிடம் இருக்கும் நல்ல குணமோ, கெட்ட குணமோ அவர்களிடமிருந்து தான் பெறுகிறோம்.

அதனால், என் முதல் ஆசிரியர்களான என் பெற்றோருக்கு இன்று ஆசிரியர் தின வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


முன் காலத்தில் குருகுல வாசம் என்ற முறை இருந்தது. குழந்தைகள் குருவின் வீட்டிலேயே தங்கி அவர்களையே பெற்றோராக பாவித்து அவர்கள் சொல்படி கேட்டு கல்வி கற்க வேண்டும். எனவே, THE TEACHERS ARE THE SECOND PARENTS.

 என்னிடம் சில நல்ல பழக்கங்களாவது உள்ளதென்றால் அது என் ஆசிரிய பெருமக்கள் தந்த தன்னலமற்ற கொடையாகும்.

"கார்த்தால  நான் கிளாஸ்குள்ள நுழைஞ்ச உடனே யாரும் எனக்கு குட் மார்னிங் சொல்லக்கூடாது. நான் சொல்லி குடுத்திருக்கேனே அந்த ஸ்லோகங்கள், அதை தான் சொல்லணும்." சொன்னவர் எங்களுக்கு  வரலாறு, மற்றும் ஆங்கிலம் நடத்திய எங்கள் தலைமை ஆசிரியை திருமதி.பத்மாவதி அவர்கள். அந்த ஸ்லோகங்கள் "அசாத்திய சாதக ஸ்வாமின்" என்று தொடங்கும் ஆஞ்சநேயர் சுலோகம் மற்றும் "அன்னையே அருந்துணையே" என்று தொடங்கும் அரவிந்த அன்னை சுலோகம்.

இன்றும் நான் "அசாத்திய சாதக ஸ்வாமின்" சொல்கிறேன். அது மிகவும் சக்திவாய்ந்த சுலோகம் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

அவர் வரலாறு பாடம் நடத்தும்போது. பாடம் மட்டும் நடத்தவில்லை. நம் நாட்டை பற்றிய பொதுவான பல விஷயங்களை சுவைபட கூறுவார். அவர் பேசுவதை கேட்கும் போது கேட்பவருக்கு தேசபக்தி பீறிட்டு கிளம்பும். "எம்டன்" என்றால் என்ன என்பதை எங்களுக்கு விளக்கியவர் அவர் தான்.

நான் வரலாறை சிறப்பு பாடமாக எடுத்துப்படிக்க அவர்தான் காரணம்.

கணக்கே வராது என்று காத தூரம் ஓடிய என்னை கணக்கில் எண்பது சதவிகிதம் வாங்க வைத்தவர் என் லக்ஷ்மி மிஸ். பத்தாம் வகுப்பு முடிவுகள் வந்து நான்  பள்ளிக்கு சென்ற போது எனக்காக வாசலிலேயே காத்திருந்தார். "மாத்ஸ் ன்னாலே பயப்படுவியே எவ்வளவு மார்க் தெரியுமா?" என்று குறும்பாக சிரித்தவர்,"உள்ள போய் மார்க் ஷீட்ட பார்." என்று சஸ்பென்ஸ் வேறு வைத்தார்.

எப்போதும் சிரித்தமுகம் என்று என்னை பலர் சொல்வார்கள். அது அவர்களிடமிருந்து கற்றது தான். ஒரு முறை அவர்களின் சோகமான சொந்த வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்த போது, இத்தனை சோகத்திலுமா இவர் இத்தனை எனர்ஜடிக்காக இருக்கிறார் என்று ஆச்சர்யம் ஏற்பட்டது.


"ஏம்மா நீங்களாம் இந்த காதலை பற்றி என்னம்மா நினைக்கிறிங்க?" என்று கேள்வி கேட்டு எங்களை சிந்திக்க தூண்டி சிறுவயதில் நாங்கள் வழிதவறி விடாமல் இருக்க காரணமாய் இருந்தவர் எங்கள் தமிழ் ஆசிரியை திருமதி.மணிமேகலை மிஸ். பல பெண்ணிய கருத்துக்கள் என்னுள் பதிய காரணமாய் இருந்தவரும் அவர்தான்.

ஒருமுறை அவர்  "தினமும் படுக்க போறதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது படிக்கணும், இல்லன்னா ஒரு நோட்டாவது திருத்தணும். அப்பத்தான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். என் வீட்டுல கூட சொல்லிவச்சிருக்கேன்  நான் இறந்த பிறகு என் தலைமாட்டுல ஒரு புக்கும், பேனாவும் வச்சிடுங்க அப்பத்தான் என் ஆத்மா சாந்தி அடையும்ன்னு." என்று சொல்ல நாங்கள் அசந்து போனோம்.

