வெள்ளி, ஜூலை 15, 2011

புவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 1

என் தாய் புவனேஸ்வரி !

அம்மா ! தாயே பராசக்தி ! மாதே புவனேஸ்வரி !  என்பது நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம். இதுதான் காரணம் என்றில்லாமல் எனக்கு இந்த அம்மன் மேல் ஒரு பக்தி வந்து விட்டது. ஆனால் எனக்கும் இந்த அன்னைக்கும் ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கத்தான் செய்தது.

அது என்னவென்றால் என் தந்தையின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நல்லமாங்குடி (எவ்வளவு அழகான பெயர் பாருங்கள்). ஆனாலும் என் தாத்தா அதாவது அப்பாவின் அப்பா புதுகோட்டை மகாராஜாவின் சமஸ்தானத்தில் வருவாய் துறையில் வேலை பார்த்ததால் என் அப்பா மற்றும் அவர் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுகோட்டை தானாம். அதனால் உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் புதுகோட்டை என்று தான் சொல்வார்கள். பின்னர் சமஸ்தானங்கள் மறைந்து ஒரே பாரதமான போது என் தாத்தா மத்திய அரசு ஊழியர் ஆனார்.


புதுகோட்டை அரச பரம்பரையின் (தொண்டைமான்) குல தெய்வம்  ஸ்ரீ புவனேஸ்வரி தேவியவாள்(இந்த புவனேஸ்வரி தேவியின் branch offices ஒன்று சேலத்திலும் இப்போது சென்னை சேலையுரிலும் உள்ளது). அதனால் புதுகோட்டை அரச குடும்பத்தினர் நவராத்திரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவார்களாம்.

நவராத்திரியில் ஊரில் இருக்கும் எல்லா சுமங்கலி களையும் ஒரு நாள் அழைத்து எண்ணெய், சீயக்காய் கொடுத்து சாப்பாடு போட்டு வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் முதலிய மங்கள பொருட்கள் எல்லாம் தருவார் களாம். அதில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் உருவம் பொறித்த அரை காசு ஒரு பிடியும் அடக்கம். அரை காசு என்பது அப்போது இருந்த ஒரு நாணய அளவாகும்.

பெண்களும் அதை ஒரு மரியாதையாக நினைத்து வாங்கி பத்திர படுத்துவார்களாம். அரை காசில் உருவம் பொறிக்க பட்டதால் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு அரை காசு அம்மன் என்ற பெயர் ஏற்றபட்டது.

இந்த விவரங்கள் எதுவும் தெரியாமலே எனக்கு இந்த அம்மன் மேல் ஏனோ ஒரு பக்தி ஏற்பட்டது.  அது வளர்ந்து வந்த போது தான் என் தந்தையார் மூலம் இந்த வரலாற்றை தெரிந்து கொண்டேன்.

யாருக்காவது எதாவது பொருள் தொலைந்து போனால் இந்த அரை காசு அம்மன்னுக்கு வேண்டிக்கொண்டால் கிடைத்து விடும். ஒரு சிறு வெல்ல கட்டியோ அல்லது எதாவது ஒரு சிறு இனிப்பு பண்டமோ எடுத்து வைத்து காணாமல் போன பொருள் கிடைக்க வேண்டும் என்று அன்னையை வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த பொருள் கிடைத்தவுடன் அந்த இனிப்பு பொருளை ஒரு அசலார் குழந்தைக்கு கொடுத்துவிட வேண்டும்.

 உனக்கு என்ன தொலைந்தது? எப்படி கிடைத்தது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் அன்னையின் மகிமையை அடுத்த பதிவில்.

                                                                                                                        .....தொடரும்.