ஞாயிறு, ஜூன் 24, 2012

"EGO", you go ! (Let it go !)

தலைப்பை பார்த்தவுடனேயே எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும். ஆமாங்க, இந்த "ஈகோ" ன்னு ஸ்டைலா ஆங்கிலத்தில் சொல்லப்படற விஷயம் என்னன்னு ரொம்ப நாளா யோசிச்சிகிட்டே இருந்தேன். 

"ஈகோ" ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு என்னோட ஈகோவை விட்டுவிட்டு ஆங்கில அகராதியை புரட்டிப்பார்த்தேன். அதுல "நான் என்னும் அகங்காரம்" அப்படின்னு அர்த்தம் போட்டிருந்தது.

"நான்" என்னும் எண்ணம் அழிய வேண்டும் அதுவே மனிதன் உயர்வதற்கான வழின்னு எல்லா பெரியவங்களும் சொல்லியாச்சு. ஆனா,"நான் தான் பெரியவன் "ன்னு சண்டை வராத இடமே இல்லைன்னு தான் தோணுது.

இந்த விஷயத்துல்ல எனக்கு தோணினதை சொல்லலாமென்று நினைக்கிறேன்.

இந்த "ஈகோ"வால வீட்ல,ஆபீஸ்ல,பொது இடத்துல எங்க சண்டை வந்தாலும் அதனால வேலை பாதிக்கபடுது,உறவுகள் பாதிக்கப்படுது.


அதனால, "நான்" முக்கியமில்லை. இப்போ இந்த வேலை நல்லவிதமா முடியணும் அதுதான் முக்கியம் அப்படிங்கிற பொறுப்புணர்ச்சி வந்துட்டா ஆட்டோமட்டிக்கா நாம விட்டுகொடுக்க தயாராகி விடுவோம்.


முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா,செயல்படுத்தி பார்த்தால் அதனால விளையற நன்மைகளை பார்க்கும்போது நமக்கே விட்டுகொடுக்கிறது ஒண்ணும் பெரிய தியாகமில்லை, இதில் நம் தன்மானம் எதுவும் குறைஞ்சிட போறதில்லைன்னு புரியும். 

யாராவது நம்மிடம் அகங்காரத்தோடு பேசினால் அவர்கள் சொல்லவதை அப்படியே ஏற்று கொண்டுவிடுங்கள். உதாரணத்திற்கு, "சிகாகோ  ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது." என்று ஒருவர் உங்களிடம் அடித்து பேசுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்," ஆமாமாம், ரொம்ப கரெக்ட்!", என்று சொல்லிவிட்டு வந்து உங்கள் ஸீட்டில் உட்கார்ந்து மனசுக்குள் சிரித்து கொள்ளுங்கள். அதோடு அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள். 


நாம் அப்படியெல்லாம் இல்லையே என்று எதிர்த்து பேசினால் அவர்கள் வீம்பு தான் அதிகமாகும்.அதுவுமல்லாமல் அட்லஸை எடுத்துவந்து சிகாகோ ஆப்ரிக்காவில் இல்லை என்பதை நிரூபிக்க முயலாதீர்கள். அவர்கள் தோல்வி அடைந்ததாகவும், அவமானபடுத்தப்பட்டதாகவும் எண்ணக்கூடும். அதனால், உங்கள் மேல் அவருக்கு வெறுப்பு வளரக்கூடும்.  அவருடனான உறவு பாதிக்கப்படுவதால் உங்களுக்கு அவரிடமிருந்து எப்போதாவது ஏதாவது  உதவி தேவைப்பட்டால் அப்போது அது உங்களுக்கு கிடைக்காமல் போகக்கூடும்.

அப்படியல்லாமல் நாம் பேசாமல் இருந்து விட்டால் ,கால போக்கில் அவர்கள் கருத்து தவறு என்பது பின்னர் வரும் சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டு விடும். அத்தோடு, "அவரா ரொம்ப  தங்கமான மனுஷன் யாரையும் ஒண்ணுமே சொல்லமாட்டார்." என்ற நற்சான்றிதழும் உங்களுக்கு இலவச இணைப்பாக கிடைக்கும்.


