புதன், நவம்பர் 16, 2011

தங்கச்சி பாப்பா பிறந்தநாள் (நவம்பர் 19)





"ஐயோ பாவம் நீ !, பேர்சொல்ல உனக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே?"

நான் மனதிற்குள் :  "இங்கே எனக்கு என்ன சாம்ராஜ்ஜியமா இருக்கிறது , அடுத்த  பட்டத்திற்கு இளவரசன்  இல்லாமல் தவிப்பதற்கு?"

"பையன் தான் வச்சு சோறு போடுவான்."

நான் மனதிற்குள் :      "நான் என்ன நாயா..? பூனையா...? என்னை வச்சு ஒருத்தர் சோறுபோட.இல்ல எல்லா பையன்களும் அவங்க அவங்க அப்பா அம்மாவ வச்சு சோறு போட்டுகிட்டு தான்  இருக்காங்களா?"

"உனக்கு ஆம்பள பையன் இல்லையே யாரு கொள்ளி போடுவா? யாரு கர்மா பண்ணுவா?" பாவம் பண்ணினவங்களுக்கு தான் கர்மா பண்ண புள்ளைல்லாம இருக்குமாம். ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சேன்."

நான் மனதிற்குள் : அந்த கவலை உங்களுக்கெதற்கு? என் பாவத்தையும் புண்ணியத்தையும் கணக்கு பண்ண நீங்கள் என்ன சித்ரகுப்தனா? பையன் இருக்கிரவங்களுக்குமே அவங்க செத்ததுக்கப்புறம், யாரு கொள்ளி போடறங்கன்னு  தெரியாது. அதைப்பற்றி எனகென்ன கவலை."


இதை யாரும் தயவு செய்து கற்பனை என்று எண்ணி விட வேண்டாம். இப்படியெல்லாம் அடுத்தவர் மனதை புண்படுத்துவதற்காகவே பேசுபவர்கள்  இன்னமும் நிறையவே இருக்கிறார்கள். நான் அவர்கள் பேசுவதை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.


"குழந்தை பெறுவதில் அல்லது ஆண் குழந்தை பெற்றதில் உங்கள் சாதனை என்ன?" என்று கேட்கவேண்டும் என்று நினைப்பேன் .ஆனால், இவர்களுடன் விவாதம் செய்வதை விட இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டேன்.

என்னிலை எவ்வளவோ மேல். இளம் விதவையான ஒரு தோழியும், குழந்தை இல்லாத ஒரு தோழியும் படும் அவமானங்கள் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.

அவர்கள் தங்கள் நிலையை என்னிடம் சொல்லி வருந்திய  போது அவர்களிடம் நான் கேட்ட கேள்வி இது தான்," உங்களுக்கு ஜான்சி ராணி லக்ஷ்மி பாயை தெரியுமா?"

"தெரியும்"

"யார்?"

"சுதந்திர போரட்ட வீராங்கனை."

"அப்படியானால் ஜான்சி ராணி என்றதும் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது?"

"அவர்களின் வீரமும், தேச பக்தியும்."

"அவர்களுக்கு குழந்தை இல்லை(ஒரு மகன் பிறந்து சிறிது நாட்களிலேயே இறந்து விட்டது) என்பதும், அவர்கள் விதவை என்பதும் நினைவிற்கு வரவில்லையல்லவா?"

"!!!!!!!!!!"

நாம், நம் செயல்களினாலேயே அறியபடுகிறோம். நம் பாக்யங்களினால் அல்ல .

வாழ்கையில் உருப்படியாய் ஏதும் சாதிக்காதவர்கள் தான், தன் பாக்யங்களையே தன் சாதனைகள் போல் காட்டிகொள்வார்கள்.

ஜான்சி ராணி காசியில் ஒரு அந்தண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இளம் வயதிலேயே போர் கலைகள் பயிற்சி மற்றும் கல்வியறிவும் பெற்றிருந்தார். ஜான்சியின் மகாராஜா கங்காதர் ராவ் லக்ஷ்மி பாயை அவர் வீரம், அறிவு, அழகு,குணம் ஆகியவற்றை விரும்பியே மணந்தார்.

ராணி லக்ஷ்மி பாயின் இயற்பெயர் மணிகர்ணிகா, செல்லமாக மனு. மனுவிற்கு ராஜா கங்காதர் ராவ்வுடன் திருமணம் நடந்த போது அவர் பதிமூன்று வயது குட்டி பெண் (இந்த காலமாக இருந்தால் அம்மா கட்டிகொடுக்கும் லஞ்ச்சை எடுத்து கொண்டு ஸ்கூல் போகும். ஏழாவதோ, எட்டாவதோ படித்து கொண்டிருந்திருப்பார்). 