இன்று, "ராத்திரி பத்து மணிக்கும் முடியல,முடியலன்னு  சொல்லிண்டு அப்படியாவது என்ன படிக்கன்னுமா." ன்னு தலைவர் சத்தம் போட்டாலும் நான் தினமும் தூங்குவதற்கு முன் ஏதாவது படிப்பது அவர் கற்றுத்தந்தது தான்.

நானும் தலைவரும் கண் தானம் செய்திருப்பதும் நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது தான்.

புஷ்பா மிஸ், இந்திரா மிஸ் இவர்களை பார்த்தால் தாய் பாசம் பொங்கி வரும். .

எங்களுக்கு பரிட்சை வரும்போது உருகி உருகி அவர்களின் மதப்படி ப்ராத்திப்பதை பார்த்தால் எங்கள் மேல் எங்களை விட அவர்களுக்கு எவ்வளவு பாசம் என்பது புரியும்.

சாந்தா மிஸ், பேருக்கேற்றார் போல் சாந்தமான மிஸ். இவர் கிளாஸ் என்றால் எங்களுக்கு கொண்டாட்டம் தான். அவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் கூச்சல் போட்டு கொண்டு குஷியாக இருப்போம்.

"இப்படி வருடாவருடம் வரும் குழந்தைகளை இவர்களால் எப்படி நேசிக்க முடிகிறது?",  என்று எனக்கு வியப்பாக இருக்கிறது.

இப்படி ஆன்மீகம்,சமூகம்,அரசியல்,அன்பு,பாசம் என்று பல விஷயங்களை என் ஆசிரியைகளிடம் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன்.

என் குழந்தைகளிடம் சொல்லிவைத்திருக்கிறேன், "உங்களால் உங்கள் பள்ளிக்கும், ஆசிரியார்களுக்கும், வீட்டுக்கும்,நாட்டுக்கும் பெருமை ஏற்ப்படவேண்டும். அப்படிபட்ட காரியங்களையே நீங்கள் செய்யவேண்டும். இது தான் நீங்கள் செய்யக்கூடியது."

உலகில் எல்லோரும் நமக்கு எத்தனையோ பாடங்களை கற்று கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

எனக்கு உலகத்தை காட்டிய என் ஆசிரிய பெருமக்களுக்கு என் கோடானுகோடி வணக்கங்கள்.


திங்கள், ஆகஸ்ட் 26, 2013

கண்ணனை நினைப்பவர் சொல்வது பலிக்கும்

நாளைக்கு நம்ம கிருஷ்ணருக்கு  ஹாப்பி பர்த்டே. ஒரு காலத்துல்ல எனக்கு கிருஷ்ணர் தான் ரொம்ப புடிச்ச கடவுள் (இப்போ அதே தெய்வத்தின் வேறு வடிவமான அன்னை பராசக்தி). அப்போ எங்க டியூஷன் அக்கா கூட கிண்டல் பண்ணுவாங்க," ஆமா!, பொம்பளைங்களுக்கெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி கிருஷ்னர புடிக்கும், கல்யாணத்துக்கப்புறம் ராமர புடிக்கும்."ன்னு.

எனக்கு அப்படியெல்லாம் இல்ல. முன்னாடி சின்னவயசுல்ல எப்பவோ கேட்ட ஞாபகம், "உலகத்துல்ல ஒரே ஒரு உருவம் தான் உண்டு. அதன் ஒரு பாதி சக்தியாவும், மறுபாதி சிவனாகவும் இருக்கு. அந்த சக்தியா இருக்குற ஒரு பாதி தான் திருமாலாவும் இருக்குன்னு. இதை எங்கே எப்போ கேள்வி பட்டென்னு ஞாபகம் இல்லை. ஆனா இது  என் மனசுல்ல ரொம்ப ஆழமா பதிந்து விட்டது.

கல்யாணத்துக்கு முன்னாடி கிருஷ்ணன ஜெயந்தின்னா வீட்டையே ரெண்டு பண்ணிடுவேன் (நவராத்திரிக்கும் படுத்துவேன்). இந்த ஸ்லோகம் சொல்லணும், இந்த கோவிலுக்கு போகனும். இப்படி பண்ணனும், அப்படி பண்ணனும் ன்னு. பாவம் எங்கம்மா வீட்டு வேலையோட என்னோட ஆச்சார படுதல்களுக்கெல்லாம் வேற ஆடுவாங்க.பின்ன அவங்க தானே என்னை இப்படி சொல்லி சொல்லி வளர்த்தது.

