வியாழன், மார்ச் 28, 2013

நீங்கள் சரித்திரம் படைப்பவரா?, இல்லை படிப்பவரா?

 தலைப்பில் உள்ள வார்த்தைகளை சமீபத்தில் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரையில் படித்தேன். அதாவது, நீங்கள் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் வகையில் ஏதாவது  சாதிக்க போகிறீர்களா ? அல்லது மற்றவர்களின் சாதனை சரித்திரங்களை படிக்கும் சராசரியாக வாழப்போகிறீர்களா என்பது தான் அந்த கட்டுரையின் மைய கருத்து.

என்னை கேட்டால் சரித்திரம் படைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால், கட்டாயம் சரித்திரம் படியுங்கள் என்பேன்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி படித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்னவென்றால் 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் மிக மோசமான ஆள் பற்றாக்குறை ஏற்படும், என்பது தான் அது.

சரித்திரம் மற்றும் அது சம்பந்தமான அகழ்வாராய்ச்சி கல்வி படித்தவர்கள் மிக குறைவான பேர்களே உள்ளதே இதற்கு  காரணமாம்.  சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரிகளில் பி .ஏ மற்றும் எம்.ஏ  படிப்புகள் மிகவும் அருகிவிட்டன. அவற்றில் சேர மாணவர்களே வருவதில்லையாம். இப்போதெல்லாம் professional courses எனப்படும் வேலை உடனடியாக கிடைக்க கூடிய படிப்புகளுக்கு தான் வரவேற்பு அதிகமாக உள்ளது.

தமிழில் எம்.பில் பட்டம் பெற்ற என் தோழிக்கு கல்லூரிகளில் வாய்ப்புகள்  மிகவும் குறைந்து விட்டது.


"ஏன் ? சரித்திரமோ, தமிழோ படிக்ககூடாதா?" அதனால் என்ன பிரயோஜனம் என்ற கேள்வி வருகிறது. நாமும் இருக்கிறோம் நம்மால் மட்டும் என்ன பிரயோஜனம்? நம் முந்தையரின் வீர சரித்திரங்களை படித்து அவற்றை போல, அவற்றை விட மேலானதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை  அந்த சரித்திரங்கள் தூண்டாதா?

ஏன், அறிவியல் தான் மேலானது என்றால், நியூட்டன்,எடிசன்,ஐஸ்டின் போன்றவர்களின் கண்டுப்பிடிப்புகளும் ஒரு இன்று  சரித்திரமே.

வெளிநாட்டில் வாழும் ஒரு உறவினரிடம் சரித்திர புகழ் பெற்ற மாவீரர் ப்ரிதிவிராஜ்  சௌஹானை  பற்றி சொல்லிகொண்டிருந்தேன். அவர் அதை ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு, அவரது பதின்ம வயது மகனிடமும் கூறியுள்ளார்.

அவரது மகன் அதைக்கேட்டு  ஆசர்யமடைந்து,"உண்மையாகவே இப்படியெல்லாம் நிகழ்ந்ததா அம்மா ?" என்று கேட்டு  கூகுளில் அவரது சரித்திரத்தை தேடி படித்து விட்டு, "அம்மா ! இத்தனை  காலமும் எனக்கு ப்ரிதிவிராஜ்  என்றால் சினிமா நடிகர் ப்ரிதிவிராஜை தான் தெரியும். ஆனால் அவரோ கதாநாயகனாக நடிப்பவர், அதற்கு பணமும் பெற்றுகொள்கிறார். ஆனால்  இந்த மாவீரரின் சரித்திரமோ மகத்தானதாக இருக்கிறது. இவரைப்பற்றிய அறிமுகத்தை நமக்கு தந்த சித்திக்கு  நன்றி சொல்லவேண்டும்." என்றானாம்.

நம் சரித்திரத்தை, நம் சந்ததியினர் படிக்க வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் சரித்திரத்தை நாம் கட்டாயம் படிக்கவேண்டும். எல்லா  படிப்புகளிலும் சரித்திரமும், தாய்மொழியும் கட்டாயம் ஒரு பகுதியாக ஆக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால், நம் சாதனைகளும் நாளை யாருக்கும் தெரியாமலே போய்  விடும். நம் சந்ததியினருக்கு நாம் யாரோவாகிவிடுவோம்.ஏனென்றால்,"நம் முந்தையர் வரலாற்றை கேட்கும் போது மூச்சில் புது சக்தி பிறக்கும் என்று பாரதியார் சொல்லிருக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன், சரித்திரம் படைக்க, சரித்திரம் படியுங்கள்.