ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

மறக்க முடியாத ஜோக்குகள்

படித்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் என்னால் மறக்க முடியாத சில நகைச்சுவை துணுக்குகள் இங்கே. இவற்றை எங்கே,எப்போது படித்தேன் என்பது நினைவில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------

மந்திரி : மன்னா ! இப்போது அந்தபுரத்திற்கு போகாதீர்கள், மகாராணியார் தங்கள் மேல் மிகவும் கோபமாக இருக்கிறார்.

மன்னர் : எப்படி சொல்கிறீர்கள் ?

மந்திரி : கையில் உள்ள கத்தியால் பழம் ஒன்றை நறுக்கி கொண்டே,"உன்னைத்தான் நான் அரிவேன், மன்னவனை யார் அரிவார்...?" என்று பாடிகொண்டிருக்கிறார் மகாராஜா !

-------------------------------------------------------------------------------------------------------------
பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :

டாக்டர் (பைத்தியத்திடம்)  : என்ன எழுதற ?

பைத்தியம் : லெட்டர்.

டாக்டர் : யாருக்கு?

பைத்தியம் : எனக்கு தான்.

டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?

பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு  தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.

(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))

-------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் : அந்தாளை ஏன் எல்லோரும் சேர்ந்து அடிக்கிறாங்க ?

மற்றொருவர் : ஜோதிடர்கள் மாநாட்டில் பாட கூப்பிட்டால்,
"நடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று பாடி இருக்கிறார், பின்ன அடிக்கமாட்டங்களா !?

-------------------------------------------------------------------------------------------------------------

மருமகள் : நான் என் குழந்தைகளுக்கு எல்லா சாப்பாடும் நான் ஸ்டிக்ல்ல தான் செஞ்சு தரேன்.

மாமியார் : அதான் உன் குழந்தைகள் யாரோடும் ஒட்டவே மாட்டேன்கறதுகளா !?

------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

தவமாய் தவமிருந்து...

இதே சிங்கார சென்னையில ரொம்ப வருஷம் முன்னாடி நடந்த கதை இது.

அவங்க ஒரு இளம் தம்பதி. அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு ரொம்ப வருத்தம். அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு சொல்லமுடியாது. என்னன்னா, அந்த அம்மாவுக்கு ரெண்டு மூணு தரம் உண்டாகி உண்டாகி கலஞ்சிடிச்சி.

இப்படி நடந்ததால அந்தம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க. டாக்டர் கிட்ட போனாங்க. டாக்டரும் ஒண்ணும் பெரிசா பிரச்சனை இல்லைன்னு சொல்லி மருந்து குடுத்தாங்க.

அந்த அம்மாக்கு கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகம். அதனால, அவங்க நாத்தனார் கிட்ட குழந்தை பிறக்கறதுக்கு எதாவது பரிகாரம் பண்ணலாமான்னு கேட்டாங்க. அவங்களும், அம்பாள் உபாசன பண்ற ஒரு மாமி கிட்ட தம்பி பொண்டாட்டிய கூட்டிகிட்டு போனாங்க.


அந்த மாமி அம்பாள நல்லா பூஜை பண்ணி, ஒரு வாழப்பழத்துல்ல அம்பாள் மந்திரத்தை ஜபிச்சு குடுத்து , "இதை ஸ்வாமியை வேண்டிண்டு சாப்பிடு குழந்தை தங்கும்,"ன்னு சொல்லி அனுப்பினாங்க.

அந்தம்மா அந்த பழத்த பய பக்தியோட வாங்கிட்டு போய் அவங்க வீட்டு ஸ்வாமி ரூம்ல்ல வச்சிட்டு, குளிச்சிட்டு வந்து சாப்பிடலாம்ன்னு போனாங்க.

குளிச்சிட்டு வந்துப்பார்த்தா பழத்த காணூம். எங்க போயிருக்கும்ன்னு பதறிக்கிட்டே அங்கையும்,இங்கையும்மா தேடினாங்க. அப்போ அங்கவந்த அவங்க மாமனார்,"என்ன தேடரம்மா ன்னு?" கேட்டாரு.

"இங்க ஒரு பழம் வச்சிருந்தேன், அதைதான்."

"ஒரு அதுவா சுவாமி பிரசாதம் வீணாபோகக்கூடாதேன்னு நான் தாம்மா சாப்பிட்டேன்."

