திங்கள், ஆகஸ்ட் 29, 2011

கடை நிலை ஊழியர்கள் - (தொடர் பதிவு) இறுதி பகுதி.



 மீனாம்மா :  மீனாம்மாவின் உண்மையான பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது. மீனாவின் அம்மா மீனாம்மா அவ்வளவு தான். மீனாம்மாவிற்கு மூன்று குழந்தைகள். ஒரு மகன், இரண்டு மகள்கள். மீனாதான் கடைசி. 

சின்னவள் பிறந்த பின் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு வீட்டு வேலைகளை செய்ய ரொம்ப கஷ்டமாக இருந்ததால் கீழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மீனாம்மாவை வேலைக்கு வைத்து கொண்டேன்.

நகர்புற வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகளின் சகல லக்ஷணங்களும் மீனாம்மாவிடம் இருந்தன. குடிகார கணவன்,பொறுப்பில்லாத குழந்தைகள், எப்போதும் தேவைகள், சொல்லாமல் மட்டம் போடுவது முதலியன.

அவள் குழந்தைகளிலேயே மீனா தான் பொறுப்பு உள்ளவள். பதிமூன்று, பதினான்கு வயதிருக்கும், தன் அம்மாவிற்கு உதவியாக வந்து வேலை செய்யும். நகராட்சி பள்ளியில் படித்து வந்தாள்.  நான் அடிக்கடி மீனாம்மாவிடம்,"மீனாவை வீட்டு வேலை செய்ய வைக்காதீங்க மீனாம்மா." என்று கண்டித்து கொண்டே இருப்பேன். எப்போதும் பொறுப்பானவர்களிடம் தான் எல்லோரும் அதிகமாக எதிர்பார்கிறார்கள். மீனாவை வஞ்சித்து அவள் சகோதரனுக்கும், சகோதரிக்கும் அதிகமாக செய்வாள் மீனாம்மா. எனக்கு அதில் வருத்தம் தான். ஆனால் அடுத்தவர் வீட்டு விஷயத்தில் நாம் எப்படி தலையிட முடியும்?

அதே காலகட்டத்தில் என் அம்மா வீட்டில் அஞ்சம்மா என்பவர் வேலை செய்து வந்தார். தலைவர் அங்கு சென்றால் "FIVE MUMMY வந்தாச்சா?" என்று விளையாட்டாக கேட்டு வந்தார். உடனே என் சகோதரர்கள்,"அதென்ன உன் வீட்டுக்காரர் எங்க வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைப்பது?  நாங்கள் உங்கள் வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைக்கிறோம் ,"FISH MUMMY" என்று பெயர் வைத்து விட்டார்கள்.

மீனாம்மாவிற்கும் தலைவருக்கும் எட்டாம் பொருத்தம் தான். "அந்தம்மா நல்லா பெருக்க மாட்டேன்குது, சுத்தமா தொடைக்க மாட்டேன்குது, அத ஏன் வேலைக்கு வச்சிருக்க? அனுப்பிடு !" இப்படி தினமும் என்னை படுத்துவது போதாதென்று அந்தம்மாவிடமும்,"மீனாம்மா அங்க பாருங்க தூசி, இங்க சரியாய் தொடைங்க !" என்று விரட்டி கொண்டே இருப்பார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மீனாம்மாவிற்கு  நான் போடும் டீ பிடிக்காதாம். தலைவர் போடும் டீ தான் பிடிக்குமாம். "அந்த வீட்டுல்ல அந்த ஐயா தான் நல்லா டீ போடுவாரு, அந்தம்மா டீ வேணுமான்னு கேட்டா நான் வேணாமுன்னு சொல்லிடுவேன்." என்று கீழ் வீட்டில் சொன்னாளாம். 

இதை நான் சொன்னதும் தலைவர்,"பார்த்தாயா ! நானா கொண்டு உன் டீயை அட்ஜஸ்ட் பண்ணி குடிக்கிறேன். " என்று சொல்லி சிரித்தார்.

இதை படித்தால், தக்குடு தங்கமணிக்கு "இட்லிமாமி" என்று பெயர் வைத்தது போல் எனக்கும் "டீ டீச்சர்" (tea masterக்கு பெண்பால்) என்று பெயர் வைக்க கூடும்.

