செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடைநிலை ஊழியர்கள் (தொடர் பதிவு)

எனக்கு எப்போதுமே வீட்டில் வேலை செய்யும் அம்மாள், அலுவலகத்தில் attender, peon போன்றவர்களோடு நல்ல நட்புறவுண்டு. அவர்களின் பாமரத்தனமான பேச்சிலும் ஒரு மேதமை இருக்கும். அவர்களின் வெகுளி தனமான அன்பில் உண்மை இருக்கும். அப்படிப்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.பிரகாஷ்: நான் வேலை பார்த்த ஆடிட்டர் அலுவலகத்தில் attenderராக இருந்தவன். இளைஞன், எப்போதும் சிரித்த முகம். எல்லோரிடமும் நன்றாக பேசி பழககூடியவன். நான் வேலைக்கு சேரும் முன்பிலிருந்தே அவன் அங்கு வேலை பார்த்து வந்தான். 

நான் வேலைக்கு சேர்ந்து பலநாட்கள் ஆகியும் அவனுடன் அதிகமாக பேசி பழகவில்லை. ஒருநாள் என் அறையில் பல்பு பழுதாகி விட்டது. வேறு பல்பு கொண்டுவந்து மாற்ற சொன்னேன். அவனும் பல்பு மற்றிகொண்டிருந்தான்.

நான் அவனிடம் விளையாட்டாக, "ஏன் பிரகாஷ்... நீ மாற்ற இந்த பல்பு பிரகாசமா எரியுமா?" என்று கேட்டேன்.

திடீரென்று கேட்டதால் முதலில் விழித்து விட்டு, பின்னர் சிரித்தான். "silentஆ இருக்கியேன்னு நினைச்சா பயங்கர கிண்டல் பார்ட்டியா இருப்ப போலிருக்கே மேடம்?" என்றான்.

எல்லோரையும் ஒருமையில் தான் பேசுவான். ஒரு நாள் ஆடிடேர்ரிடம் ஜூனியர்ராக வேலை பார்த்தவர் இவனை "shabby gibbon" என்று திட்டி இருக்கிறார். இவனுக்கு ஏதோ திட்டுகிறார் என்று தான் புரிந்ததே தவிர் அர்த்தம்   புரியவில்லை. ஆனால் அவன் புத்திசாலி. அந்த வார்த்தைகளை ஞாபகம் வைத்துகொண்டு என்னிடம் வந்தான்(என்னை இங்கிலீஷ் புலவர் என்று நினைத்து கொண்டிருந்த அவன் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது?).

"மேடம்,"shabby gibbon" ன்னா இன்னாது மேடம்?"

""shabby" ன்னா அழுக்கு தெரியும்,"gibbon" ன்னா என்னன்னு தெரியலையேப்பா. dictionary இருந்தா பார்க்கலாம்."

"auditor ரூம்ல dictionary இருக்கு. வா மேடம், வந்து இப்பவே பார்த்து சொல்லு" என்று என்னை வற்புறுத்தி  அழைத்து சென்றான்.

எங்கள் auditor ரோ பயங்கர உஷார் பார்ட்டி. யாரும் எடுத்து கொண்டு ஓடிவிட கூடாது என்பதற்காகவோ என்னவோ ஜனக மகாராஜரின் சிவ தனுசை போல் ஒரு பெரிய dictionary யை வாங்கி வைத்திருப்பார். அதை இருந்த இடத்தில் வைத்தே தான் அர்த்தம் பார்க்க முடியுமே தவிர தூக்க கூட முடியாது.

அதில் "gibbon" என்பதற்கு மனித குரங்கு என்று படத்துடன் தமிழிலும் அர்த்தம் போட்ருந்தது. "இதோ பாரு பிரகாஷ், கிப்பான்னா மனுஷ குரங்குன்னு அர்த்தம்."

"இன்னாது மன்ஸ கொரங்கா? அப்படியா போட்டிருக்குது?" எட்டி பார்த்தான்.

"இக்கும்....ஆமா அப்பிடித்தான் போட்டிருக்குது. அப்பிடின்னா நான் மன்ஸ கொரங்கா...?! அதுவும் அழுக்கு மன்ஸ கொரங்கா?!"

"ஏன் பிரகாஷ், உன்னை யாராவது அப்படி சொல்லிடங்களா?"