ஆனால், மனு குட்டி அந்த வயதிலேயே ஒரு ராஜ்ஜியத்தின் மகாராணி பொறுப்பை ஏற்றார். 


சொத்திற்காக புகுந்த வீட்டில் கலகம் செய்யும்  பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், ராணி லக்ஷ்மி பாயோ தன் கணவரின் ராஜ்யதுக்காக அந்நியர்களுடன் தான் போர் புரிந்தார், குடும்பத்துக்குள் அல்ல.

மகாராஜா கங்காதர் ராவ் இறந்த பின் ஜான்சி மக்களை தன் சொந்த குழந்தைகளை போலவும், ஜான்சியை தன் உயரினும் மேலாகவும் காத்தார் என்பது வரலாறு சொல்லும் செய்தி.

அந்த  காலத்தில், கணவன் இறந்து விட்டால் உடன் கட்டை ஏறுவார்கள். இந்த காலத்தில் பிறந்த வீட்டிற்கு போய் விடுவார்கள். ஆனால், லக்ஷ்மி பாயோ தன் கணவரின் விருப்பப்படி அவர்கள் ச்விகார  புத்திரனை அரியணையில் அமர்த்தினார். அதற்கு எதிர்ப்பு வந்த போது மகனை முதுகில் சுமந்தபடி போர்களத்தில் பாய்ந்தார்.

பெற்ற குழந்தையையே ஆயாவிடம் விட்டு செல்லும் பெண்களும் உண்டு. ராணி நினைத்திருந்தால் யாராவது தாதியிடம் குழந்தையை விட்டு விட்டு போருக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

மகாராணி லக்ஷ்மி பாய் இந்த உலகத்தில் வெறும் இருபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்(இளம் பெண்). அவரை விட இரண்டு மூன்று மடங்கு அதிக வருடங்கள் வாழ்ந்து எத்தனை பேர் சாமானியர்களாகவே மடிகிறோம்.

இதுபோன்ற தலைமை பண்புகள் இயல்பிலேயே அமைய பெற்ற மகாராணி லக்ஷ்மி பாயை என் ஆதர்ச தலைவியாக எண்ணுகிறேன். 

எனவே, நம்  பாக்கியங்களை குறித்து நினைக்காமல், நம் செயல்களை திருத்திக்கொண்டு, நம் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆகிக்கொள்ளவேண்டும்.

" வாழ்பவர் கோடி, மறைபவர் கோடி 
 மக்களின் மனதில் நிற்பவர் யார் ?"

"மாபெரும் வீரர், மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்."




                                               *************************




டெயில் பீஸ் : தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு. 

என் பெரியவளிடம் "நவம்பர் 19 உன் தங்கச்சி பிறந்த நாள்" என்று சொன்னால். 

"ஜான்சி ராணிக்கும் அன்றைக்கு தான் பிறந்த நாள்" என்று சட்டேன்று சொல்லுவாள். 

"சபாஷ் மகளே !"


11 கருத்துகள்:

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் மேடம் உங்கள் தளத்திற்கு இன்றுதான் முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கும் படி இருக்கின்றன.இனி தொடர்ந்து வருவேன்

ஜான்சி ராணியை உதாரணம் காட்டி சொன்ன விதம் அருமை...எனக்கும் ஜான்சி ராணியை மிகவும் பிடிக்கும்

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஜான்சி ராணி பற்றி விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது.அவரை உதாரணம் காட்டி சொன்னவிதம் நல்லா இருக்கு.

Kavinaya சொன்னது…

//"அப்படியானால் ஜான்சி ராணி என்றதும் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது?"

"அவர்களின் வீரமும், தேச பக்தியும்."

"அவர்களுக்கு குழந்தை இல்லை(ஒரு மகன் பிறந்து சிறிது நாட்களிலேயே இறந்து விட்டது) என்பதும், அவர்கள் விதவை என்பதும் நினைவிற்கு வரவில்லையல்லவா?"//

வாவ். கலக்கல்!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அருமையான் கருத்து.