இத கேட்ட உடனே அந்த அம்மாவுக்கு ரொம்ப பயமா போய்டிச்சு. மாமனார் கிட்ட ஒண்ணும் சொல்லாம, நாந்தனார தேடி ஓடினாங்க. அவங்க அப்பா அந்த பழத்த சாப்பிட்டுட்ட விஷயத்த சொன்னாங்க.

அவங்களும் என்ன செய்யறதுன்னு தெரியாம ரெண்டு பேருமா அந்த மாமிகிட்டே திருப்பியும் போய் விஷயத்தை சொன்னாங்க. அந்த மாமியும்  "பதறாதீங்கோ !, சம்பதம்மில்லாதவா சாப்பிட்டா அது பலிக்காம போய்டும் அவ்வளவு தான் (பின்ன அது என்ன மருந்தா ?!, வியாதி இல்லாதவங்க சாப்பிட்டா கேடு வரத்துக்கு). நான் திருப்பியும் மந்திரிச்சு தரேன், இந்த வாட்டியாவது  ஒழுங்கா சாப்பிடு." ன்னு சொல்லி அடுத்த முறை வெண்ணெயில மந்திரிச்சு கொடுத்தாங்க.

இந்த வாட்டி அந்த அம்மா சரியா அம்பாள் பிரசாதத்த  சாப்பிடவும் அவங்களுக்கு குழந்தை தங்கிடிச்சு. அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். தனக்கு பக்தியுள்ள குழந்தை பிறக்கனும்ன்னு தினம் தினம் கடவுளை வேண்டிகிட்டே இருந்தாங்க. (ஆனா பாருங்க தனக்கு புத்தி உள்ள குழந்தை வேணும்ன்னு கேட்க அவங்க தவறிட்டாங்க. இதுக்கு தான் சொல்லறது எப்பவுமே நாம கடவுள் கிட்ட கேட்டா சரியா கேட்க தெரியாம போயிடலாம். அதனால கடவுள் தரத ஏத்துக்கணும்.) :)))

இப்படியாக ஒரு கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் அவங்களுக்கு ஒரு பாப்பா பொறந்துச்சு. பாப்பா அவங்க ஆசைப்பட்டா மாதிரியே ரொம்ப அழகாவும் (!?!?!?), பக்தியாவும் வளந்துது. ஆனா, அந்த பாப்பாவுக்கு தான் ஏன் பொறந்தோம்? தான் இந்த ஒலகத்துல என்ன செய்யணும்? இப்படி எதுவுமே தெரியலை.

இப்படியே அந்த பாப்பா வளர்ந்து பெரிய அக்காவா, அம்மாவாவும் ஆய்டிச்சு. அப்பவும் அவங்களுக்கு அவங்களோட வாழ்க்கையோட குறிக்கோள் என்ன என்கிறது தெரியலை. "நான் பிறந்த நாளில் என்ன சிறப்பு ? எல்லாம் சாதரணமா தானே இருக்கு?" ன்னு நினச்சிக்கிட்டே இருப்பாங்க.  இப்படி தவமாய் தவமிருந்து, நம்மளை நம்ம அம்மா எதுக்கு பெத்தாங்க ன்னு யோசிப்பாங்க.

அப்பத்தான் அவங்களுக்கு "சிநேகா" வ பத்தி தெரிய வந்தது. இவங்க   பிறந்த அதே நாளில் தான் அந்த சிநேகா வும் பிறந்திருந்தா. ஆனா, அவங்கள  விட ரொம்ப சின்னவளா இருந்தாலும் ரொம்ப பெரிய காரியமெல்லாம் அவ செய்யறா. அது என்னனா, யாராவது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்குன்னு சிநேகா கிட்ட சொன்னா, அவ அவங்களுக்கு ஆறுதல் சொல்லி அவங்கள வாழவைக்கிறா.

இது தெரிஞ்சப்ப தான் இவங்களுக்கு ஒரு உண்மை புரிஞ்சுது , "வாழ்க்கைல ஏதாவது ஸ்பெஷல் வேணும் ன்னு நினைக்கிறத விட வாழ்க்கையே ஒரு ஸ்பெஷல் தாங்கிறது தான் அது."

இன்றையநாள் கடவுளால நமக்கு தரப்பட்டிருக்கிறது. இதை பயனுள்ள வகைல கழிக்கன்னும்.

உங்களுக்கு சிநேகாவ தொடர்பு கொள்ளணும்னா இங்க கிளிக் பண்ணி "சிநேகா" ன்னு கூப்பிடுங்க அவ ஓடி வந்திடுவா. இல்லன்னா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க :044 - 2464 0060.  சிநேகா கிட்ட பேசலாம்.

