ஞாயிறு, டிசம்பர் 25, 2016

சொல்லாதே யாரும் கேட்டால்



“ரகசியம்” எத்தனை வகைப்படும் என்று கேட்டால், வெளியே சொல்லக்கூடியது, சொல்லக்கூடாதது என்று இருவகைப்படும் என்று சொல்லக்கூடாது. ரகசியம் என்றாலே அது வெளியே சொல்லக்கூடாதது என்று தான் பொருள். ஆனால், ரகசியம் என்பது என்ன? அடுத்தவர் நம்மிடம் “இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.” என்று சொன்னால் அது தான் ரகசியம் என்று நாம் நினைத்திருப்போம். அதுதான் இல்லை. யாரும் நம்மிடம் ரகசியம் என்று சொல்லாவிட்டாலும் சில விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது. 


ரகசியம் இருவகைப்படும். ஒன்று நம்மைப்பற்றிய ரகசியம், இன்னொன்று பிறரைப்பற்றிய ரகசியம். இந்த இரண்டாவது வகையில் நம் உறவினர் தொடங்கி அரசாங்க ரகசியம் வரை அடங்கும்.


முதலில் நம்மைப்பற்றிய ரகசியத்தைப்பார்ப்போம். சிலர் பெருமை என்று நினைத்துக்கொண்டு வீடு கட்ட ஆன செலவு, புதிதாய் வாங்கிய நகை எல்லாவற்றையும் வெளியே சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இது தேவையா? இப்போதெல்லாம் எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. “நான் ஒருமாசம் வெளிநாட்டில் என் மகன் வீட்டில் போய் தங்கப்போகிறேன்.” “இதோ வீட்டைவிட்டு கிளம்பிட்டேன்” “இப்ப விமானநிலையம் வந்துட்டேன்.” என்றெல்லாம் வழிநெடுக சொல்லிக்கொண்டே போகிறார்கள். இது சில சமயம் ஆபத்தாகவும் முடியலாம் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை? எல்லாவற்றையும் எல்லாரிடமும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக பெண்களுக்கு ரகசியத்தை பாதுகாக்க தெரியாது என்பார்கள். ஆனால், அது முழு உண்மையில்லை. தங்களுக்கு ஏதேனும் பாதிப்புவரும் என்றால் அந்த ரகசியத்தை பெண்கள் பாதுகாக்கவே செய்கிறார்கள்.


அடுத்தது, பிறரை பற்றிய ரகசியங்கள். இவை சுவாரசியம் மிகுந்தவை. இதில் அண்டை அயலார் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் அடங்குவர். “எனக்கு இன்னாரை பற்றிய இந்த ரகசியம் தெரியும்.” என்று சொல்லிக்கொள்வதில் ஒரு தனி இன்பம். சொல்வதையும் சொல்லிவிட்டு,”நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.” என்று கோரிக்கை வேறு வைக்கப்படும். நீங்கள் காப்பாற்றாத ரகசியத்தை அடுத்தவர் மட்டும் காப்பாற்றுவார் என்பது என்ன நிச்சயம். மேலும், உங்களுக்கு கிடைத்த தகவல் உண்மையானதாக இல்லாதபட்சத்தில் நீங்கள் வதந்தியாளராகும் வாய்ப்பும் உண்டு. “அவ எப்பவுமே இப்படித்தான்ப்பா யாரையாவது பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லிகிட்டே இருப்பா. ஆனா, பாதிக்கு மேல பொய் தான்.” என்று உங்களைபற்றி பேசிக்கொள்வார்கள். 