கடைசியில் தலைவரின் ஆசை நிறைவேறியது. மீனாம்மா நிறைய வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்ததால், குறித்த நேரத்திற்கு வருவதில்லை. அவளாலும் இங்கு தொடர முடியவில்லை. கை வலி, கால் வலி என்று சொல்லிக்கொண்டு மூன்று வருடங்களாக நானே எல்லா வேலைகளையும் செய்வது தொடர்கிறது.

இந்த பதிவை தொடர நான் அழைபவர்கள் : 

மதுராகவி ரமாஜி : என் முதல் வாசகி, தற்சமயம் வரையில் ஒரே வாசகியும் கூட. அவரை நான் அழைப்பது "வாசகிக்கு மரியாதை" என்ற முறையில்.
UNDER THE MANGO TREE (லலிதா அக்கா) : சென்னை மாவடி வைகும் இவர் முறையில் எனக்கு தமக்கை என்றாலும், தோழி,குரு,நலம் விரும்பி என்று பல பல அவதாரங்களை எடுத்து எனக்கு வழி காட்டுபவர். இவரை உங்களுக்கு காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தக்குடு : என்னதான் என்னை "ஓசி பேப்பர்" என்று கிண்டல் செய்தாலும், நான் இவரை இந்த தொடரை தொடர அழைத்திருக்கும் காரணம் ஆண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் தருவதற்காக என்று நான் சொன்னால் அது உண்மையல்ல. எனக்கு பதிவுலகில் வேறு யாரையும் தெரியாது என்பது தான் உண்மை. தக்குடுவின் நகைச்சுவை  ததும்பும் எழுத்து வன்மையும் ஒரு காரணம்.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடை நிலை ஊழியர்கள் (தொடர் பதிவு) - பகுதி 2

முத்தம்மா :  நங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்த பிளட்திற்கு பூ விற்க வரும் பெண்.  அந்த பிளாட்டில் நிறைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். அங்கு இருந்த 48 வீடுகளுக்கும் செல்ல பெண். இரண்டு ஆண் குழந்தைகள். 

நல்ல மனம், கல கலப்பான பேச்சு இது முத்தம்மாவின் முத்திரை. 

நான் குடி போனவுடன் ஆடிமாதம் ஆரம்பித்திருந்தது. அந்த ஆடி பூரதிற்கு எல்லோருக்கும் வளையல் வாங்கி கொடுத்தேன். முத்தம்மாவிற்கும் கொடுத்தேன். அவள் அந்த வளையளுக்கே மிக மகிழ்ந்து,"அம்மா, நீங்க எனக்கு வளையல் குடுக்கறீங்க, உங்களுக்கு கூடிய சீக்கிரம் வளைகாப்பு வந்து நான் உங்களுக்கு வளையல் போடனும்மா." என்றாள்.

அப்போது எல்லோரும் எங்களை புதுமண தம்பதிகள் என்று எண்ணி இருத்தாலும், நான் என் முதல் குழந்தையை இழந்திருந்த விவரம் யாருக்கும் தெரியாது. முத்தம்மாவின் வார்த்தைகள்  எனக்கு தெய்வ வாக்காகவே தோன்றியது. 

அவள் மகன்களை என்னிடம் கொண்டுவந்து விட்டு, "அம்மா, இதுங்களுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் சொல்லிகுடுமா. எப்படியாவது இதுங்களை நல்ல படியா படிக்க வச்சிரணும்னு நினைச்சிருக்கேன். இவனுக அப்பன மாதிரி ஆவ கூடாதும்மா. அவன் குடிக்கிறான், கூத்தியா வச்சிருக்கான்." என்றாள்.

எதிர் வீட்டு மாமி வம்பாக,"அவள சித்தின்னு கூப்பிட சொல்லிக்குடுடி முத்தம்மா." என்றார்கள்.