இப்போ கல்யாணத்துக்கப்புறம் இந்த மாதிரி ஆர்ப்பாட்டமெல்லாம் செய்ய முடியறதில்ல. ஒன்னு வேலை அதிகம். அடுத்தது நான் ஆர்ப்பாட்டம் பண்ணினால் இங்கே அதை கண்டுக்கவே  ஆளில்ல.

இப்படித்தான் போன வருஷம் என் தம்பி போன் பண்ணி, " என்னக்கா இன்னிக்கு உன் கிச்சுக்கு ஹாப்பி பர்த்டே வாச்சே, எப்பவும் போல சாமி ஆடிட்டியா"  ன்னு கேட்டான்.

எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு. "போடா தம்பி ! இங்க நானே பக்ஷணம் பண்ணனும், சுவாமி பாத்திரம் தேய்க்கணும், குழந்தைகளை கவனிசிக்கன்னும். இதுல்ல என்னிஷ்டப்படி பூஜை பண்ணவே முடியலைடா. கோவிலுக்கும் போகணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு ஆனா வீட்டுல்ல வேலை இருக்கே." என்றவுடன் அவன் கட,கட வென்று சிரித்து "நன்னா வேணும் எல்லோரையும் நீ என்ன பாடு படுத்தி வச்சிருப்ப." என்று கொக்கரித்தான்.


உண்மை தான் முன்பெல்லாம் நேரம் அதிகம் இருந்ததால் சம்ப்ரதயங்களின் மேல் அதிக பற்று வைத்து இருந்தேன். அது அப்போது சாத்தியமானதாகவும் இருந்தது. ஆனால், இப்போதோ நேரமின்மையில் தவிக்கும் போது, "பக்தி தான் முக்கியம், பகவான் நாம அன்போட எத குடுத்தாலும் ஏத்துப்பார்." என்று சமாதானம் சொல்ல முற்படுகிறது மனம்.


சரி, விஷயத்துக்கு வருகிறேன். பகவானுக்கு தன்னை பூஜிப்பவர்களை விட தன் பக்தர்களை பூஜிப்பவர்களை தான் அதிகம் பிடிக்குமாம். "அதனால என்ன இப்போ, நாங்கள் எல்லோரும் உன்னை பூஜிக்கனும்ன்னு சொல்லறியா" ன்னு கேட்காதீங்க. அப்படியெல்லாம் இல்லை. ஏன்னென்றால்  எனக்கு அத்தனை பக்தி இல்லை.

நான் இங்கே குறிப்பிட வந்த பக்தர்கள் பாரதியாரும்,கண்ணதாசனும் தான். அவர்களின் பக்தி ஈடுசொல்ல முடியாதது. கடவுளை தன் வீட்டு வேலைக்காரனாக நினக்கவெண்டுமென்றால் பாரதியாருக்கு தன் பக்தியின் மேல் எத்தனை நம்பிக்கை இருக்க வேண்டும். அதைத்தான் நான் முந்திய பத்தியில் சொன்னேன். என் பக்தியில் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்று.

பாரதியார்  அன்னை பராசக்தியை பாடிய அளவுக்கு கண்ணனையும் பாடியுள்ளார், (மற்ற தெய்வங்களை பாடியது குறைவு).

திருமால் மோகினியாக அவதாரம் எடுக்க முடிந்ததற்கு காரணம், அவரே பராசக்தியாகவும் இருப்பதால் தான் என்று பொருள்படும்படியான ஒரு பாடல் கூட உள்ளது (பாரதியார் பாடல் அல்ல).

 கண்ணதாசனும் தானே ராதையாக மாறி ,கண்ணா ! கண்ணா ! என்று உருகி இருக்கிறார். "காதல் கொண்டோர் சொல்லும் சொல் அல்லவோ. என் கண்ணா என்பாரன்றி வேறென்னவோ. சாதல் வந்தால் கூட கவலை இல்லை. என் சங்கீதம் அவனன்றி யாருமில்லை." என்கிறார். அன்பின் மிகுதியில் நாம் சொல்லும் சொல் "கண்ணே! அல்லது கண்ணா !" என்பது தானே.