       
நாம் பணிபுரியும் நிறுவனத்தின் ரகசியங்கள், அரசாங்க ரகசியங்கள், ராணுவ ரகசியங்கள், பிரபலங்களைப்பற்றிய ரகசியங்கள் என்று ஏகப்பட்டது இந்த வகையில் அடங்குகின்றன. முதல் வகையில் பாதிக்கப்படுபவர் நாம் தான் என்றால் இரண்டாவது வகையில் பாதிக்கப்படுவர்களின் பரப்பளவு மிகப்பெரியது. இதில், சுவாரசியத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நீங்கள் வெளிப்படுத்தும் ரகசியம் உங்களை சிக்கலில் மாட்டிவிடும் அபாயம் அதிகம். 


ஒருவர் உங்களை நம்பி சொன்ன விஷயத்தை வெளியே சொல்லிவிட்டு மாட்டிக்கொண்டப்பின்,”இதை வெளியே சொல்லகூடாதுன்னு நீ சொல்லவே இல்லீயே!!!” என்று சாமர்த்தியமாக கேட்காதீர்கள். நாம் தான் ஒரு விஷயத்தை வெளியே சொல்லலாமா கூடாதா என்று முடிவு செய்யவேண்டும். அதை எப்படி முடிவு செய்வது? ஒருவிஷயம் சம்பந்தபட்டவர்களுக்கோ இல்லை மற்றவர்களுக்கோ எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துமானால் அதை வெளியே சொல்லக்கூடாது.


சிலர் தெரிந்தே எதிர்மறையான விளைவுகளை பிறருக்கு ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லுவார்கள்.  உதாரணமாக சிலர்,“அவளுக்கும் உனக்கும் எதாவது சண்டையா என்ன? அவ நேத்து என்வீட்டுக்கு வந்து பேரனுக்கு பேர் சூட்டு விழா ரொம்ப பேரை கூப்பிடலை,ரொம்ப நெருங்கின வட்டத்துல தான் கூப்பிட்டிருக்கேன் ன்னு சொன்னா.  நீ தானே அவளோட நெருங்கின தோழி உன்னை கூப்பிட்டாளா?”இந்தமாதிரி கொளுத்தி போடுவார்கள். அதனால்  அவங்களை  பார்த்தாலே எல்லோரும் ஓட்டம் எடுப்பார்கள். அதோடு அவர்கள் சொன்னால்  யாரும் நம்பவும் மாட்டார்கள். மொத்தத்தில்  எல்லோரின்  நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இழந்து வாழவேண்டியிருக்கும்.


அதனால்,எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்படியாக தெரிந்தோ தெரியாமலோ பேசக்கூடாது. “அதெப்படி!! ஒவ்வொரு வாட்டியும் இப்படி யோசிச்சுகிட்டே இருக்கமுடியுமா? ஒரு ப்ளோல வந்துடுதுல்ல.” என்கிறீர்களா? 


அதற்குத்தான் தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள் என்பது. அதோடு, “நாம் முகநூல் உள் பெட்டியில் தானே அவர்களை பற்றி பேசினோம். அலைபேசியில் தானே சொன்னோம். இது யாருக்கு தெரிந்துவிடப்போகிறது!!” என்று எண்ண வேண்டாம். தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் எதுவுமே ரகசியம் கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் வெளியே சொல்வதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.

பயனுள்ளவற்றை மட்டும் பகிருங்கள். தேவையில்லாத விஷயங்கள் அது யாரைபற்றியதாக, எதை பற்றியதாக இருந்தாலும் வெளியே சொல்லாதீர்கள். ஏனென்றால் ரகசியம் என்பது உங்களோடே இருப்பது மட்டும் தான்.    

வெள்ளி, நவம்பர் 25, 2016

உடலினை உறுதி செய்


நானும் என் தம்பியும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது, ஒரு சில நண்பர்களை பற்றிய பேச்சு எழுந்தது. 

"அவங்க ஏன் வரலை?"

"இவர் உடனே கிளம்பிட்டார் இல்ல?"

இப்படி பலவிதமாக பேசும் போது ஒரு விஷயம் பொதுவாக இருந்தது. 

அதுதான் "உடல்நிலை".

பலருக்கும் இதுதான் பிரச்சனை. விரதம் இருக்கமுடியாது?