உடனே அவள், "என் சக்களத்தி எப்படிம்மா இதுங்களுக்கு சித்தி ஆவா, என் தங்கச்சி தான் என் புள்ளைங்களுக்கு சித்தி. என்ன இருந்தாலும் ஆம்பள பசங்க அப்பன் இல்லனா தறுதலையா போய்டுங்க. அதனால வீட்டுல ஆம்பளைன்னு ஒருத்தன் இருக்கட்டுமேன்னு தான் என் புருசனையே வீட்ல விட்டு வச்சிருக்கேன்." என்ற புரட்சிகரமான பெண் முத்தம்மா.

ஒரு நாள் கதிரி கோபால்நாத் இன் மகுடி காசெட் போட்டிருந்தேன். முத்தம்மா
வழக்கம் போல் பூ விற்க வந்தாள். திடீரென்று,"அம்மா, அந்த பாட்ட நிறுத்துங்கம்மா, எனக்கு மகுடி கேட்டா சாமி வரும், நான் ஆட ஆரம்பிச்சிருவேன்." என்றவள் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் பாம்பு படமெடுப்பது போல் வைத்து கொண்டு ஆட தயாரானாள்.

பயந்து போன என் மாமியார்,"அய்யய்யோ.....! அந்த காஸ்செட்ட நிறுத்துங்கோ, இவளுக்கு சாமி வந்துடுது போலிருக்கே." என்று அலறவும், கேசட் நிறுத்தப்பட்டது. முத்தம்மாவின்னுள் இருந்த சாமி விடை பெற்றுக்கொண்டது.

இன்றும் அந்த கேசட் போடும் போதெல்லாம் தலைவர், "முத்தம்மா இருந்திருந்தா சாமி வந்து ஆடி இருப்பா." என்று சொல்லி சிரிப்பது வழக்கம்.

நான் பெரியவளை கர்ப்பமாக இருந்த போது முத்தம்மா அவளாகவே வந்து,"உனக்கு குழந்தை பொறந்த உடனே உன்வீட்டு வேலை எல்லாம் நான் செஞ்சுதறேன், நீ கவலையே படாதம்மா." என்றாள்.

எதிர் வீடு மாமியும்,"அவ நன்னா செய்வாடி, அவளையே வேலைக்கு வச்சிக்கோ. நல்ல மனசு, சூது,வாது தெரியாது." என்றார்கள்.

எல்லோரும் என் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்க கடவுளுக்கு என் மேல் அவ்வளவு கருணை இல்லை. நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த போதே மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி விட்டது. 

சென்னையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் கை குழந்தையை வைத்துகொண்டு திண்டாடிய போது முத்தம்மா இருந்திருந்தால் நம் குழந்தையை கொண்டாடி வளர்திருப்பாளே என்று நானும் தலைவரும் ஆதங்க பட்டுகொண்டோம்.

......தொடரும்.

கடைநிலை ஊழியர்கள் (தொடர் பதிவு)

எனக்கு எப்போதுமே வீட்டில் வேலை செய்யும் அம்மாள், அலுவலகத்தில் attender, peon போன்றவர்களோடு நல்ல நட்புறவுண்டு. அவர்களின் பாமரத்தனமான பேச்சிலும் ஒரு மேதமை இருக்கும். அவர்களின் வெகுளி தனமான அன்பில் உண்மை இருக்கும். அப்படிப்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.







பிரகாஷ்: நான் வேலை பார்த்த ஆடிட்டர் அலுவலகத்தில் attenderராக இருந்தவன். இளைஞன், எப்போதும் சிரித்த முகம். எல்லோரிடமும் நன்றாக பேசி பழககூடியவன். நான் வேலைக்கு சேரும் முன்பிலிருந்தே அவன் அங்கு வேலை பார்த்து வந்தான். 

நான் வேலைக்கு சேர்ந்து பலநாட்கள் ஆகியும் அவனுடன் அதிகமாக பேசி பழகவில்லை. ஒருநாள் என் அறையில் பல்பு பழுதாகி விட்டது. வேறு பல்பு கொண்டுவந்து மாற்ற சொன்னேன். அவனும் பல்பு மற்றிகொண்டிருந்தான்.

நான் அவனிடம் விளையாட்டாக, "ஏன் பிரகாஷ்... நீ மாற்ற இந்த பல்பு பிரகாசமா எரியுமா?" என்று கேட்டேன்.

