வெள்ளி, டிசம்பர் 02, 2011

இது நம்ம வீட்டு கல்யாணம்

நானும் நிறைய விஷயங்களை பற்றி கதை எழுத வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். ஆனால், அதற்குள் எதாவது சுவாரசியமான ஒரு உண்மை நிகழ்வு நடந்து அதை பற்றி எழுதும்படியாகிவிடுகிறது. 

;யாரோ இப்படி சுவாரசியமான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வேண்டுமென்றே என் எழுத்துபணியை தடை செய்து உங்கள் எல்லோரையும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

இப்படி, தற்போதைய நிகழ்வு "தம்பி கல்யாணம்". 


தக்குடு மெயிலில் பத்திரிக்கை அனுப்பி அதை பிரித்து படிக்க கூட தெரியாமல் ஒரு நாலு நாட்கள் அல்லாடினேன். பின்னர், எதிர்வீட்டு பையன் தான் சொல்லிகொடுத்தான். 

படித்த பின்னர் தொடங்கி விட்டது என் குழப்பம். ஜனவாசத்துக்கு போறதா ?இல்லை கல்யாணத்துக்கு போறதா? 

இந்த குழப்பம் முப்பதாம் தேதி  மதியம் வரை நீடித்தது. காலையில் அலுவலகம் செல்லும் போதே தலைவர் "எப்போ போகனுங்கரத்தை சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லு, இன்னிக்கு போறதா இருந்தா போன் பண்ணு." என்று வழக்கம் போல் சிம்ம கர்ஜனை செய்து விட்டு சென்றார்.

குழப்பத்தோடு கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் தங்கமணியின் தளத்தில் "தக்குடு கல்யாண வைபோகம்" பதிவு. அதில் தி.ர.ச மாமா எல்லோரும் இரவு ஏழு மணிக்கு சந்திக்கவேண்டும் என்று பின்னுட்டத்தில் மிரட்டி இருந்தார். 

அப்போ குழந்தைகளை எங்கே விட்டுவிட்டு செல்வது? வேறவழி இழுத்துண்டே  போகவேண்டியது தான் என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். வழக்கம்போல் எதையும் முன் கூட்டியே திட்டமிடாததால் "டென்ஷன்! டென்ஷன்!".

ரெண்டுத்தையும் டிரஸ் பண்ணி இழுத்துண்டு வந்து ஆட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து ட்ரெயின் பிடித்து மாம்பலம் வந்து தலைவருடன் டூ வீலரில் கும்பலாக குமிந்து கொண்டு கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.


கல்யாண மண்டப வாசலில் வைத்து தலைவர் என்னிடம்,"இந்த கல்யாணம் தானா? அட்லீஸ்ட் யாராவது ஒருத்தரையாவது உனக்கு தெரியுமா? எதுவும் பிரச்சனை இல்லையே ?" என்று கேட்டபோது மனதிற்குள் ஒரு பயமும் கூடவே தலைவரை பயப்பட வைத்த திருப்தியும் ஏற்பட்டது.

எதையும் காட்டிக்கொள்ளாது "எல்லாம் எனக்கு தெரியும், பேசாம வாங்க." என்று ரொம்ப தைரியமாய் ஆணை இட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன்.

வாசலில் அழகாய் பூ கோலம் போட்டு இருந்தார்கள். பெண் வீட்டுகார பெண்மணிகள் கையில் சந்தனம்,கும்குமம்,சர்க்கரை,கல்கண்டோடு பெண்களூர் ரோஜா பூவும் கொடுத்து வரவேற்றார்கள்.

நாங்கள் ஏற்கனவே தலையில் பூ வைத்திருந்ததால் அந்த பூவை கையிலேயே வைத்திருந்தேன். பெரியவள்,"ஏம்மா பூவ கைலயே வச்சிண்டிருக்க? பாக்ல வச்சிக்கோயேன்." என்றாள்.

நான்,"பாக்ல வச்சா கசங்கி போய்டுமே, வாசன ரோஜா வாடி போகலாமா?, அதான் கைலயே வச்சிண்டிருகேன்." என்று சொன்னேன்.

 நாங்கள் போய் உட்கார்ந்து கொண்டு மிஸ்டர்,மிஸ்டர்னு (அதான் திரு,திருன்னு) முழிச்சிண்டே இருந்தோம்.

ரொம்ப தவிப்பான கணங்கள் அவை. யாரையுமே தெரியாமல் ஒரு கல்யாணத்துக்கு போக பயங்கர தில் வேணுங்கிறது எனக்கு அப்பதான் புரிஞ்சது.

தலைவர் வேற சும்மா இல்லாம "ஏய் ! அங்க பாரு அந்த மாமி ப்ளாக் ப்ரென்ட் தான் போலிருக்கு, இங்க பாரு இந்த மாமா ப்ளாக் ப்ரென்ட் போலிருக்கு" ன்னு ஒரே தொனப்பல்.

உங்களுக்கு எப்படி தெரியும்னா,அவாளும் நம்மள மாதிரியே முழிச்சிண்டிருக்கா  பாருங்கிறார்.