என்னை ஒரு நிகழ்ச்சி நடத்த சொல்லி ஒருவர் கேட்டபோது, "எனக்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது அக்கா, எனக்கு நிகழ்ச்சி நல்லபடியாக முடியவேண்டுமே என்ற பயத்தில் தலைவலி வந்துவிடும். அப்புறம் ரொம்ப கஷ்டம் ஆகிடும்", என்றேன். அவமானமாக இருந்தது.

பொறுப்பை ஏற்றுகொள்ள தயக்கம். காரணம் உடல்நிலை. "இப்படி இருந்தால் நாளை மகள் திருமண வேலைகளை எப்படி செய்வாய்?" என்று என் மனசாட்சி கேட்டது, 

நிறைய பேருக்கு சிறு வயதிலேயே நீரிழிவு நோய். அதனால், நிறைய நேரம் பசியோடு இருக்க முடியாது, இயற்கை உபாதைகளின் தொல்லை, பலருக்கும் உடல் பருமனால் மலை ஏற முடியாது இப்படி பல.

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் "உடல் நிலை".

சில தலைமுறைகளாகவே நாம் உடற்பயிற்சியின் அவசியம் தெரியாதவர்களாவே வளர்ந்திருக்கிறோம். “படிப்பு தான் முக்கியம்!, படிச்சாத்தான் சோறு கிடைக்கும் !” என்பதாக நம் மனதில் பதிந்திருக்கிறது. வெறும் ஏட்டு படிப்பால் நிறைய பணம் சம்பாதித்தோம் ஆனால், அந்த பணத்தால் பயன் என்ன?

ஆண்களில் சிலராவது விளையாட வாய்ப்பு கிடைக்க பெற்றிருப்பார்கள். ஆனால், பெண்குழந்தைகள். “அடக்க ஒடுக்கமா வீட்டுல இரு!” “விளையாடி கைய கால ஓடிச்சிகிட்டியானா எவன் கட்டிப்பான்.” “எல்லாம் குனிஞ்சு நிமுந்து வேலை செஞ்சா போதும்!” தனியா என்ன விளையாட்டு வேண்டிகிடக்கு!” போன்ற கட்டளைகள் பெண்களுக்கு பிறப்பிக்கபட்டன. சொன்னவர்கள், வியாதியில் விழுந்த போது அவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டிய பெண்களும் நோயில் விழுந்திருந்தார்கள்.

பல வீடுகளில் பெற்றோர் காலமான போது, நீரிழிவு நோயால் தாக்கப்பட்டு இறுதி காரியங்களை செய்ய கூட பசி தாங்க முடியாமல் அவதிப்பட்ட பிள்ளைகளை பார்த்திருக்கிறேன்.

உடல் உறுதியாக இல்லாவிட்டால் நாட்டிற்கு ராணுவ சேவை செய்ய ஆள் கிடைப்பது எப்படி? கைலாஷ் மானசரோவர் யாத்திரை போவது எப்படி? பெற்றோருக்கு இறுதி கடமைகளை எப்படி செய்வது? பெண் குழந்தைகளின் பேறு காலத்தை கவனிப்பது எப்படி? அட ! இதெல்லாம் கூட பரவாயில்லை, நம் உடலை நாமே சுமப்பது எப்படி?   

 நான் பார்த்த பலரும் சிறுவயதிலேயே உடல் பெருத்து, மூன்று வேளையும் சாப்பாட்டைவிட அதிகமாக மருந்து சாப்பிடுகிறார்கள். சகல ரோகங்களும் மிக,மிக இளம் வயதிலேயே அவர்களிடம் முகாமிட்டு விடுகின்றன.எல்லாம் தெரிந்திருந்தாலும் உடலை பேணுவது என்பதை ஏதோ சுயநலமாக இருப்பதாக கற்பித்துக்கொண்டு தவிர்க்கிறார்கள். 