நமக்கெல்லாம் கந்த சஷ்டி கவசம்,ஸ்கந்த குரு கவசம், ஸ்ரீ புவனேஸ்வரி கவசம் தெரியும். கேள்விப்பட்டிருக்கோம். ஸ்ரீ கிருஷ்ண கவசம் தெரியுமா. இதை எழுதியவர் கண்ணதாசன். அதன் முன்னுரையில் அவர் கூறுகிறார். கண்ணன் ஒரு காவல் தெய்வம். அவனை நினைப்பவர்களுக்கு துக்கமில்லை. "கண்ணனை நினைப்பவர் சொல்வது பலிக்கும்".

இதே விஷயத்தை நீங்கள் சாக்த வழிபாட்டிலும் காணலாம். அன்னை பராசக்தியை வழிபடுபவர்களுக்கு வாக்கு வன்மை ஏற்படும்  என்பது  அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.


இந்த "ஸ்ரீ கிருஷ்ண கவசம்", என்ற சிறு நூலை வானதி பதிப்பகத்தார் வெளி இட்டுள்ளார்கள். விலை கொஞ்சம் அதிகம் தான். ஒரு ரூபாய் விலை. ஸ்ரீ கிருஷ்ண கவசத்தை இங்கே பதிவிடலாமா என்பது தெரியவில்லை. எனவே, இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு அதை படிக்க விரும்பும் அன்பர்கள் அந்த நூலை வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


அனைவருக்கும் அன்னை பராசக்தியும், அவளுருவாய் இருக்கும் கண்ண பெருமானும் அனைத்து நலன்களையும் வழங்கட்டும்.



வியாழன், ஆகஸ்ட் 22, 2013

ரீ என்ட்ரீ

இந்த சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி கொஞ்ச காலம் நடிக்காம இருந்துட்டு திரும்பவும் நடிக்க வரும்போது அதற்கு நிறைய தடபுடல் இருக்கும். நான் என்ன நடிக்கவா செய்யறேன். அதனால என் ரீ என்ட்ரி க்கு எந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பும் தேவையில்லை (நீ கேட்டாலும் இங்க யாரும் குடுக்க தயாரில்லை).

என் தம்பியின் திருமணதிற்கு பின், என் கம்ப்யூட்டர் ரொம்பவே தொல்லை கொடுத்து விட்டது. நிறைய சர்வீஸ் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து விட்டு, அதனால தான் இதனால தான் என்று காரணம் சொல்லிவிட்டு போனார்கள். ஏதோ ஒரு அஜீத் படத்துல ஆட்டோ கண்ணாடிய திருப்பினா ஆட்டோ கிளம்புமே அந்த மாதிரி,"மேடம்!, உங்க கேஸ் அடுப்ப கொஞ்சம் நிறுத்துங்க !, அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும்!", ன்னு தான் யாரும் சொல்லலை.

அந்தளவுக்கு புதுமையான காரணங்கள் சொல்லப்பட்டன. அவ்வப்போது என் தம்பியின் லாப் டாப்பிலும், பிரௌசிங் சென்டரிலும் சென்று மெயில் மட்டும் பார்த்து வந்தேன். அப்போதெல்லாம் வலை உலகத்தில் என்ன நடக்கிறதோ தெரியவில்லையே என்ற ஏக்கம் பிடித்து வாட்டும். ஒரு சில தளங்களில் மட்டும் சென்று அவ்வப்போது சில கமெண்டுகளை தூவிவிட்டு போய் விடுவேன்.

இத்தனை நாட்களும் என்னை யாரும் தேடியிருக்க மாட்டார்கள் (தேடுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் பெரிதாக எழுதிவிடவில்லை).

இருந்தாலும், " நான் வந்துட்டேன்............!" என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ரீ என்ட்ரி யை ஒரு நல்ல செய்தியோடு ஆரம்பிப்போம் என்று எண்ணுகிறேன்.

சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாட பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. வரும் செப்டெம்பர் 11 ஆம் தேதி  (அன்று சுவாமிஜி சிகாகோவில் சொற்பொழிவாற்றிய நாள்) சென்னை கடற்கரையில் உள்ள ஸ்ரீ விவேகானந்தர் இல்லத்தில் மாலை நான்கு மணிக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. பெரிய தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். பின்னர், விவேகானந்தர் இல்லத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை  "தேசத்திற்காக ஓடுவோம்", என்ற  ஒரு ஓட்டம் (mass run ) நடைபெற உள்ளது. இதில் பதினெட்டு முதல் நாற்பது வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு ஓடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, எல்லோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேச பணியில் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.