"என்ன திரு திருன்னு முழிகிரவால்லாம் ப்ளாக் ப்ரெண்ட்ஸ்ஸா?" என்று ஒரு முறை முறைத்த அப்புறம் தான் அடங்கினார்.

அப்புறம் தக்குடு தன் திருமதியோடு மேடையேறினான். இருவரும் மாலை மாற்றி கொண்டார்கள்.

நங்கள் மேடையில் ஏறி அறிமுகபடுத்திகொண்டு போட்டோ எடுத்துக்கொண்டோம்.கீழே இறங்கி கொஞ்ச தூரம் போனபின்தான் தலைவருக்கு தான் கேமரா கொண்டு வந்த ஞாபகமே வந்தது. பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு போட்டோ எடுத்தார்.  நல்ல உணவு. வழக்கம் போல் சரியாய் சாப்பிடாமல் ரெண்டும்  நன்றாய் படுத்தின. சொல்ல சொல்ல கேட்காமல் ஐஸ் கிரீம் சாப்பிட்டன.

திருப்பியும் பதிவர்களை தேடும் படலம். தக்குடுவோட பெற்றோர், அண்ணா,மன்னி யாரையும் பார்க்காமல் எப்படி திரும்பிப்போவது?

அவன் அண்ணா யார் என்று தெரியவில்லை. அங்கே பார்த்தால் தக்குடு ஜாடையிலேயே ஒருத்தர் நின்னுண்டு இருந்தார். அவரை சுற்றி ஒரே பெண்கள்  கூட்டம். "அவர்தான் தக்குடுவின் அண்ணாவாய் இருக்கும் போய் விசாரியுங்கோ", என்றேன் தலைவரிடம்.

கடைசியில் பார்த்தால் அவர் கசின் பிரதர்ராம். "ஒ....ஒ.... கசின் பிரதருக்கே இவ்வளவு பெண்கள் கூட்டமா....?"

தக்குடுவோட அம்மாவை கண்டுபிடித்து அறிமுகபடுத்தி கொண்டேன். நன்றாய் பழகினார்கள்."ஒ.....தானை தலைவியா நன்னா தெரியுமே...நிறைய சொல்லிருக்கான்." என்றார்கள்.

"ஐயோ, நிறைய சொன்னானா...? என்னன்னு சொன்னானோ....?"

அவர்களே எங்களை அழைத்து போய் பதிவர்களை அறிமுகபடுத்தி வைத்தார்கள். எல்லோரும் ரொம்ப முக்கியமான இடத்தில் இருந்ததால் ஒன்றுமே பேச முடியவில்லை.T.R.C மாமாவும்,  R.V.S சாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பாலாஜி வெங்கட்டும்,எல்.கே வும் தனியாக வந்திருந்தார்கள்.


R.V.S சாரை வேங்கடசுப்ரமணியன் என்று T.R.C மாமா அறிமுகபடுத்தி வைத்தார் . இப்போது தான் இந்த பதிவை எழுதும்போது தான்  R.V.S சார்  தான்  வேங்கடசுப்ரமணியன்  என்பது தெரிந்தது (நீ ஒரு டயுப் லைட் என்று யாருங்க கமெண்ட் அடிக்கறது).

நாங்கள் எங்கள் கிராமத்துக்கு திரும்ப வேண்டி இருந்ததால் அவர்கள் சாப்பிட்டு விட்டு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. இதற்கே சின்னவள் சாமியாட ஆரம்பித்து விட்டாள்.

இங்கு முக்கியமான ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தான் அங்கு நடந்த பஜனை கச்சேரி. அடாடாடாட.....அந்த மாமிக்கு என்ன ஒரு சாரிரம்.   அதையும் ஒரு மாமா ரசித்து தாளம் போட்டு கொண்டிருந்தார். அனேகமாக அவர் அவருடைய ஹியரிங் எய்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்திருப்பார் என்று நினைக்கிறன்.

தலைவர் வேற, "ஐயோ....!அந்த மாமிக்கு யாராவது ஐஸ் கிரீம் ஒரு நாலு குடுங்கோளேன். அதையும் ஒரு நாலு நாள் முன்னாடியே செஞ்சிருக்கணும்.அதோட பனிலையும் பத்து தரம் அலைய விட்டிருக்கணும்." என்று கமெண்ட் அடித்தார்.

முதல் பதிவர் சந்திப்பே மங்களகரமாய் கல்யாணத்தில் நடந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.

16 கருத்துகள்:

RVS சொன்னது…

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். :-)

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

Vasudevan Tirumurti சொன்னது…

ஒரு படத்தையும் காணோமே அக்கா!

Vasudevan Tirumurti சொன்னது…

அண்ணார் கல்யாணத்துக்கு வரலைன்னு தெரியாதா?

Thanai thalaivi சொன்னது…

@.R.V.S : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

@.T.R.C : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

@ வாசுதேவன் திருமூர்த்தி : இதோ இப்போ போட்டாச்சி !