திடீரென்று கேட்டதால் முதலில் விழித்து விட்டு, பின்னர் சிரித்தான். "silentஆ இருக்கியேன்னு நினைச்சா பயங்கர கிண்டல் பார்ட்டியா இருப்ப போலிருக்கே மேடம்?" என்றான்.

எல்லோரையும் ஒருமையில் தான் பேசுவான். ஒரு நாள் ஆடிடேர்ரிடம் ஜூனியர்ராக வேலை பார்த்தவர் இவனை "shabby gibbon" என்று திட்டி இருக்கிறார். இவனுக்கு ஏதோ திட்டுகிறார் என்று தான் புரிந்ததே தவிர் அர்த்தம்   புரியவில்லை. ஆனால் அவன் புத்திசாலி. அந்த வார்த்தைகளை ஞாபகம் வைத்துகொண்டு என்னிடம் வந்தான்(என்னை இங்கிலீஷ் புலவர் என்று நினைத்து கொண்டிருந்த அவன் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது?).

"மேடம்,"shabby gibbon" ன்னா இன்னாது மேடம்?"

""shabby" ன்னா அழுக்கு தெரியும்,"gibbon" ன்னா என்னன்னு தெரியலையேப்பா. dictionary இருந்தா பார்க்கலாம்."

"auditor ரூம்ல dictionary இருக்கு. வா மேடம், வந்து இப்பவே பார்த்து சொல்லு" என்று என்னை வற்புறுத்தி  அழைத்து சென்றான்.

எங்கள் auditor ரோ பயங்கர உஷார் பார்ட்டி. யாரும் எடுத்து கொண்டு ஓடிவிட கூடாது என்பதற்காகவோ என்னவோ ஜனக மகாராஜரின் சிவ தனுசை போல் ஒரு பெரிய dictionary யை வாங்கி வைத்திருப்பார். அதை இருந்த இடத்தில் வைத்தே தான் அர்த்தம் பார்க்க முடியுமே தவிர தூக்க கூட முடியாது.

அதில் "gibbon" என்பதற்கு மனித குரங்கு என்று படத்துடன் தமிழிலும் அர்த்தம் போட்ருந்தது. "இதோ பாரு பிரகாஷ், கிப்பான்னா மனுஷ குரங்குன்னு அர்த்தம்."

"இன்னாது மன்ஸ கொரங்கா? அப்படியா போட்டிருக்குது?" எட்டி பார்த்தான்.

"இக்கும்....ஆமா அப்பிடித்தான் போட்டிருக்குது. அப்பிடின்னா நான் மன்ஸ கொரங்கா...?! அதுவும் அழுக்கு மன்ஸ கொரங்கா?!"

"ஏன் பிரகாஷ், உன்னை யாராவது அப்படி சொல்லிடங்களா?"

"ஆமா மேடம், என்னிய ஒருத்தன் அப்பிடி சொல்லிக்கிறான். அவன நா சொம்மா உடறதில மேடம்." என்றபடி விரைந்து சென்றான்.

அந்த ஜூனியர் வந்ததும் அவரை கும்மி எடுத்து விட்டான். நான் பயந்தே போய்விட்டேன்.

திடீரென்று அவனுக்கு தானும் கம்ப்யூட்டர் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தான். ஒரு நாள் என்னிடம் வந்து," இட் (IT)industry ன்னா இன்னாது மேடம்?" என்று கேட்டான்.

முதலில் புரியாமல் விழித்த நான்," ஒ...... ஐ.டி யா அது இட் இல்ல பிரகாஷ் IT."என்றேன்.

அவன் உடனே "ஒ....நம்ம ஆடிட்டர் அடிக்கடி IT office போறேன்,IT office போறேன், இங்கிறாரே அதானா இது."

"ஐயோ பிரகாஷ், அது income tax இது information technology." என்றேன்.

"என் அக்கா கூட இப்படித்தான் மேடம் உனைய மாதிரியே நிறைய படிச்சிருக்குது . நிறைய certificate எல்லாம் வாங்கி இருக்குது. அதெல்லாம் கொண்டுவந்து தரேன் நீ வச்சிக்க மேடம்."

