திங்கள், டிசம்பர் 26, 2011

சித்தமெல்லாம் எனக்கு சித்தா மயமே !

கொஞ்ச வருடங்களாகவே முதுகு வலியும் வலது கை வலியும் என்னை ஒரு கைதியாகவே மாற்றி விட்டிருகின்றன. இதில் பயபடுத்தும் விஷயம் என்னவென்றால், இரவில் தூங்கும்போது கைகள் மரத்து சில்லிட்டு போய் விடும். கொஞ்ச நேரம் நின்றாலும் கால்கள் வலி பின்னி எடுத்து விடும். படுத்தால் மரத்து போய் விடும். இப்படியே வலிகளோடு என் வாழ்க்கை இணைக்கப்பட்டுவிட்டது.

"இவ்வளவு சொல்றியே அதற்கு என்ன சிகிச்சை எடுத்தாய்?" என்கிறீர்களா. நியாயமான கேள்வி தான். ஆனால், நான் பெரிசாய் சிகிச்சை என எதுவும் முயற்சிக்கவே இல்லை (அப்படி ஒத்துக்கோ !).

அதற்கு காரணம் சலித்து போன ஆஸ்புத்திரி வாசமே (அது சரி யாருக்கு தான் ஹாஸ்பிடல் போக பிடிக்கும்).

இந்நிலையில் தான் இங்கு பலரும் தாம்பரத்தில் உள்ள  தேசிய சித்த மருத்துவ கழகத்தில் நல்ல சிகிச்சை தருவதாகவும் தாங்கள்  அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.

அப்படி ஒரு நாள் என் தோழி ரமணியிடம் பேசி கொண்டிருந்த போது அவர்கள் கணவரும் அவரும் கூட அங்கு சிகிச்சை பெறுவதாகவும், நல்ல முறையில் குணம் தெரிவதாகவும் கூறினார்கள்.

சரி, நாமும் போய் பார்க்கலாமே என்று தோன்ற, ஒரு நாள் ரமணியுடன் அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும் போதே நல்ல மூலிகை மணம். அதை சுவாசித்தாலே பாதி நோய் குணமாகி விடும். அரசாங்க மருத்துவமனையா அது !? சுத்தம்,சுத்தம் எங்கும் பளிச்!...பளிச் !

முதல் முதலாய் பதிவு செய்து கொள்ள ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள். 

அறைகளின் பெயர்கள் எல்லாம் அழகு தமிழில் மருத்துவம்,நோய் நாடல் இப்படி.

உள்ளே ஒவ்வொரு அறையிலும் நிறைய மருத்துவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் உள்ளே நுழைந்து ஒரு அழகான, சற்று மாநிறமான, கிராமத்து களை (சித்த மருத்துவத்திற்கு பொருத்தமான முகம்) உள்ள இளம் பெண் டாக்டரை தெரிவு செய்து கொண்டேன்.

அன்பாக ,கனிவாக விசாரிக்கிறார்கள். மிகமுக்கியமாக நல்ல தமிழில் பேசுகிறார்கள்.

என்னம்மா தொந்தரவு?  
இனிப்பு அதிகமா சாப்பிடாதீங்க ! 
இதை சாப்பிடுங்க சுவையா இருக்கும்! 

ஐந்து நாட்களுக்கான மருந்து மட்டும் தான் தருகிறார்கள்.  அதிகமாக கொடுத்தால் சிலர் அவற்றை வெளியில் விற்று விடுகிறார்களாம். ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் போக வேண்டும். எனக்கு அந்த மருந்து ஒத்து கொள்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த மருத்துவ மனை எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் நிச்சயம் குணமாகும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

நான் இந்த பதிவின் தலைப்பை சொன்னவுடன் ரமணி "என்னங்க இன்னும் ஒரு வேளை மருந்து கூட நீங்க சாப்பிடலை அதற்குள் சித்த மருந்திற்கு இவ்வளவு பெரிய விசிறி ஆகிடீங்களே!?" என்றார்.

"மற்ற மருந்துகளை காட்டிலும் இதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது, காரணம் இது இறை நம்பிக்கையோடு தொடர்புடையது என்பது மட்டுமல்ல இங்கு இருக்கும் சுத்தம், இவர்களின் அன்பான கவனிப்பு ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கை தான்." என்றேன்.

ரமணியும் அதை ஆமோதித்தார்.

எனக்கு அவர்கள் கொடுத்த குறிப்புக்கள் சிலவற்றை உங்களுக்கு தருகிறேன், உபயோகமாக இருக்கும்.

*சர்க்கரையில் உள்ள வேதி பொருட்கள், நம் எலும்புகளை வலுவிழக்க செய்து விடுமாம். வருட கணக்காய் சர்க்கரை சாப்பிட்டால் முதுகு வலி,கழுத்து வலி எல்லாம் நிச்சயம். எனவே, சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி உபயோகியுங்கள்.

* முளை கட்டிய பயறு தினமும் ஒரு கை பிடி அளவு கட்டாயம் சாப்பிட வேண்டும்.

* புளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்.

* கணினியில் வேலை செய்தால், வேலை முடிந்து எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதுகு வலி, கழுத்து வலிக்காக சிகிச்சை பெறுகிறவர்கள், கட்டாயம் இந்த குறிப்புகளையும் முயன்று பாருங்கள்.

பின் குறிப்பு : சமீபத்தில் bio-technology professor  ஒருவரை சந்தித்தேன். அவர் நம் பாரதத்தில் உள்ளது போல் bio-diversity உலகில் வேறு எங்குமே இல்லை என்றார்.  எத்தனையோ விதமான தாவரங்கள், உயரினங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு தேவையான வேலையை செய்து கொண்டிருகின்றன என்றார். நம் தேசத்தின் பொக்கிஷங்களை நாம் மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். சித்த மருத்துவமும் அப்படியே.4 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

எனக்கும் உங்களிருக்கும் அதே உடல்நலப் பிரச்னைகள் சிறியளவில் இருந்தாலும், மருத்துவமனை செல்லவே பிடிப்பதில்லை- அதே காரணங்கள்தான்!! இங்கே (அமீரகம்) சித்தா, ஹோமியோ மருத்துவர்கள் மிக அரிது. மேலும் காப்பீடு பிரச்னைகளும் உள்ளன.

தாம்பரம் மருத்துவமனை பற்றி இங்கிருக்கும் சென்னைத் தோழியும் பாராட்டிச் சொல்லிருக்கிறார். (அவர் மருத்துவரிடம் சொல்லி 3 மாதங்களுக்கு மருந்து வாங்கி வருவார்) கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.

கவிநயா சொன்னது…

நல்ல தகவலுக்கு நன்றி. எனக்குத் தெரிந்த பலருக்கும் (என்னையும் சேர்த்து :) பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் வலிகளிலிருந்து நீங்களும் விரைவில் நிவாரணம் பெற வாழ்த்துகள்.

Thanai thalaivi சொன்னது…

@ ஹுசைன்னம்மா : நன்றி ஹுசைன்னம்மா ! இந்த குறிப்புகள் எல்லோருக்கும் பயன்படுமாயின் மிக்க மகிழ்வேன்.

@ கவிநயா : வருகைக்கு நன்றி கவிநயா ! எல்லோருக்குமே இந்த தொந்தரவு இருக்கிறது போலிருக்கிறது. என்ன டிகிரீஸ் தான் மாறுபடும் போலும்.

எல் கே சொன்னது…

write more abt the hospital .. it can be a eye opener