அப்புறம், ஒரு முக்கியமான விஷயம். நான் மேலே சொன்ன கதைல வந்தவங்களுக்கும் சினேகாவுக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாள்.

SEPTEMBER 10 :  ANTI-SUICIDE DAY.

வாழ்க்கைங்கிறது ரொம்ப pericious.  வாழறதே பெரிசுங்கிறது, தன் அன்புகுரியவங்களை இழந்தவங்களுக்கு புரியும். "சும்மா, எனக்கு ---------- வாவது வாழ்ந்திருக்க கூடாதான்னு?" அவங்க புலம்பறத கேட்கும் போது நாம ஒவ்வொருத்தரும் பலருக்கும் தேவையா இருக்கோம்.அதை சரியா பூர்த்தி செய்யணும் ன்னு தோணும்.

"எனக்கு அன்பு கிடைக்கல, நான் பரிட்சைல பாசாகல, என்னை யாரும் புரிஞ்சுக்கல", இப்படி நினைக்காம, "நான் அன்பு செலுத்துவேன், நான் பலர் பாசாக ஊக்குவிப்பேன், நான் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிப்பேன்."

 இப்படி நினைக்கலாமே. "தவமாய் தவமிருந்து பெற்ற வாழ்க்கையை வீணாக்கலாமா!?"

வாழ்கை வாழ்வதற்கே.!

புதன், செப்டம்பர் 04, 2013

குருவே சரணம்

 "PARENTS ARE THE FIRST TEACHERS, AND THE TEACHERS ARE THE SECOND PARENTS."  என்பார்கள். நிற்பது,நடப்பது,உண்பது,உறங்குவது,பேசுவது என பலவற்றையும் சொல்லிதராமலே பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். சிலவற்றை அவர்கள் கற்றும் தருகிறார்கள். எனவே, PARENTS ARE THE FIRST TEACHERS.


நம்மிடம் இருக்கும் நல்ல குணமோ, கெட்ட குணமோ அவர்களிடமிருந்து தான் பெறுகிறோம்.

அதனால், என் முதல் ஆசிரியர்களான என் பெற்றோருக்கு இன்று ஆசிரியர் தின வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


முன் காலத்தில் குருகுல வாசம் என்ற முறை இருந்தது. குழந்தைகள் குருவின் வீட்டிலேயே தங்கி அவர்களையே பெற்றோராக பாவித்து அவர்கள் சொல்படி கேட்டு கல்வி கற்க வேண்டும். எனவே, THE TEACHERS ARE THE SECOND PARENTS.

 என்னிடம் சில நல்ல பழக்கங்களாவது உள்ளதென்றால் அது என் ஆசிரிய பெருமக்கள் தந்த தன்னலமற்ற கொடையாகும்.

"கார்த்தால  நான் கிளாஸ்குள்ள நுழைஞ்ச உடனே யாரும் எனக்கு குட் மார்னிங் சொல்லக்கூடாது. நான் சொல்லி குடுத்திருக்கேனே அந்த ஸ்லோகங்கள், அதை தான் சொல்லணும்." சொன்னவர் எங்களுக்கு  வரலாறு, மற்றும் ஆங்கிலம் நடத்திய எங்கள் தலைமை ஆசிரியை திருமதி.பத்மாவதி அவர்கள். அந்த ஸ்லோகங்கள் "அசாத்திய சாதக ஸ்வாமின்" என்று தொடங்கும் ஆஞ்சநேயர் சுலோகம் மற்றும் "அன்னையே அருந்துணையே" என்று தொடங்கும் அரவிந்த அன்னை சுலோகம்.

இன்றும் நான் "அசாத்திய சாதக ஸ்வாமின்" சொல்கிறேன். அது மிகவும் சக்திவாய்ந்த சுலோகம் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

அவர் வரலாறு பாடம் நடத்தும்போது. பாடம் மட்டும் நடத்தவில்லை. நம் நாட்டை பற்றிய பொதுவான பல விஷயங்களை சுவைபட கூறுவார். அவர் பேசுவதை கேட்கும் போது கேட்பவருக்கு தேசபக்தி பீறிட்டு கிளம்பும். "எம்டன்" என்றால் என்ன என்பதை எங்களுக்கு விளக்கியவர் அவர் தான்.

நான் வரலாறை சிறப்பு பாடமாக எடுத்துப்படிக்க அவர்தான் காரணம்.