"ஒருத்தர் பேர்ல்ல இருக்கிற certificates இன்னொருத்தர் உபயோக படுத்த முடியாது பிரகாஷ்.ஏன் அதெல்லாம் உன் அக்காவுக்கு வேண்டாமா? யாருகாவது கொடுத்தால் அவங்க திட்ட மாட்டாங்களா?"

"என் அக்கா தான் செத்து போச்சே மேடம். எங்க மாமா ரொம்ப கொடும பண்ணுனதால நெருப்பு வச்சிகின்னு செத்து போச்சு." என்றான்.

அதையும் அவன் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் சொன்னவுடன் அதிர்ந்து போனேன்.

இந்த அப்பாவி இளைஞனின் வாழ்வில் இப்படி ஒரு சோகம் இருக்கும் என்பதை  சற்றும் எதிர் பாராத நான் பேச்சற்று இருந்தேன்.

பின்னர் என் தோழிகளிடம் இது பற்றி பேசிய போது அவர்கள் சொன்னது. " ஆமா, உனக்கு தெரியாதா....? அவன் அக்கா குழந்தைகளும் அவன் வீட்டில் தான் வளர்கிறார்கள். அவன்னுக்கு அம்மாவும் கிடையாது. அவன் அப்பா ஏதோ ஒரு கம்பென்யில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். அவன் வீட்டில் பெண்கள் யாரும் இல்லாததால் நம் ஆபீஸ் ஆண்கள் யாராவது ஒருத்தர் அவன்னுக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள்."

வேலையில் முழுகி என்னை சுற்றி இருக்கும் மனிதர்களை தெரிந்து கொள்ளாமல் இருந்த என் அறியாமையை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. ஒருவர் என்ன படித்திருந்தால் தான் என்ன, என்ன பட்டம் வாங்கி இருந்தால்தான் என்ன, எல்லாம் மரணத்தின் பின் பயனற்று தான் போகும். என்ற வாழ்கையின் நிலையாமையும் மனதில் எழுந்தது.

                                                                                                                           ........தொடரும்.

சனி, ஆகஸ்ட் 13, 2011

ரக்க்ஷாபந்தன் வாழ்த்துக்கள்





பதிவுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த ரக்க்ஷா பந்தன் திருநாள் வாழ்த்துக்கள். 

உங்கள் அன்பு தானை தலைவி.

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

புவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 3

 ம்ம்... கதையை எங்கே விட்டேன்? ஆங்... அந்த பள்ளி கூட வாசலில் நின்றிருந்த parents இடம் மொபைல் போன் தந்து உதவும் படி கேட்டேனல்லவா? ஒரு பெண்மணி அவரது போனை தந்தார். என் மொபைலுக்கு போன் அடித்தேன். போன் அடித்த போதுதான் ஆடோகாரருக்கு என் பை அவர் வண்டியில் இருப்பதே தெரிந்திருக்கிறது. அவர் போன் எடுத்து ஹலோ என்றார். பின் எனக்கும் அவருக்கும் இடையே நடந்த உரையாடல் கீழே.

ஹலோ ! ஆட்டோ மென்ங்களா? 

ஆமாங்க !

சார் ! நான்தான் சார் உங்க வண்டியில்ல இப்போ ஸ்கூல் வாசல்ல இறங்கினேனே! என் பையை உங்க வண்டியில தவற விட்டுடேங்க, கொஞ்சம் திருப்பி கொண்டு வந்து தரமுடியுமா? 

அதெல்லாம் இப்ப முடியாதுங்க. ஏழு மணிக்கு மேல வந்து வாங்கிகோங்க.

என்னது ! ஏழு மணிக்கு மேலயா ??? சார் நான் ஐந்து மணிக்கு ஊருக்கு போகணும் சார். இப்பவே என் பையை குடுதிடுங்க சார்.

அதெல்லாம் முடியாதுமா, ஏழு மணிக்கு மேல வந்து வாங்கிகோங்க. 

(இடையில் சுவிட்ச் ஆப் பண்ணு ! சுவிட்ச் ஆப் பண்ணு ! என்று குரல்கள் வேறு கேட்கிறது.)

சார், ப்ளீஸ் தயவு செய்து என் பேகை குடுத்திடுங்க. 

இத பாருங்கம்மா ! திரும்பி வந்து நான் பையை குடுக்கனும்னா அதுக்கும் முப்பது ரூபாய் குடுக்கணும்.

