புதன், ஜூலை 20, 2011

புவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 2

முன் குறிப்பு : இந்த தொடரை படித்து விட்டு அத்தை பல அரிய தகவல்களை தந்து கொண்டிருக்கிறார். அவற்றை தொகுத்தால் இன்னுமொரு தொடரே கிடைக்கும். அவற்றை கொண்டு "வேர்களும் விழுதுகளும்" என்ற தொடரை எழுத திட்டமிட்டுளேன். இரண்டு தகவல்களை மட்டும் இப்போது வெளி இடுகிறேன்.

தகவல் ஒன்று : நவராத்திரியில் ஒரு நாள் மட்டுமல்ல ஒன்பது நாட்களும் சுமங்கலிகளுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் (கை குழந்தை முதல் கம்புன்றும் பாட்டி வரை) எல்லோருக்கும் அரச மாளிகையில் மரியாதை உண்டு.

தகவல் இரண்டு : பெண்களுக்கு நவராத்திரியில் சாப்பாடு போட பட்டதில்லை. அரிசி, பருப்பு, வெல்லம் முதலியவற்றோடு நான் முன்பே கூறிய மங்கல பொருட்களும் தரப்படும்.


சரி கதைக்கு வருவோம். இந்த கதையை கேட்கும் முன் கதையின் களமாகிய  
எங்கள் ஊரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இது சென்னையின் புறநகர் பகுதியாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தது. இன்றும் பாரிமுனைக்கு செல்வதை மெட்ராஸ் போகிறேன் என்று தான் பலரும் சொல்வார்கள். இங்கு சாதாரணமாக மளிகை, காய்கறி கடைகள் மட்டும் தான் அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் சில இடங்களில் தான் இருக்கும். இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கடைகள் அடைக்கப்பட்டு விடும்.

எங்கள் ஊரில் இருக்கும் ஒரு டீ கடையை காட்டி என் தம்பிகள் "டேய் அக்கா ஊரு பைவ் ஸ்டார் ஹோட்டல் பாருடா!" என்று கிண்டல் செய்வார்கள். முக்கியமாக எதாவது வாங்க வேண்டுமென்றால் தாம்பரத்திற்கு தான் போக வேண்டும். ஊருக்குள் பஸ் வசதியெல்லாம் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஆட்டோ தான். மெயின் ரோடுக்கு வந்தால் தான் அதுவும். ஆட்டோ பிடித்து தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் அல்லது ஜி.எஸ்.டி ரோடு வரவேண்டும்.

என் நிலை இப்படி இருக்க தலைவர் அலுவலகத்தில் வருடா வருடம் எங்காவது டூர் செல்வது வழக்கம். இந்த வருடம் ஊட்டி செல்வதாக ஒரு மாதம் முன்பே முடிவெடுக்க பட்டுவிட்டது . அப்போதில் இருந்தே ஒரே கனவுதான் எனக்கு. குழந்தைகளுக்கு புதிதாக இரண்டு செட் டிரஸ் எடுக்க வேண்டும் என்று தலைவரிடம் ஒரு பிட்டை போட்டு வைத்தேன். அதற்கு அவர் "டூர் என்ன தீபாவளியா, பொங்கல்லா? அதற்கு எதற்கு புது டிரஸ்?", என்றார்.

சரி இவர் சரிப்பட்டு வரமாட்டார் நாமே போய் வாங்கி வந்து விடவேண்டியது தான் என்று முடிவு செய்துகொண்டேன். என் நேரம் அன்றிலிருந்து குழந்தைகளுக்கு மாறி மாறி உடம்பை படுத்த தொடங்கியது. தலைவரோ "குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை நாங்கள் வரவில்லை என்று சொல்லிவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டார்.

அவ்வளவுதான், நம்புங்கள் மக்களே நம்புங்கள்.தலைவர் அலுவலகத்தில் இருந்து ஒருத்தர் ஒருத்தராக போன் போட்டு

"அக்கா, நீங்க வரலேன்னா எப்படி ?"
"அண்ணி, கட்டாயம் எப்படியாவது வந்திடுங்க".
"என்ன மேடம், சார் இப்படி சொல்றார்?"
என்று புலம்பி எடுத்து விட்டார்கள்.

இதையெல்லாம் கேட்டு சரி டாக்டரிடம் கேட்டு மருந்து வாங்கி கொண்டு போய் விடலாம் என்று கொள்கையளவில் முடிவெடுத்தோம். குழந்தைகளுக்கும் 24  மணி நேரமாக காய்ச்சல் இல்லாமல் இருந்தது.
ஏழாம் தேதி மாலை தனி பேருந்தில் கிளம்ப ஏற்பாடாகி இருந்தது. நாங்கள் முடிவெடுத்தது ஏழாம் தேதி காலையில்.

கடந்த ஏழாம் தேதி காலை தலைவர் அலுவலகம் செல்லும் முன் "சரி, டுர்ருக்கு பாக் பண்ணிடு, சாயங்காலம் ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பவேண்டும். ஆறரை மணிக்கு பஸ் பெருங்களத்தூர் வரும். அங்கு ஏறிக்கொள்ள வேண்டும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்தால் கிளம்பத்தான் சரியாக இருக்கும். எதுவும் இழுத்து விட்டு கொள்ளாதே. இருக்கிறதை வைத்து பாக் பண்ணு." என்று மிரட்டி விட்டு சென்றார்.