அதே போல் நம் கருத்து தவறாக இருந்தாலும் யார் சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

இவற்றோடு மிக முக்கியமாக நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மை நாமே கிண்டல் செய்து கொள்ள தயாராக இருந்தால் தான் நம் ஆணவம் அழியும். ஆணவம் அழியும் போது பிறரிடம் கற்றுக்கொள்ளும் எண்ணம் வளரும். பிறரிடம் நமக்கு தெரியாததை கற்றுக்கொள்ளும் போது அறியாமை நீங்கி அறிவு வளரும். அறிவு விசாலப்படும் போது வெற்றிக்கான வழி திறக்கும்.


இந்த விஷயம் ரொம்ப பெரிசு ஒரு பதிவுல இதபத்தி எழுதி முடிக்க முடியாது. அதனால ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கேன். விஷயம் தெரிஞ்சவங்க சொன்னா தெரிஞ்சுக்க தயாரா இருக்கேன்.


இப்போ ரொம்ப வருஷம் முன்பு நான் படிச்ச, மறக்க முடியாத ஒரு ஜோக் இங்கே:




பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :

டாக்டர் (பைத்தியத்திடம்) : என்ன எழுதற ?

பைத்தியம் : லெட்டர்.

டாக்டர் : யாருக்கு?

பைத்தியம் : எனக்கு தான்.

டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?

பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.

(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))



திங்கள், ஜூன் 11, 2012

என் விரு(ழு )துகள்

நாம் ஆதர்சமாய் நினைக்கும் நபர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படுவதே ஒரு பெரிய அதிர்ஷ்டம் தான். அவர்களிடமிருந்தே பாராட்டும் விருதும் கிடைப்பதென்றால் ....!!! விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அப்படிபட்ட ஒருவரிடமிருந்து இப்போது எனக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது. ஏற்கனவே பிப்ரவரி மாதம் மதுராகவி ரமாஜி ஒரு விருது கொடுத்தார். விருது பெற்றால் என்ன செய்யவேண்டும் என்று கூட சரியாக தெரியாததால் வழக்கம்போல் குழம்பிக்கொண்டே இருந்துவிட்டேன். இது தான் அந்த விருது.



நன்றி ரமாஜி !

இந்த முறை விருது வழங்கி இருப்பவர் திருமதி.உஷா ஸ்ரீகுமார் அவர்கள். மங்கையர் மலரில் இவர்களின் பதிவுகளை பல வருடங்களாக படித்திருக்கிறேன். இவரது கலை பயிற்சிகள் பலவற்றை வீட்டில் செய்து பார்த்திருக்கிறேன்.

இவர்கள் மகனை பள்ளியில் சேர்க்க நேர்காணலுக்கு தயார் செய்ததை பற்றி நகைச்சுவையாக ஒரு முறை எழுதி இருந்தார். "எத்தனை முறை சொல்லி கொடுத்ததும் அவனுக்கு உன் அம்மா பெயர் என்ன என்று கேட்டால் "உச்சா தீகுமார் " என்று தான் சொல்லவந்தது." (என்ன சரியா மேடம் ?, அந்த உங்கள் மகன் இப்போது என்ன செய்கிறார்?)

திருமதி.உஷா ஸ்ரீகுமார் அவர்கள் கொடுத்த விருது.


விருது பெறுபவர்களுக்கு சில விதிகள் சொல்லபட்டிருக்கின்றன.
அவர்கள் தங்களை பற்றி சில வார்த்தைகள் மூலம் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். விருது கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதுகளை பகிர்ந்தளிக்க வேண்டும்.

உஷா மேடம் !

இந்த விருதுக்கு நான் தகுதியானவள் தானா என்ற குழப்பம் இன்னமும் நீடித்தாலும், "பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று முதலில் நம்பவேண்டும்" என்று என் அம்மா சொல்வார். அதனால்  எழுத்துலகில் பலவருடங்களாக அனுபவமுள்ள நீங்கள் தருவதை பணிவோடு பெற்றுக்கொள்கிறேன். நன்றி மேடம் !

இப்போது என்னை பற்றி :

என்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.

ஒரு மத்தியதர குடும்பத்தின் தலைவி. ஆனால், நான் பிறந்த இந்த நாட்டிற்கு எதாவது உருப்படியாய் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு (எழுபத்தி ஐந்து ரூபாய் ). அது தான் என் அங்கீகரிக்கபட்ட முதல் எழுத்து பணி .

2010இல் மங்கையர் மலரில் வெளியான அரை பக்க கட்டுரை.