கணக்கே வராது என்று காத தூரம் ஓடிய என்னை கணக்கில் எண்பது சதவிகிதம் வாங்க வைத்தவர் என் லக்ஷ்மி மிஸ். பத்தாம் வகுப்பு முடிவுகள் வந்து நான்  பள்ளிக்கு சென்ற போது எனக்காக வாசலிலேயே காத்திருந்தார். "மாத்ஸ் ன்னாலே பயப்படுவியே எவ்வளவு மார்க் தெரியுமா?" என்று குறும்பாக சிரித்தவர்,"உள்ள போய் மார்க் ஷீட்ட பார்." என்று சஸ்பென்ஸ் வேறு வைத்தார்.

எப்போதும் சிரித்தமுகம் என்று என்னை பலர் சொல்வார்கள். அது அவர்களிடமிருந்து கற்றது தான். ஒரு முறை அவர்களின் சோகமான சொந்த வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்த போது, இத்தனை சோகத்திலுமா இவர் இத்தனை எனர்ஜடிக்காக இருக்கிறார் என்று ஆச்சர்யம் ஏற்பட்டது.


"ஏம்மா நீங்களாம் இந்த காதலை பற்றி என்னம்மா நினைக்கிறிங்க?" என்று கேள்வி கேட்டு எங்களை சிந்திக்க தூண்டி சிறுவயதில் நாங்கள் வழிதவறி விடாமல் இருக்க காரணமாய் இருந்தவர் எங்கள் தமிழ் ஆசிரியை திருமதி.மணிமேகலை மிஸ். பல பெண்ணிய கருத்துக்கள் என்னுள் பதிய காரணமாய் இருந்தவரும் அவர்தான்.

ஒருமுறை அவர்  "தினமும் படுக்க போறதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது படிக்கணும், இல்லன்னா ஒரு நோட்டாவது திருத்தணும். அப்பத்தான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். என் வீட்டுல கூட சொல்லிவச்சிருக்கேன்  நான் இறந்த பிறகு என் தலைமாட்டுல ஒரு புக்கும், பேனாவும் வச்சிடுங்க அப்பத்தான் என் ஆத்மா சாந்தி அடையும்ன்னு." என்று சொல்ல நாங்கள் அசந்து போனோம்.

இன்று, "ராத்திரி பத்து மணிக்கும் முடியல,முடியலன்னு  சொல்லிண்டு அப்படியாவது என்ன படிக்கன்னுமா." ன்னு தலைவர் சத்தம் போட்டாலும் நான் தினமும் தூங்குவதற்கு முன் ஏதாவது படிப்பது அவர் கற்றுத்தந்தது தான்.

நானும் தலைவரும் கண் தானம் செய்திருப்பதும் நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது தான்.

புஷ்பா மிஸ், இந்திரா மிஸ் இவர்களை பார்த்தால் தாய் பாசம் பொங்கி வரும். .

எங்களுக்கு பரிட்சை வரும்போது உருகி உருகி அவர்களின் மதப்படி ப்ராத்திப்பதை பார்த்தால் எங்கள் மேல் எங்களை விட அவர்களுக்கு எவ்வளவு பாசம் என்பது புரியும்.

சாந்தா மிஸ், பேருக்கேற்றார் போல் சாந்தமான மிஸ். இவர் கிளாஸ் என்றால் எங்களுக்கு கொண்டாட்டம் தான். அவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் கூச்சல் போட்டு கொண்டு குஷியாக இருப்போம்.

"இப்படி வருடாவருடம் வரும் குழந்தைகளை இவர்களால் எப்படி நேசிக்க முடிகிறது?",  என்று எனக்கு வியப்பாக இருக்கிறது.

இப்படி ஆன்மீகம்,சமூகம்,அரசியல்,அன்பு,பாசம் என்று பல விஷயங்களை என் ஆசிரியைகளிடம் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன்.

என் குழந்தைகளிடம் சொல்லிவைத்திருக்கிறேன், "உங்களால் உங்கள் பள்ளிக்கும், ஆசிரியார்களுக்கும், வீட்டுக்கும்,நாட்டுக்கும் பெருமை ஏற்ப்படவேண்டும். அப்படிபட்ட காரியங்களையே நீங்கள் செய்யவேண்டும். இது தான் நீங்கள் செய்யக்கூடியது."

உலகில் எல்லோரும் நமக்கு எத்தனையோ பாடங்களை கற்று கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

எனக்கு உலகத்தை காட்டிய என் ஆசிரிய பெருமக்களுக்கு என் கோடானுகோடி வணக்கங்கள்.