வியாழன், மார்ச் 28, 2013

நீங்கள் சரித்திரம் படைப்பவரா?, இல்லை படிப்பவரா?

 தலைப்பில் உள்ள வார்த்தைகளை சமீபத்தில் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரையில் படித்தேன். அதாவது, நீங்கள் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் வகையில் ஏதாவது  சாதிக்க போகிறீர்களா ? அல்லது மற்றவர்களின் சாதனை சரித்திரங்களை படிக்கும் சராசரியாக வாழப்போகிறீர்களா என்பது தான் அந்த கட்டுரையின் மைய கருத்து.

என்னை கேட்டால் சரித்திரம் படைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால், கட்டாயம் சரித்திரம் படியுங்கள் என்பேன்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி படித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்னவென்றால் 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் மிக மோசமான ஆள் பற்றாக்குறை ஏற்படும், என்பது தான் அது.

சரித்திரம் மற்றும் அது சம்பந்தமான அகழ்வாராய்ச்சி கல்வி படித்தவர்கள் மிக குறைவான பேர்களே உள்ளதே இதற்கு  காரணமாம்.  சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரிகளில் பி .ஏ மற்றும் எம்.ஏ  படிப்புகள் மிகவும் அருகிவிட்டன. அவற்றில் சேர மாணவர்களே வருவதில்லையாம். இப்போதெல்லாம் professional courses எனப்படும் வேலை உடனடியாக கிடைக்க கூடிய படிப்புகளுக்கு தான் வரவேற்பு அதிகமாக உள்ளது.

தமிழில் எம்.பில் பட்டம் பெற்ற என் தோழிக்கு கல்லூரிகளில் வாய்ப்புகள்  மிகவும் குறைந்து விட்டது.


"ஏன் ? சரித்திரமோ, தமிழோ படிக்ககூடாதா?" அதனால் என்ன பிரயோஜனம் என்ற கேள்வி வருகிறது. நாமும் இருக்கிறோம் நம்மால் மட்டும் என்ன பிரயோஜனம்? நம் முந்தையரின் வீர சரித்திரங்களை படித்து அவற்றை போல, அவற்றை விட மேலானதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை  அந்த சரித்திரங்கள் தூண்டாதா?

ஏன், அறிவியல் தான் மேலானது என்றால், நியூட்டன்,எடிசன்,ஐஸ்டின் போன்றவர்களின் கண்டுப்பிடிப்புகளும் ஒரு இன்று  சரித்திரமே.

வெளிநாட்டில் வாழும் ஒரு உறவினரிடம் சரித்திர புகழ் பெற்ற மாவீரர் ப்ரிதிவிராஜ்  சௌஹானை  பற்றி சொல்லிகொண்டிருந்தேன். அவர் அதை ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு, அவரது பதின்ம வயது மகனிடமும் கூறியுள்ளார்.

அவரது மகன் அதைக்கேட்டு  ஆசர்யமடைந்து,"உண்மையாகவே இப்படியெல்லாம் நிகழ்ந்ததா அம்மா ?" என்று கேட்டு  கூகுளில் அவரது சரித்திரத்தை தேடி படித்து விட்டு, "அம்மா ! இத்தனை  காலமும் எனக்கு ப்ரிதிவிராஜ்  என்றால் சினிமா நடிகர் ப்ரிதிவிராஜை தான் தெரியும். ஆனால் அவரோ கதாநாயகனாக நடிப்பவர், அதற்கு பணமும் பெற்றுகொள்கிறார். ஆனால்  இந்த மாவீரரின் சரித்திரமோ மகத்தானதாக இருக்கிறது. இவரைப்பற்றிய அறிமுகத்தை நமக்கு தந்த சித்திக்கு  நன்றி சொல்லவேண்டும்." என்றானாம்.

நம் சரித்திரத்தை, நம் சந்ததியினர் படிக்க வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் சரித்திரத்தை நாம் கட்டாயம் படிக்கவேண்டும். எல்லா  படிப்புகளிலும் சரித்திரமும், தாய்மொழியும் கட்டாயம் ஒரு பகுதியாக ஆக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால், நம் சாதனைகளும் நாளை யாருக்கும் தெரியாமலே போய்  விடும். நம் சந்ததியினருக்கு நாம் யாரோவாகிவிடுவோம்.ஏனென்றால்,"நம் முந்தையர் வரலாற்றை கேட்கும் போது மூச்சில் புது சக்தி பிறக்கும் என்று பாரதியார் சொல்லிருக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன், சரித்திரம் படைக்க, சரித்திரம் படியுங்கள்.