சரி ! தரேன் தயவு செய்து பையை குடுங்க சார்.

சரி ! ஒரு அஞ்சு மணிக்கு வந்து வாங்கிகோங்க.

நான் அஞ்சு மணிக்கு ஊருக்கு போகணும் சார். அதோட எங்க வந்து நான் வாங்கிக்கறது?

(மீண்டும் சுவிட்ச் ஆப் பண்ணு, சுவிட்ச் ஆப் பண்ணு குரல்கள் கேட்கின்றன.)

ஏன் போன் ஐ சுவிட்ச் ஆப் பண்ணி போட எனக்கு தெரியாது !?  நான் இப்போ கோமதி நகர்ல இருக்கேன். இப்போ எல்லாம் தரமுடியாது.

சார் ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க...(போன் கட் பண்ண படுகிறது).

சுற்றி இருந்தவர்களின் பரிதாப பார்வை என்னையே மையபடுத்தி நிற்கிறது. இப்போது என்ன செய்வது? அந்த அம்மாளிடமே அனுமதி பெற்று அவர் போனில் இருந்தே என் கணவருக்கு போன் அடித்தேன். வேறு ஒரு எண்ணில் இருந்து நான் கூப்பிடவும் குழம்பி போன அவர் பின்னர் விவரம் அறிந்து எரிச்சல் பட்டார்.

"நான் போன் பண்ணினா கட் பண்ணிடுவருங்க, நீங்க உங்க போன் ல்ல இருந்து எப்படியாவது நைசா பேசி வாங்கிடுங்க."

அவரும் போன் பண்ணி பார்த்திருக்கிறார். அடிக்கடி போன் அடிக்கவும் ஆடோக்காரர் போன் ஐ சுவிட்ச் ஆப் செய்து விட்டார். நல்ல வேளை யாக தலைவர் நான் இருந்த இடத்திற்கு அருகில் வந்து விட்டிருந்தார். அந்த பெண்மணிக்கு நன்றி கூறிவிட்டு புறபட்டோம். வழி நெடுகிலும் ஒரே லக்ஷார்ச்சனை, சஹாசர்ணாம அர்ச்சனை தான் எனக்கு.

"இப்படியா ஒருத்தி போன், எ.டி.எம் கார்டு, பணம் எல்லாத்தையும் பைல வச்சு இந்தா ஜாக்பாட் இங்கிரமதிரி விடுவா?"

"அந்த ஆட்டோ காரர் பையை திருப்பி தர ஐடியா யாலே இல்ல போலிருக்கே? நான் போன் பண்ணினதும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டான்." என்று திட்டிகொண்டே வந்தார்.

வீட்டுக்கு வந்து, "போன் காணோம் என்று போலீஸ் கம்ப்ளைன்ட் குடுங்க". என்றேன் . 

"ஆமா ! ஒரு நாளைக்கு ஊர்ல்ல ஆயிரம் போன் காணாம போகுது. உன் போன் ஐ கண்டு பிடிக்கிறது தான் போலீஸ் வேலையா? பேசாம ஊர்ருக்கு கிளம்பற வழியை பாரு." என்று சொன்னாலும் மொபைல் மிஸ்ஸிங் செல்லுக்கு போன் செய்தார். அந்த எண் பழுது பட்டிருந்தது. 

தலைவரிடம் மீண்டும் போன் செய்து பார்க்க சொன்னேன். அவரோ கோபத்தோடு ," அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை கிளம்பற வழியை பாரு. நீ பையை விட்டா கொண்டு வந்து குடுகிறது தான் அவன் வேலையா? " என்றார் 

எனக்கு ஆவேசமே வந்து விட்டது. தவறு நடப்பது சகஜம் தானே அதை தனக்கு சாதகமாக்கி கொள்ளுவது எப்படி சரியாகும்? "சரி, நான் கடவுளிடம் சொல்லி கொள்கிறேன்." என்று முடிவு செய்தேன். நேராக சமையலறை குள் சென்றேன். ஒரு தட்டில் ஒரு வெல்ல கட்டியை எடுத்து வைத்தேன். பூஜை அறையில் வைத்தேன் புவனேஸ்வரி படத்தை பார்த்தேன். "வேறு யாருக்காவது இந்த நிலை ஏற்படிருந்தால் நான் உதவி இருப்பேன் என்று நீ நினைத்தால், நான் உன் பேரை சதா உச்சரித்து கொண்டே இருப்பது பொய் இல்லை என்றால் என் பை நிச்சயம் கிடைக்கும்." என்று அவளிடம் மனதிற்குள் சொன்னேன்.