என் மகள்களை வெளியே விளையாடவிட்டால், ஏதோ பாவகாரியத்தில் அவர்களை நான் ஈடுபடுத்துவது போல் பார்ப்பவர்கள் பலர். குழந்தைகளை டிவி, டேப் முதலியவற்றுக்கு அடிமையாகவிட்டு விட்டு,” என்னங்க செய்யறது? வெளிய விளையாட அனுப்பினா சண்டை வருது.” என்கிறார்கள் சிலர். 

வரட்டுமே! அதை எப்படி கையாள்வது என்று சொல்லிக்கொடுங்கள். அதுக்கெல்லாம் எங்களுக்கு ஏது நேரம்? டிவி பார்க்கணும், நாங்களும் வாட்சாப், பேஸ்புக் என்று நேரம் ஓட்ட வேண்டும்.    
  
ஆக மொத்தத்தில் நாம் நோயாளிகளானது அறியாமையினால், அடுத்த தலைமுறையை நோயாளிகளாக்குவது சோம்பலினால். 

போதும் ! இத்தோடு இது நிற்கட்டும்! திருமணம் போன்ற விசேஷங்களுக்கு உடலுக்கு பட்டுடுத்தி, அரிதாரம் பூசிக்கொண்டு சென்றுவிட்டு பந்தியில் பரிமாறப்படும் இனிப்பை சுவைக்க முடியாத சங்கடம் இனிவேண்டாம். 

சாப்பிட்டு முடிந்ததும் அவரவர் கொண்டுவந்திருக்கும் நடமாடும் மருந்துக்கடையை திறக்கும் நிலை இனிவேண்டாம்.

“எனக்கு சுகர் ! உனக்கு பி.பீயா?” என்ற குசல விசாரிப்புகள் இனி வேண்டாம்.

“நான் பைபாஸ் பண்ணிண்டுட்டேன், நீங்க எப்போ பண்ணிண்டீங்க? எவ்வளவு செலவாச்சு?” என்று ஏதோ பெண்ணின் கல்யாணம், வீடு கட்டுவது மாதிரி அறுவை சிகிச்சையை அந்தஸ்தின் அடையாளம் போல் பேசுவது இனி வேண்டாம்.    

நம் உடல் நமக்கே பாரமாகும் அவலம் இனி வேண்டாம்.
     
நாலு நாள் வாக்கிங் போய்விட்டு ஐந்தாவது நாள் நொண்டி சாக்கு சொல்லிக்கொண்டு தட்டிகழிப்பது இனி வேண்டாம். 

இனி ஒரு விதிசெய்வோம் ! அதை எந்த நாளும் காப்போம் !
 
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளையே பழக்குவோம், வெள்ளை சர்க்கரை,மைதா போன்றவற்றை தவிர்ப்போம்,
வெளியே மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளில்  குழந்தைகளை ஈடுபடுத்துவோம், நாமும் சேர்ந்து விளையாடுவோம்.

நாம் அன்பானவர்கள், அறிவானவர்கள் மட்டுமல்ல ஆரோக்கியமானவர்களும் கூட என்று நிரூபிப்போம்.



செவ்வாய், நவம்பர் 01, 2016

சும்மா......! :)

ஏனோ இம்சை அரசன் இருப்பத்திரண்டாம் புலிகேசியின் அவை புலவர்கள் இரண்டு பேரும் நேற்று என் கனவில் வந்து "தானை தலைவி !இனி நீ சுசி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்." என்று வாழ்த்திவிட்டு சென்றார்கள். புலவர்கள் வாக்கு பொய்க்க கூடாதென்று என் ப்ளோகின் பெயர் இன்று முதல் "சுசி" என்று மாற்றப்படுகிறது. :)

ஏன்  மாற்றினாய் ? சுசி என்கிற பெயர் எதற்காக என்றெல்லாம் கேட்டீர்கள் என்றால் என் பதில் "சும்மா....!" :)