செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடை நிலை ஊழியர்கள் (தொடர் பதிவு) - பகுதி 2

முத்தம்மா :  நங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்த பிளட்திற்கு பூ விற்க வரும் பெண்.  அந்த பிளாட்டில் நிறைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். அங்கு இருந்த 48 வீடுகளுக்கும் செல்ல பெண். இரண்டு ஆண் குழந்தைகள். 

நல்ல மனம், கல கலப்பான பேச்சு இது முத்தம்மாவின் முத்திரை. 

நான் குடி போனவுடன் ஆடிமாதம் ஆரம்பித்திருந்தது. அந்த ஆடி பூரதிற்கு எல்லோருக்கும் வளையல் வாங்கி கொடுத்தேன். முத்தம்மாவிற்கும் கொடுத்தேன். அவள் அந்த வளையளுக்கே மிக மகிழ்ந்து,"அம்மா, நீங்க எனக்கு வளையல் குடுக்கறீங்க, உங்களுக்கு கூடிய சீக்கிரம் வளைகாப்பு வந்து நான் உங்களுக்கு வளையல் போடனும்மா." என்றாள்.

அப்போது எல்லோரும் எங்களை புதுமண தம்பதிகள் என்று எண்ணி இருத்தாலும், நான் என் முதல் குழந்தையை இழந்திருந்த விவரம் யாருக்கும் தெரியாது. முத்தம்மாவின் வார்த்தைகள்  எனக்கு தெய்வ வாக்காகவே தோன்றியது. 

அவள் மகன்களை என்னிடம் கொண்டுவந்து விட்டு, "அம்மா, இதுங்களுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் சொல்லிகுடுமா. எப்படியாவது இதுங்களை நல்ல படியா படிக்க வச்சிரணும்னு நினைச்சிருக்கேன். இவனுக அப்பன மாதிரி ஆவ கூடாதும்மா. அவன் குடிக்கிறான், கூத்தியா வச்சிருக்கான்." என்றாள்.

எதிர் வீட்டு மாமி வம்பாக,"அவள சித்தின்னு கூப்பிட சொல்லிக்குடுடி முத்தம்மா." என்றார்கள்.

உடனே அவள், "என் சக்களத்தி எப்படிம்மா இதுங்களுக்கு சித்தி ஆவா, என் தங்கச்சி தான் என் புள்ளைங்களுக்கு சித்தி. என்ன இருந்தாலும் ஆம்பள பசங்க அப்பன் இல்லனா தறுதலையா போய்டுங்க. அதனால வீட்டுல ஆம்பளைன்னு ஒருத்தன் இருக்கட்டுமேன்னு தான் என் புருசனையே வீட்ல விட்டு வச்சிருக்கேன்." என்ற புரட்சிகரமான பெண் முத்தம்மா.

ஒரு நாள் கதிரி கோபால்நாத் இன் மகுடி காசெட் போட்டிருந்தேன். முத்தம்மா
வழக்கம் போல் பூ விற்க வந்தாள். திடீரென்று,"அம்மா, அந்த பாட்ட நிறுத்துங்கம்மா, எனக்கு மகுடி கேட்டா சாமி வரும், நான் ஆட ஆரம்பிச்சிருவேன்." என்றவள் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் பாம்பு படமெடுப்பது போல் வைத்து கொண்டு ஆட தயாரானாள்.

பயந்து போன என் மாமியார்,"அய்யய்யோ.....! அந்த காஸ்செட்ட நிறுத்துங்கோ, இவளுக்கு சாமி வந்துடுது போலிருக்கே." என்று அலறவும், கேசட் நிறுத்தப்பட்டது. முத்தம்மாவின்னுள் இருந்த சாமி விடை பெற்றுக்கொண்டது.

இன்றும் அந்த கேசட் போடும் போதெல்லாம் தலைவர், "முத்தம்மா இருந்திருந்தா சாமி வந்து ஆடி இருப்பா." என்று சொல்லி சிரிப்பது வழக்கம்.

நான் பெரியவளை கர்ப்பமாக இருந்த போது முத்தம்மா அவளாகவே வந்து,"உனக்கு குழந்தை பொறந்த உடனே உன்வீட்டு வேலை எல்லாம் நான் செஞ்சுதறேன், நீ கவலையே படாதம்மா." என்றாள்.

எதிர் வீடு மாமியும்,"அவ நன்னா செய்வாடி, அவளையே வேலைக்கு வச்சிக்கோ. நல்ல மனசு, சூது,வாது தெரியாது." என்றார்கள்.

எல்லோரும் என் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்க கடவுளுக்கு என் மேல் அவ்வளவு கருணை இல்லை. நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த போதே மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி விட்டது. 

சென்னையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் கை குழந்தையை வைத்துகொண்டு திண்டாடிய போது முத்தம்மா இருந்திருந்தால் நம் குழந்தையை கொண்டாடி வளர்திருப்பாளே என்று நானும் தலைவரும் ஆதங்க பட்டுகொண்டோம்.

......தொடரும்.

4 கருத்துகள்:

RAMVI சொன்னது…

முத்தம்மா பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருக்கிறாரே!!
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்..

Thanai thalaivi சொன்னது…

நன்றி ரமாஜி,

முத்தம்மா மட்டுமல்ல, இவளை போல் எத்தனையோ பெண்கள் படிப்பறிவில்லை என்றாலும் தீர்கமாக சிந்திகிறார்கள். கடவுள் அவர்களுக்கு போராடும் வல்லமையை இயற்கையாகவே தந்து விடுகிறார் போலும். கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கிறது. திங்கட்கிழமை இந்த தொடரை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறேன்.

Lakshmi சொன்னது…

ஆமா சரியா சொன்னீங்க. இவங்களுக்கு படிப்பறிவு மட்டும்தான் இல்லே.மற்றபடி நம்மையெல்லாம்விட
எந்தவிததிலும் குறைவாக மதிப்பிட முடியாது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முத்தம்மா இருந்திருந்தால் நம் குழந்தையை கொண்டாடி வளர்திருப்பாளே என்று நானும் தலைவரும் ஆதங்க பட்டுகொண்டோம்./

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.