நானும் சரியென்று இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது என்னை மட்டும் விடுவதற்கு. எல்லா வேலைகளும் மதியம் இரண்டு மணிக்குள் முடிந்து விட்டன. இரண்டு மணிக்கு சின்னவளை ஸ்கூலில் இருந்து அழைத்து வரவேண்டும். பெரியவளை மூன்று மணிக்கு அழைத்து வரவேண்டும்.

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நிறைய நேரம் தான் இருக்கிறதே சின்னவளை அழைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான மாட்சிங் டாப்ஸ் மட்டும் இரண்டு வாங்கிகொண்டு பெரியவளுக்கு ஸ்கூல் விடுவதற்குள் வந்துவிடலாம் என்று திட்டம் போட்டேன்.

மாட்சிங் டாப்ஸ் வாங்க வேண்டிய pants, skirts  எல்லாம் ஒரு பையில் எடுத்து கொண்டேன்.பணம் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன். சின்னவளை ஸ்கூலில் போய் அழைத்து கொண்டு ஒரு ஆட்டோ பிடித்தேன். அந்த நேரத்தில் ஆட்டோ கிடைப்பதே எங்கள் ஊரில் சிரமம்.

ஆட்டோ காரர் கேட்டார்,"இந்த நேரதுலயம்மா இந்த ஸ்கூல் விடுவாங்க, நாலு மணிக்கு இல்ல?"

"சின்ன class  க்கு கெல்லாம் இரண்டு மணிக்கு விட்டுடு வாங்க, மத்தவங்களுக்கு மூணரை மணிக்கு விடுவாங்க. நீங்க என்ன ஸ்கூல் ஆட்டோவா?"

"ஆமாம்" என்றார் ஆட்டோகாரர்.

நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. பணத்தை தந்து விட்டு இறங்கி கொண்டேன். நான் இறங்கிய இடத்திலும் ஒரு ஸ்கூல் இருந்தது. ஆட்டோ காரர் கேட்டார் "எம்மா ஸ்கூல் பக்கத்துலையே வீடு இருக்கும் போது ஏன் இந்த ஸ்கூல்ல  சேர்க்காம தூரமா கொண்டு செர்த்திருகேங்க? இது நல்ல ஸ்கூல் இல்லையா?"

"இதுவும் நல்ல ஸ்கூல் தான் ஆனால் எங்க வீடு இங்க இல்ல, இங்க வேற ஒரு வேலையாய் வந்தேன்." என்று சொல்லி விட்டு குழந்தையையும் அழைத்து கொண்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ஆட்டோவும் திரும்பி போய் விட்டது.

ஒரு நாலடி நடந்திருப்பேன் அப்போது தான் கவனித்தேன் கையில் குழந்தையின் ஸ்கூல் bag, lunch bag, matching dress வாங்க வேண்டிய துணிகள் இருக்கும் பை எல்லாம் இருக்கிறது என் கை பையை மட்டும் காணவில்லை. வேகமாக ஆட்டோ நின்றிருந்த இடத்திற்கு திரும்பி வந்து பார்த்தேன் ஆட்டோ போய் விட்டிருந்தது. நிச்சயம் பை அதில் தான் விழுந்திருக்க வேண்டும்.இப்போது என்ன செய்வது ? எப்படி தேடுவது? நேரமும் குறைவாகவே இருந்தது. என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. கையில் குழந்தையுடன் திரு திரு வென்று முழித்து கொண்டு நின்றேன்.சில நிமிடங்கள் தான். ஒரு யோசனை தோன்றியது.

நான் இறங்கிய இடத்திலும் ஒரு ஸ்கூல் இருந்தது. அங்கு ஸ்கூல் விடும் நேரமாதலால் நிறைய பெற்றோர் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக நின்றிருந்தார்கள். அவர்கள் நான் ஆட்டோவில் இருந்து இறங்கியதையும் பின்னர் தவிப்பதையும் பார்த்து கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் சென்றேன். "நீங்கள் யாராவது எனக்கு உங்கள் மொபைல் கொஞ்சம் கொடுத்து உதவ முடியுமா?, என் கை பை ஆட்டோ வில் மிஸ்ஸாகி விட்டது. அதில் தான் என் மொபைல் இருக்கிறது. என் மொபைல் போனுக்கு போன் செய்தால் ஆட்டோ காரர் எப்படியும் என் பையை திருப்பி கொண்டு வந்து தந்து விடுவார்." என்றேன்.

3 கருத்துகள்:

RAMVI சொன்னது…

என்ன தா. தலைவி இப்படி சஸ்பன்ஸில் நிறுத்திவிட்டீங்களே அப்பறம் என்ன ஆச்சு..

Thanai thalaivi சொன்னது…

சஸ்பென்ஸ் வைக்கணும்னு வைக்கறதில்லை. அதுக்கு மேல எழுத டைம் இல்லை. ஆடி மாதம் ஆரம்பித்து விட்டதால் இனி பண்டிகைகள் அணிவகுக்கும் எனவே கொஞ்சம் பிஸியாகத்தான் இருப்பேன்.

என் மகள்கள் தங்கள் மகள்கள் போல் வளர்ந்தால் தான் கொஞ்சம் நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறன்.

siva சொன்னது…

interesting mami..