செவ்வாய், செப்டம்பர் 20, 2011

சர்வம் சக்திமயம் பாரு!



கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" நூலில் படித்தது இது.

பிரம்ம தேவரிடம் போய் ஒருவர் கேட்டாராம், "சிவன் பாதி, சக்தி பாதி சேர்ந்து அர்த்தநாரீஸ்வர வடிவமாகியது சரிதான். ஆனால் சிவனின் மறுபாதியும் சக்தியின் மறுபாதியும் எங்கே போயின..?"

பிரம்ம தேவர் சொன்னாராம், "சிவனின் மறுபாதியும் சக்தியின் மறுபாதியும் தான் இந்த உலகில் ஆண்களாகவும் பெண்களாகவும், பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்." 

நான் படித்த அறிவியல் பத்தாம் வகுப்பு வரைதான். ஆனால் அதில் நான் படித்தது "energy neither can be created nor be destroyed. one form of energy will transform into another form." என்பது தான். அதாவது சக்தி ஆக்கமும் அழிவும் இல்லாதது என்பதே.(தற்போதைய அறிவியலில் இந்த நிலைபாட்டிலிருந்து ஏதேனும் மாற்றம் உண்டா என்பது தெரியவில்லை.) சக்தியும் சிவமும் சேர்ந்ததே உலகம். அதாவது, சக்தி மோனநிலையில் இருக்கும் போது சிவமாகவும், செயல் வடிவமாகும் போது சக்தியாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவற்றில் பேதமில்லை.

ஒரு கணித பேராசிரியரை சந்தித்தேன். அவர் கணினியில் ஏன் பைனரி உபயோகபடுத்த படுகிறது என்பதற்கு நல்ல விளக்கம் கொடுத்தார். இந்த உலகில் எல்லாமே இரண்டு நிலைகளை கொண்டுள்ளன. இரவு-பகல், ஆன்-ஆப், ஆண்-பெண் பாசிடிவ்-நெகடிவ் போன்றவையே இதற்கு உதாரணங்கள் என்றார்.அப்படியே கணினியிலும் 0,1  உபயோகபடுத்தபடுகிறது என்றார்.

உடலும் உயிரும் தனி தனியே இயங்க முடியாது. "சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்..." என்று அபிராம பட்டர் அன்னையை துதிக்கிறார். சொல்லும் பொருளும் பிரிக்கமுடியாதவை.

எல்லா உயிர்களிடத்தும் இருக்கும் ஆத்மா ஒன்றே. எல்லா உயிர்களையும் ஞானி சமமாக காண்பான், என்கிறது கீதை. எல்லா உயிர்களையும் சமமாக பார்க்கும் (அதாவது இறைவடிவமாக) காணும் பக்குவம் நமக்கு வரவேண்டும் என்பதற்காக ஏற்பட்டதே நவராத்திரி கொலு.

நம்மால் எல்லா உயிர்களையும் சமமாக பார்க்க முடியாவிட்டாலும் சரிபாதியான பெண்களை மட்டுமாவது தன்னை போன்ற மனித ஜீவன் என்ற எண்ணத்தோடு பார்க்கவேண்டாமா?

தாவர வகைகள், விலங்கினங்கள் யாவற்றிலும் ஆணும் பெண்ணும் உண்டு. ஆனால், இன்றும் படித்தவர்களும் ஆண் குழந்தை தான் உயர்ந்தது என்று பெண்  குழந்தை பிறக்ககூடதேன்றும் வேண்டுதல்கள் செய்து கொள்வதும், நவீன மருத்துவ முறைகளை நாடுவதும் அதிகமாகவே இருக்கிறது.  

வெறும் ஆண்கள் மட்டும் இருந்தால் உலகம் அழகாக இருக்காது. வெறும் பெண் மட்டும் இருந்தால் உலகம் வீரியத்தோடு இருக்காது. இந்த நவராத்திரியில் அம்பிகையை  வழிபடுவதோடு நம் மனதில் இருக்கும் இந்த வேறுபாட்டையும் களைந்தேரிவோமாக.

இந்த கருத்தை பெரியவர்கள் சிறியவர்கள்,படித்தவர்கள், படிக்காதவர்கள், மகான்கள், மாமேதைகள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்  எல்லோரும் சொல்லிவிட்டார்கள். எனவே, நவராத்திரி சிறப்பு பதிவாக நானும் சொல்லிவிட்டேன். அடுத்து இனி பிறக்கும் குழந்தையும் கூட சொல்லும். ஆனாலும் அவரவர் தானாக மாறவில்லையானால் ஒன்றும் பயனில்லை.

"ஒ மென்று உரைத்தனர் தேவர் - ஓம் 
ஒ மென்று சொல்லி உறுமிற்று வானம்."

  "........................................."