இப்போது ஒரு வருடமாக வலைத்தளத்தில் எழுதி கொண்டிருக்கிறேன்.

வாழ்வின் மிக கடினமான சமயத்தில் என் தலைவன் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி வைத்தார். என் அக்கா, "உனக்கு நன்றாக எழுதவருகிறது. நீ பிளாக்கர் இல் எழுதேன்." என்ற போது பிளாக்கர் என்பது ஏதோ பர்கர் போன்ற வெளிநாட்டு தின்பண்டம் என்று நினைத்துவிட்டேன். :)))

நான் வலைத்தளத்தில் எழுதி இந்த இடத்தில் இருப்பேன் என்று ஒரு வருடம் முன்பு யாரவது சொன்னால் நிச்சயமாக நம்பியிருக்க மாட்டேன். எனக்கு ஊக்கமளித்து வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்.

இந்த விருதை பகிர்ந்து கொள்ளும் பதிவர்கள்.

under the mango tree : இவரை என் தமக்கை என்பதால் இங்கே முன்மொழியவில்லை. விருது பெறுவதற்கான எல்லா தகுதிகளும் உடைய பல்துறை நிபுணத்துவம் பெற்றவர். இவரை வலையுலகத்தில் அறிமுகம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன். அக்கா, "நீங்கள் உங்கள் வசதிப்படி ஆங்கிலத்திலேயே எழுதலாம்."

மதுராகவி : நானும் இவரும் ஒரே சமயத்தில் தான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தோம். ஒரு புத்தகமாவது எழுத வேண்டும் என்பது அவர் லட்சியம் என்று ஒருமுறை எழுதி இருந்தார். அப்போது தான் எனக்கு தோன்றியது, "ஆஹா ! இத்தனை பெரிய இலட்சியங்களோடு இவர்கள் வாழும்போது நாம் அடுத்த வேளை சமைப்பதை தவிர வேறு சிந்தனைகள் இல்லாமல் வாழ்கிறோமே", என்று.

தக்குடு : என் சகோதர்களில் ஒருவன். இவன் எழுத்துக்களை படித்தால் எல்லோருக்கும் இவனை "எங்கள் வீட்டு பிள்ளை" என்று சொல்ல தோன்றும். நக்கல்,குறும்பு மட்டுமல்ல ஆன்மீகத்தையும் ரசிக்கும்படி எழுதவல்லவன்.

தம்பி!, உன்னை ஒருமையில் குறிப்பிட்டிருப்பதை நீ பொருட்படுத்த மாட்டாய் என்று நினைக்கிறேன்.

கவிநயா : வலையுலகத்தில் புகுந்த புதிதில் பரதத்தை பற்றி அறிய தேடி அலைந்த போது இவர்களின் தளத்திற்குள் புகுந்து விட்டேன். ஆன்மீகத்தை எப்படியெல்லாம் கடைப்பிடிக்க முடியும் என்று இவர்களை பார்த்து தான் தெரிந்து கொள்ளமுடியும். கவிதையால்,நடனத்தால், கட்டுரைகளால், வாழ்க்கை முறையாலும் ஆன்மிகம் வளர்க்கிறார் இவர்.

எல்.கே : "அதீதம்" இணைய பத்திரிகையின் ஆசிரியர். தொழில் நுட்ப செய்திகைளை தந்து மிகவும் உதவியாக இருக்கிறார். இவர் தனது மகளை ஆச்சர்யத்துடன் நோக்கி எழுத்தும் பதிவுகள் சுவாரசியமானவை.

விருதை என்னோடு பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.


வியாழன், ஜூன் 07, 2012

என் தலயின் தலையெழுத்து

அம்பது ரூபாய் பொருளை "பார்டி நைன் ருபீஸ் பிப்டி பைஸ்னா தாங்க !" என்று பேரம் பேசி வாங்கியதையே பெருமையாக நினைக்கும் சென்னை நகரத்து அப்பாவி யுவதிக்கும், அதே அம்பது ரூபாய் பொருளை அடித்து பேரம் பேசி ஐந்து ரூபாய்க்கு வாங்கும் கிராமத்து சாமர்த்தியசாலி இளைஞனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டதை விதியின் விளையாட்டு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது...!

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று இழுக்கும் என்ற அறிவியல் விதிகேற்ப நானும் என் தலயும் சேர்ந்துவிட்டோம்.