SRINIVAS GOPALAN சொன்னது…

தக்குடுவை ஷெர்வானியில் பார்ப்பது அரிது. எப்போதும் கோட் சூட் இல்லை என்றால் வைதீக டிரஸ் போட்டு தான் போட்டோ வில் பார்த்திருக்கிறேன்.
கல்யாணம்/ஜானவாசம் நன்றாக நடந்தது சந்தோஷம்,
தம்பதிகளுக்கு ஆசீர்வாதம்.

Thanai thalaivi சொன்னது…

@ ஸ்ரீநிவாஸ் கோபாலன் : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். கல்யாணம் அட்டென்ட் பண்ணமுடியதவாளுக்காக இந்த பதிவு. கொஞ்சம் interesting ங்கா இருக்கட்டுமேன்னு கொஞ்சம் ஹுமர் சேர்த்தேன்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

பெண்களூர்னு சொன்னீங்க பாருங்க...அங்கதான் நீங்க நிக்கறீங்க அக்கோய்... சரி கால் வலிக்குமோ உக்காந்துக்கோங்க...:) அங்க அங்க தக்குடு சொல்ற டயலாக்ஸ் வெச்சே கொண்டு போனது சூப்பர் சுவாரஷ்யம்...:)

//அவாளும் நம்மள மாதிரியே முழிச்சிண்டிருக்கா பாருங்கிறார்//
ஹா ஹா ஹா... இது சூப்பர்...:)

Kalakkal post..:))

RAMVI சொன்னது…

ரொம்ப நன்றாக கவர் பண்ணீட்டீங்க ஜானவாசத்தை.
மிகவும் சுவாரசியாமாக எழுதியிருக்கீங்க.தக்குடுவ பத்தி எழுதரவங்களுக்கும் அவரோட நகைச்சுவை டைமிங் வந்துடும் போல இருக்கு.
வாழ்த்துக்கள்.

கவிநயா சொன்னது…

நீங்க சொன்ன பிறகுதான் பார்த்தேன். படத்தில் இருக்கறது நீங்கதானா? :) போஸ்டுக்கு நன்றி! அ.த. பதிவு முந்தியே படிச்சாச்! ஓரே கூட்டமா இருந்ததால காணாம போயிடும்னு கமெண்ட்டலை :P

Thanai thalaivi சொன்னது…

@ அப்பாவி தங்கமணி : ரசித்து படித்ததற்கு நன்றி தங்கமணி. உண்மை என்னவென்றால் பெரும்பாலான உரையாடல்கள் உண்மையானவையே.

@ ராம்வி : ஆமாம் ரமாஜி !, இந்த தங்கமணி, தக்குடு க்ரூப்ல சேர்ந்து நானும் இப்படி ஆகிட்டேன்.

@ கவிநயா : இது அழுவல் ஆட்டம், நான் ஒத்துக்க மாட்டேன் ! நீங்க மட்டும் என்னை பார்த்து விட்டீர்கள். நான் உங்களை பார்க்கவில்லையே...!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அந்த மாமிக்கு என்ன ஒரு சாரிரம். அதையும் ஒரு மாமா ரசித்து தாளம் போட்டு கொண்டிருந்தார். அனேகமாக அவர் அவருடைய ஹியரிங் எய்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்திருப்பார் என்று நினைக்கிறன்.

வாசன ரோஜா வாடி போகலாமா?,

வாடி போலாம்னு வாரிசை அழைத்துவந்தீர்களா..

Thanai thalaivi சொன்னது…

@ ராஜராஜேஸ்வரி : உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மேடம்.

தக்குடு சொன்னது…

அடப்பாவிகளா, எல்லா பயலோட வாய்லையும் தக்குடு கல்யாண மேட்டர்தான் அவல் போலருக்கு!! அந்த பாட்டு பாடின மாமி என்னோட ஜானுவாசத்துக்கு ஒரு திருஷ்டி பரிஹாரம். வாசனை ரோஜாவை மறக்கலையா இன்னும்? :)) ரசித்தேன்.

குறிப்பு - போட்டோல இருக்கர்து என்னோட மாமியார். உங்க போட்டோ எங்கிட்ட இருக்கு, சமயம் வரும்போது வெளிவரும். :P

Thanai thalaivi சொன்னது…

@தக்குடு : உன் மாமியார் ரொம்ப இளமையா இருக்காங்க! நான் அவங்கள உன் ஆத்துக்காரியோட அக்கான்னு நினைச்சேன். அவங்கள நானுன்னு கவிநயா நினைச்சிண்டு ரொம்ப காமெடியா பண்ணிட்டாங்க! நானும் வேற ஏதோ போட்டோல என்னை பார்திருப்பாங்களோன்னு நினைச்சிண்டு பதில் எழுத ரெண்டு செவிடன்கள் கதையா ஆய்டுத்து. அப்பனே ! எங்க போட்டோலாம் உன் ஆல்பத்துலையே பத்திரமா இருக்கட்டுமப்பா!

எல் கே சொன்னது…

hmm marakkama ennai patthi eluthi irukkeenga nandri