"என்கிட்ட அவர் ஸ்கூல் ஆட்டோ ன்னு சொன்னாருங்க, ஒரு வேளை ஸ்கூல் வாசலில் அவரை கண்டு பிடிச்சாலும் பிடிச்சிடலாம்."

"சரி, எப்படியும் பெரியவளுக்கு ஸ்கூல் விடும் நேரமாகி விட்டது. வா ! பார்க்கலாம்."

ஸ்கூல் வாசலில் ஒவ்வொரு ஆட்டோ வாக தேடினோம். நேரமாகி கொண்டிருந்தது .ஒவ்வொரு ஆட்டோ மேனிடமும் யாராவது சக ஆட்டோ மேன் வண்டியில் பை   கிடைத்ததாக கூறினார்களா? என்று விசாரித்தோம்.

யாருக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. தலைவரின் கோபமும் தன் அணைகளை உடைத்து கொண்டு பாய தயாராக இருந்தது. இதற்குள் பெரியவளும் அவள் தோழர்களும் (கண்ணன், குரு)வந்தார்கள். நான் எல்லோரிடமும் விசாரிப்பதை பார்த்து குரு ரொம்ப அக்கரையாக, " என்ன ஆன்டி பேக் தொலைச்சிடீங்களா? எங்கே? எப்படி?" என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான். அவர்களை கண்ணனின் அம்மா ரமணி யிடம் ஒப்படைத்து விட்டு பெரியவளை அழைத்து கொண்டு கவலையோடு வீடு திரும்பினோம்.

குழந்தைகளுக்கு  பால் காய்ச்சி கொண்டிருந்தேன். பெரியவள் என்னிடம் வந்து "ஏம்மா sad ஆ இருக்க?"

"என் பையை ஆட்டோல்ல தொலைச்சிட்டேன். அந்த ஆட்டோ காரர் பையை திருப்பி தராம மழுபல்லா பதில் சொல்றாருடா."

"நாங்கல்லாம் ஸ்கூல்ல  எதாவது பென்சில் கீழே கிடந்தா எடுத்து, இது யாரது ? இது யாரது ன்னு கேட்டு குடுப்போமே? ஆனா இவ்வளவு பெரியவரான அந்த ஆட்டோ மேன் உன் பேகை அப்படி திருப்பி தரவேணாமா?" என்றாள்.

"உனக்கு தெரிந்த இந்த விஷயம் பெரியவர்களுக்கு தெரியவில்லையே?" என்று நினைத்து கொண்டிருக்கும் போதே தலைவர் யாருடனோ போனில் பேசுவது கேட்டது.

"சார், நான் தான் சார் உங்க ஆட்டோ ல்ல பேக் விட்டாங்களே, அவங்க வீட்டுக்காரர் பேசறேன். பை எங்க வந்து வாங்கிகட்டும்?" 

"---------------------------"

"சரி, வண்டி நம்பர் சொல்லுங்க, எங்க சங்கரா ஸ்கூல் வாசல்லையா?, சரி இப்பவே வரேன்."

என்னால் நம்பவே முடியவில்லை. தலைவர் எதற்கும் போன் செய்து பார்ப்போமே என்று என் போன் இற்கு போன் செய்து பார்த்திருக்கிறார். போன் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு இருந்தது மட்டுமல்ல ஆட்டோ மேன் போன் ஐ எடுத்து அவர் ஸ்கூல் சவாரிக்கு வரும் சங்கரா ஸ்கூல் வாசலில் வந்து பையை வாங்கி கொள்ளும் படி கூறியுள்ளார்.  தலைவர் பையை வாங்க கிளம்பி சென்ற உடன் கண்ணனின் அம்மா ரமணி போன் செய்தார்(லேன்ட் லைனில்). 