ஆனாலும், அவரது தன்னம்பிக்கை அலாதியானது. என்னை மாதிரி ஒரு செலவாளியையும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற அவரது உறுதியான நம்பிக்கையை என்னவென்று சொல்வது. 

நான் செய்தாலே அது அனாவசிய செலவாகத்தான் இருக்கும் என்பது அவரது திடமான எண்ணம். "இப்போதெல்லாம் நான் அப்படி இல்லை திருந்திவிட்டேன்." என்று நானே சொல்லியும் ஒரு பயனும் இல்லை.

"நகை வாங்கினால் கல் வைத்த நகை வாங்க கூடாது அதை திரும்ப போட்டால் நிறைய நஷ்டம் வரும்." என்று சொல்லி என் கல் நகை அணியும் ஆசையில் கல்லை தூக்கி போட்டு விடுவார்.

ஒரு முறை என் தங்கையிடம், "அத்திம்பேருக்கு கல் நகையே பிடிக்காது, அத போட்டா பாதி கூட தேராதும்பார்." என்று நான் சொல்லவும் அவளோ அப்பாவியாக "நகையை போட்டுண்டா ஏன் தேறாது ?" என்று புரியாமல் விழிக்க. நான் "இப்படி போட்டுண்டா இல்ல (கழுத்தை சுற்றி காண்பித்து ) இப்படி போட்டா" என்று துர எறிவது போல் சைகை காட்டவும் "ஐயோ ! வாங்கும் போதே யாராவது போடறத பத்தி யோசிப்பாளா ?" என்று அதிர்ச்சியாகி விட்டாள் . 

காஸ் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாங்கிய ஒரு காஸ் அடுப்பு. அதை தூக்கி தினமும் தேய்க்கும் எனக்கு வெய்ட் லிப்டிங்கில் தங்க பதக்கமே கொடுக்க வேண்டும். அதை மாற்றி தரசொல்லி நானும் தர்ணா போராட்டமெல்லாம் நடத்தியாகிவிட்டது.

ஒரு கால் உடைந்து ஒரு பக்கமாய் குடைசாய்ந்து இருக்கும் ஒரு எலெக்ட்ரிக் ரைஸ்குக்கர். குழந்தைகளின் புழுக்கை பென்சில்களை அதற்கு அண்ட கொடுத்துத்தான் அதில் சாதமே சமைக்க வேண்டும். 

இதையெல்லாம் மாற்றி தர சொன்னால் அது அனாவசிய செலவாம் . "ஏன் ? வெடிக்காம,வடிக்கரதொல்யோ ? அது போறாதா ? " ன்னு வேற எடக்கா ஒரு கேள்வி.

கடைசியில் ஊரிலிருந்து வந்த அவரின் ஒன்று விட்ட அக்கா, ஒன்று விட்ட தம்பியின் மனைவி எல்லோரும் "எப்படி இதுல சமைக்கிறேங்க !?" என்று கேட்க ஆரம்பிக்கவும், "சரி இப்படியே விட்டா இதுவே இவளோட சாதனையா ஆனாலும் ஆகிடும்ன்னு", பயந்து புதுசா காஸ் அடுப்பும்,ரைஸ் குக்கரும் வாங்கறதுக்கு ஒத்துகிட்டார்.

முதல்ல விவேக்ஸ் தான் போனோம். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் அங்கே இருந்த எல்லா டிவிலையும், "வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு" என்று பாட ஆரம்பித்து விட்டது.

"ஏம்ப்பா, பொண்ணுங்க காதல் வேண்டாம்ன்னா ,பின்ன வேற யார காதலிப்பாங்க..!?" என்று அப்பாவியாய் டௌட் கேட்ட என்னை ஒரு முறை முறைத்து விட்டு, "ம்ம்ம்ம்.... அந்த பாட்டு உனக்கில்ல எனக்கு", என்றார் கோபமாக.

அங்கே ரைஸ் குக்கரை செலக்ட் செய்து கொடுத்து விட்டு நான் பராக் பார்க்க போய்விட்டேன். அவரிடம் மாட்டிகொண்ட சேல்ஸ் லேடி பாவம். கையில் துண்டு போட்டு பேரம் பேசாத குறையாய் நன்றாக கல்லில் நார் உரித்து கொண்டிருந்தார்.