//நாம், நம் செயல்களினாலேயே அறியபடுகிறோம். நம் பாக்யங்களினால் அல்ல//

உண்மை.அழகாக சொல்லியிருக்கீங்க.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தானைத்தலைவி,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

சுசி சொன்னது…

@ K.S.S.Rajh : நன்றி தம்பி ! தங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும். என் எழுத்துக்கள் பெரும்பாலும் ஆன்மிகம் மற்றும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கும். அது இளைஞரான உங்களுக்கு பிடித்திருப்பதில் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

@ Lakshmi amma : நன்றி மாமி!, ஜான்சி ராணிக்கும் உங்களுக்கும் பெயர் பொருத்தம் மட்டுமில்லை பல விஷயங்களிலும் ஒற்றுமை இருக்கிறது, இல்லையா? என் அத்தைக்கும் அப்படி தான்.

@ Kavinaya : நன்றி கவிநயா ! பல நாட்களாக என் மனதில் இருந்த ஒன்று அன்று எழுத்துகளாக வெளி வந்துவிட்டது.

@ Ramaji : நன்றி ரமாஜி ! வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துவது என்றால் என்ன ?சத்தியமாக எனக்கு தெரியாது. தயவு செய்து விளக்கவும். அந்த தளத்தில் சென்று பார்த்தேன், எனக்கு ஒன்றும் புரியவில்லை. "followers widget" இணைப்பது எப்படி என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தானைத்தலைவி.

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_20.html

மேலே கொடுத்துள்ள லிங்க்குக்கு போய் பார்க்கவும்.வலைச்சரம் பற்றி அறிய முடியும்.அங்கு ஒவ்வொரு வாரமும் ஒருவர் ஆசிரியராக பணி புரிய அழைக்கப்படுவர்,அப்படி அழைக்கப்படுபவர் 7 நாட்களில் தான் படித்து ரசித்த பதிவுகளை அறிமுகப்படுத்தலாம். எனக்கு அந்த சந்தர்பம் 14-11-11 லிருந்து ஒரு வாரத்துக்கு கொடுக்கப்பட்டது.அப்பொழுது நான் உங்க பதிவையும் அறிமுகம் செய்தேன்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தானைத்தலைவி,

http://maayaulagam-4u.blogspot.com/2011/10/follower-widget.html

இன்கே கொடுத்துள்ள லிங்க்குக்கு போய் பார்க்கவும்.மாய உலகம் பதிவர்,ராஜேஷ் அழகாக followers widget பற்றி விளக்கியுள்ளார்,நீங்களும் உங்க பதிவுல இணைத்துக்கொள்ளலாம்.

பெயரில்லா சொன்னது…

romba nandri ramaji, poi parthuten romba santhosam. blog asiriyar panikku vazhthukkal. computer repair athodu konjam busyum kooda. seikirame thirumbi varuven.

T.Thalaivi

ஹுஸைனம்மா சொன்னது…

இந்தக் காலத்திலயும் பையன்தான் வேணும்னு பேசறாங்களா?!! “பொண்ணு வேணும்”கிறதுதானே இப்பத்திய ட்ரெண்ட்!!

ஜான்ஸி குறித்த உங்கள் கண்ணோட்டம் - சபாஷ்!! நன்றி.

சுசி சொன்னது…

@ ஹுசைனம்மா : தன்னிடம் என்ன உள்ளது என்பதல்ல அவர்கள் பிரச்சனை. மற்றவர்களிடம் என்ன உள்ளது, என்ன இல்லை என்பது தான் அவர்கள் சிந்தனை.

எல்லோரிடமும் சிலது இருக்கும் பலது இருக்காது. இவர்களுக்கு மற்றவர்களின் achievements கண்களுக்கு உறுத்தலாக இருக்கும். அதற்காக அவர்களிடம் இல்லாதவற்றை highlight செய்து தன்னை திருப்தி செய்து கொள்ளும் அதே நேரத்தில் அவர்களையும் புண்படுத்தி விடுவார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு வயதான தம்பதி. அவர்களுக்கு திருமணமாகி ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், அந்த அம்மையாருக்கு கண் தெரியாது.

"அப்ப்பா!, திருமணமாகி ஐம்பது வருடங்களா....!? இருவரும் எத்தனை இன்ப துன்பங்களை பார்த்திருப்பார்கள்." என்று நான் சொன்னபோது.

இன்னொரு பெண்மணி,"ஆமா ! என்ன பிரயோஜனம் ? அவளுக்கு தான் கண்ணு தெரியாதே ?" என்று எரிச்சலோடு சொன்னார்கள்.

அவர்களின் positive விஷயம் எரிச்சலை ஏற்படுத்தியதால் அவர்களின் குறையை highlight செய்தார்கள்.

எனவே தான் இவற்றை கண்டுகொள்ளவே கூடாது என்று எழுதினேன்.


உங்கள் ஹஜ் யாத்திரை எப்படி இருந்தது?