"என்னங்க, பையை ஆட்டோ ல்ல விட்டுடீங்கன்னு கண்ணன் சொன்னான். நான் உங்க மொபைல் போனுக்கு போன் பண்ணி பார்த்தேன். அந்த ஆட்டோ காரர் தான் எடுத்தார். அவர் கிட்ட, "சார்! என் தோழியோடது தான் சார் அந்த பை தயவு செஞ்சு கொஞ்சம் கொண்டு வந்து குடுங்க."  என்று சொன்னேன். 

அதற்க்கு அவர்,"அவங்களே வந்து வாங்கி பாங்க." என்று எரிச்சலாக சொல்லிவிட்டார் என்றார்.

உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த நான் நடந்த அனைத்தையும் விவரித்தேன்.

"சரி, எப்படியும் கிடைச்சிடும், கவலை படாதீர்கள்." என்று ஆறுதல் கூறி விட்டு வைத்து விட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில் என் பை எந்த நிலையில் காணாமல் போனதோ அதே நிலையில் ஒரு பொருளும் தொலையாமல் அப்படியே கிடைத்து விட்டது.

தலைவர் சென்றவுடன் அந்த ஆட்டோ காரரே பையை கொடுத்து "நான் சாப்பிட போய்கிடிருந்தேன் சார். ரொம்ப பசி அதனால தான் பையை கொண்டு வந்து குடுக்க முடியலை. எல்லாம் சரியாய் இருக்கா பார்த்துகோங்க." என்றாராம்.

தலைவர் அவருக்கு நன்றி சொல்லி சிறு அன்பளிப்பும் வழங்கி விட்டு பையை வாங்கி கொண்டு வந்திருக்கிறார்.

பெரியவள்,"அப்பா, பையை குடுகாததுக்கு ஆட்டோ மேன் உன் கிட்ட சாரி சொன்னாராப்பா?" என்றாள்.

நான் அவளிடம்,"அவர் சாரி சொல்ல வேண்டாம்மா. பையை விட்டது நான் தானே. அதை அவர் நல்ல படியாய் திருப்பி தந்திருகின்றார். அவருக்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும்." என்றேன்.

மறக்காமல் போன் தந்து உதவிய அந்த பெயர் தெரியாத பெண்மணிக்கும், ரமணிக்கும் போன் செய்து நன்றி சொல்லிவிட்டு ஊருக்கு புறப்பட்டோம்.

சரி, கதை முடிந்தது. இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

* சமயத்தில் போன் தந்து உதவிய அந்த பெயர் தெரியாத பெண்மணி யார்?

* முதலில் எதிர்மறையாய் பேசிய ஆட்டோ காரர் மனம் மாறியது எப்படி?

* "போன் செய்து முயற்சிக்கவே மாட்டேன். பை கிடைக்காது." என்று சொல்லி கொண்டிருந்த தலைவர் மனம் மாறி போன் செய்தது ஏன்?

* கண்ணனின் அம்மா ஆட்டோ காரருக்கு போன் செய்தது ஏன்?

*ஆட்டோ காரருக்கு என்னை ஏமாற்றும் எண்ணம் இருக்கவில்லை என்று      தலைவர் கூறினார். 









"தனம் தரும், கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா 
மனம் தரும்,தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 
கனம் தரும், பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. "

ஆம்,அன்னையின் அருள் நமக்கு நல்லவர்களை நட்பாக்கி வைக்கும். நம்மை சுற்றி நல்லவர்களை வைத்து நமக்கு துன்பம் நேரும் போது அவர்கள் நமக்கு உதவுமாறு செய்வது அவள் அன்பு.

போன் தந்து உதவிய பெண், ஆட்டோகாரர், ரமணி, குழந்தை குரு எல்லோரும் நல்லவர்களே. இதை உணர்த்த தான் இந்த திருவிளையாடல்.

என் நம்பிக்கையை நானே உணர வைத்ததும் இந்த நிகழ்ச்சியே.

                                        

                                       நல்லதையே நினைப்போம்! 

                                       நல்லதையே சொல்வோம்! 

                                        நல்லதையே செய்வோம்!.

                                               நல்லதே நடக்கும்.



                                                              சுபம்