பின்னர் எல்லாம் முடிந்து எடுத்தாரே அந்த கிப்ட் கூப்பனை,பாவம் அந்தம்மா. என்னிடம் வேறு இரகசியமாக "நாம இந்த கடைக்கு ஏன் வந்தோம்கிற விஷயம் இப்பத்தான் அந்தம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் இல்ல..!?" என்று வேறு சொல்லி சிரிக்கிறார்.

அடுத்தது, தாம்பரம் சரவணாஸ் போனோம். இங்கு காஸ் அடுப்பு வாங்க. ப்ரெஸ்டிஜ் அடுப்பு நன்றாக இருந்தது. ஆரம்பித்து விட்டார் "அது காஸ்ட்லி
வேற வாங்கிக்கோ" என்று ஒரே தொனப்பல்.

"மனைவிய ரொம்ப நேசிக்கிறவங்க ப்ரெஸ்டிஜ் வேணாமுன்னு சொல்ல மாட்டாங்க" இந்த விளம்பரத்த நீங்க பார்த்ததில்ல....?

"நான் நேசிக்கலடி, எனக்கு ப்ரெஸ்டிஜ் வேணாம்."

"என்ன சொன்னீங்க....!?" (கர்ர்ர்ரர்ர்ர்.....)

"ஏய் ! கோவபடாதப்பா ரெண்டு பர்னர் இருக்கிறது வாங்கிக்கோ போரும், மூணு பர்னர் அடுப்புக்கும் ரெண்டு பர்னர் அடுப்புக்கும் ஆயிரம் ரூபாய் வித்தியாசம் வருது, ஒரு பர்னருக்கு ஆயிரம் ரூபாயா...! :((" என்று கெஞ்சி எல்லாம் பார்த்தார்.


"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா" என்று கேட்கும் கவுண்டமணி போல் "மூணு பர்னரே தான் வேணுமா,"ன்னு எல்லாம் கேட்டு பார்த்தார்.


"நான் என்ன அடுப்பு மேல நின்னுண்டு டான்சா ஆடபோறேன், உங்களுக்கு சமைச்சு போடத்தானே கேட்கிறேன். மூணு பர்னர் அடுப்பும், ரைஸ் குக்கரும் இருந்தா ஸ்கூல் திறந்த உடன் ரொம்ப உபயோகமா இருக்கும்." என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன்.



நான் சண்டித்தனமாக மண்டையை ஆட்டுவதை பார்த்த அந்த சேல்ஸ் மேனுக்கு மனசுக்குள் ஒரே வானவேடிக்கை தான். "ஹையா ! இந்தம்மா புடிவாதம் புடிக்க ஆரம்பிசிடிச்சு விலை எப்படி இருந்தாலும் இந்த ஆளு வாங்கித்தான் ஆகணும் என்று ஒரே குஷி. அது அவன் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.

விவேகில் பிடித்ததை எல்லாம் சரவணாசில் விட்ட எரிச்சலோடு, அழுது கொண்டே வாங்கி கொடுத்தார்.

வீடு வந்து சேர்ந்த போது என் உடன்பிறப்பு வீட்டு வாசலில் காத்திருந்தான். கைநிறைய சாமான்களோடும், முகம் நிறைய பூரிப்போடும் வந்த என்னை பார்த்த அவன் கண்களில், உலக கோப்பையை வென்று வந்த மகளை பார்க்கும் ஒரு தந்தையின் பெருமிதம் தெரிந்தது.

"ஐ..அத்திம்பேர் உனக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்திருக்காரே அக்கா வெரி குட்..!" என்றவனிடம்,

"உன் அக்காவ அங்கேயே விட்டுட்டு வந்திருப்பேன், ஆனா சொல்லமுடியாது, அங்கிருந்து கால் டாக்ஸி புடிச்சு வந்திட்டு, அதுக்கும் ஐந்நூறு ரூபாய் குடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவா, அப்புறம் அதையும் நான் தானே அழணும்னு தான் கதறி அழுதுகிட்டே எல்லாத்தையும் கேட்ட மாதிரியே வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்துட்டேன்." என்றவரை பார்க்க பரிதாபமாக தான் இருந்தது.

பின் குறிப்பு : காஸ் அடுப்பும், எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரும் நன்றாக வேலை செய்கிறது.

படங்கள் உதவி : google.