"நாமுங் கதையை முடித்தோம்-இந்த 
நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க!" 

                                                      ----மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

பின் குறிப்பு : குழந்தைகளுக்கு நவராத்திரி விடுமுறை கிடையாது, ஆனால் நான் நவராத்திரிக்கு லீவ். இன்னமும் இரண்டு வாரங்கள் ஆகும், நான் மீண்டும் எழுத. அதுவரைக்கும் என் ஆருயிர் ரசிகர்களாகிய நீங்கள் வருத்த படகூடாதே என்றுதான் இரண்டு பதிவுகளாக போட்டு விட்டேன்.படித்துக்கொண்டும் கமெண்ட் போட்டுக்கொண்டும் சமர்த்தாக இருக்கவும்.ஹா..ஹா...ஹா. ச்சும்மா ....  

கவர்மென்ட் ஆஸ்பத்திரி

"நீங்கள் கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ள போவீர்களா ? " என்று நான் கேட்டால் உங்களில் எத்தனை பேர் "ஆம், போவேன்!" என்று சொல்லுவீர்கள்? நிச்சயம் பலரும் இல்லை என்று தான் சொல்வீர்கள். இதற்கு என்ன காரணம்?  அரசாங்க சேவை என்றாலே அது தரம் குறைந்ததாக தான் இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டது தான் காரணம்.

அது ஓரளவு உண்மை தான் என்றாலும் முழு உண்மையல்ல. எல்லா இடங்களிலும் தவறுகள் நிகழ்கின்றன. அதே போல் தான் அரசாங்க சேவைகளிலும் நிகழ்கின்றன.

அரசாங்கம் என்பது வேறு யாரோ இல்லை. அது நாம் தான். எனக்கு இந்த விஷயத்தில் நிறைய அனுபவம்கள் உண்டு. சாதாரண காய்ச்சலுக்காக என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் கூட உங்களுக்கு ECG, CT Scan,MRI Scan எல்லாம் எடுத்து விடுவார்கள். அது மட்டுமல்ல அங்குள்ள மருத்துவர்கள் நல்ல அனுபவம் உள்ளவர்களா என்பதும் நிச்சயம் இல்லை. ஆனால் அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பல விதமான நோயாளிகளை  சந்திக்கும் அனுபவம் இருக்கிறது. மேலும், விபத்துக்கள்,இயற்கை சீற்றங்கள் போன்ற சமயங்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதால் அவர்களால் எல்லாவிதமான நோயாளிகளையும் எளிதாக கையாளமுடியும். scan centre, lab போன்றவற்றோடு  link வைத்துகொண்டு கமிஷன் வாங்க மாட்டார்கள்.

"ஆனால், சுத்தமாக இருக்காதே !" என்கிறீர்களா ? ஆம் சுத்தமாக இருக்காதுதான் ஆனால் அப்படி இருப்பதற்கு யார் காரணம்? நாம் தான். நம்மை போன்ற நோயாளிகள் தான். பாமரர்கள் மட்டுமே செல்ல கூடிய இடமாக அரசு மருத்துவமனைகள் இருப்பதால் தான் இந்த நிலை. நம்மை போன்ற படித்தவர்கள் அடிக்கடி அரசாங்க மருத்துவமனைகளுக்கு செல்ல ஆரம்பித்தால் "ஐயோ! படிச்சவங்க வர இடம், எதாவது சரியாய் இல்லன்னா கேஸ் போட்டுடுவாங்க." என்கிற பயம் ஊழியர்களுக்கும் இருக்கும். அதன் பலன் வசதி இன்மையால் அங்குவரும் பாமர ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்கும். படிக்காத நோயாளிகளையும் அங்கு சந்திக்கும் போது சுகாதாரத்தை அவர்களுக்கு போதிக்கலாம். 

இப்போதெல்லாம் மருத்துவமனைகளிலும் லப்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. வியாதிகள் அதிகமாகிவிட்டது தான் அதற்கு காரணம் என்று நாம் நினைக்கிறோம். அது ஓரளவு சரியே என்றாலும் சாதரணமாக தொட்டுப்பார்த்தே வைத்தியம் செய்ய கூடிய சிறிய நோய்களுக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே என்று அலைகழிப்பதும், காரணமின்றி அட்மிட் செய்வதுமான தனியாரின்  போக்கும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம்  டிவியில் தனியார் மருத்துவமனைகள் போட்டி போட்டுகொண்டு விளம்பரம் செய்கின்றன. 

இந்நிலையில், அரசாங்க மருத்துவ மனைகளை நாடுவதே நல்லது. நம் வரி பணத்தினால் செயல் படும் அரசாங்க மருத்துவ சேவைகளை பெறுவது நம் உரிமை மட்டுமல்ல, நம் கடமையும் கூட.