"ஆமா மேடம், என்னிய ஒருத்தன் அப்பிடி சொல்லிக்கிறான். அவன நா சொம்மா உடறதில மேடம்." என்றபடி விரைந்து சென்றான்.

அந்த ஜூனியர் வந்ததும் அவரை கும்மி எடுத்து விட்டான். நான் பயந்தே போய்விட்டேன்.

திடீரென்று அவனுக்கு தானும் கம்ப்யூட்டர் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தான். ஒரு நாள் என்னிடம் வந்து," இட் (IT)industry ன்னா இன்னாது மேடம்?" என்று கேட்டான்.

முதலில் புரியாமல் விழித்த நான்," ஒ...... ஐ.டி யா அது இட் இல்ல பிரகாஷ் IT."என்றேன்.

அவன் உடனே "ஒ....நம்ம ஆடிட்டர் அடிக்கடி IT office போறேன்,IT office போறேன், இங்கிறாரே அதானா இது."

"ஐயோ பிரகாஷ், அது income tax இது information technology." என்றேன்.

"என் அக்கா கூட இப்படித்தான் மேடம் உனைய மாதிரியே நிறைய படிச்சிருக்குது . நிறைய certificate எல்லாம் வாங்கி இருக்குது. அதெல்லாம் கொண்டுவந்து தரேன் நீ வச்சிக்க மேடம்."

"ஒருத்தர் பேர்ல்ல இருக்கிற certificates இன்னொருத்தர் உபயோக படுத்த முடியாது பிரகாஷ்.ஏன் அதெல்லாம் உன் அக்காவுக்கு வேண்டாமா? யாருகாவது கொடுத்தால் அவங்க திட்ட மாட்டாங்களா?"

"என் அக்கா தான் செத்து போச்சே மேடம். எங்க மாமா ரொம்ப கொடும பண்ணுனதால நெருப்பு வச்சிகின்னு செத்து போச்சு." என்றான்.

அதையும் அவன் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் சொன்னவுடன் அதிர்ந்து போனேன்.

இந்த அப்பாவி இளைஞனின் வாழ்வில் இப்படி ஒரு சோகம் இருக்கும் என்பதை  சற்றும் எதிர் பாராத நான் பேச்சற்று இருந்தேன்.

பின்னர் என் தோழிகளிடம் இது பற்றி பேசிய போது அவர்கள் சொன்னது. " ஆமா, உனக்கு தெரியாதா....? அவன் அக்கா குழந்தைகளும் அவன் வீட்டில் தான் வளர்கிறார்கள். அவன்னுக்கு அம்மாவும் கிடையாது. அவன் அப்பா ஏதோ ஒரு கம்பென்யில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். அவன் வீட்டில் பெண்கள் யாரும் இல்லாததால் நம் ஆபீஸ் ஆண்கள் யாராவது ஒருத்தர் அவன்னுக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள்."

வேலையில் முழுகி என்னை சுற்றி இருக்கும் மனிதர்களை தெரிந்து கொள்ளாமல் இருந்த என் அறியாமையை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. ஒருவர் என்ன படித்திருந்தால் தான் என்ன, என்ன பட்டம் வாங்கி இருந்தால்தான் என்ன, எல்லாம் மரணத்தின் பின் பயனற்று தான் போகும். என்ற வாழ்கையின் நிலையாமையும் மனதில் எழுந்தது.

                                                                                                                           ........தொடரும்.

2 கருத்துகள்:

RAMVI சொன்னது…

அனுபவ பகிர்வு அருமை. பிரகாஷின் கதை மனதை உலுக்கி விட்டது.
தொடர்ந்து எழுதுங்க. நாங்களும் உங்க அனுபவத்தை ரசிக்கிறோம்.

Thanai thalaivi சொன்னது…

ஆம், பிரகாஷிடம் நான் அவன் அக்காவின் certificates யாரும் பயன்படுத்த முடியாது என்று கூறிய போது, "அப்போ அதெல்லாம் இன்னா செய்றது மேடம்?" என்று கேட்டான். எனக்கும் பதில் தெரியவில்லை. ஒருவர் இறந்து விட்டால் அவர்கள் உபயோகித்த உடைகள்,மூக்கு கண்ணாடி என்று எதை வேண்டுமானாலும் பிறர் பயன்படுத்தலாம் ஆனால் அவர்கள் கற்ற கல்வியும், அதனால் பெற்ற சான்றிதழ்களும் என்ன செய்வது? கல்வியின் சிறப்பும் அதுதானே.