செவ்வாய், நவம்பர் 01, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி 3

மேடையில் பல விதமான லக்ஷ்மி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. க்ருஹ லக்ஷ்மி, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமன் காலடியில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி,விநாயகருடன் கூடிய லக்ஷ்மி, ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தில் சீதையாக உள்ள லக்ஷ்மி இப்படி பல விதமான லக்ஷ்மிகள்.

எனக்கு பாற்கடலில் இருந்து கற்பக விருக்ஷம், காமதேனு, தன்வந்திரி, சந்திரன் முதலியரோடு ஆவிர்பவித்து வரும் லக்ஷ்மி, பூஜை செய்ய கொடுக்கப்பட்டது. சந்நிதிக்கு நேரே உட்கார வைக்கப்பட்டேன். எனக்கு ரொம்ப குற்ற உணர்வாக இருந்தது. "நான் தான் இதையெல்லாம் கேலி செய்தேனே ! என்னையே பூஜை செய்ய வைத்து, இதென்ன விளையாட்டடி ?" என்று கேட்டேன்.

"இதென்ன, இனிமேல் தான் இருக்கிறது பார் !" என்று அவள் முடிவு செய்திருக்க, அதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

பூஜை தொடங்கியது. அவரவர் லக்ஷ்மிக்கு உபசாரங்கள் குருக்கள் சொல்ல சொல்ல செய்ய ஆரம்பித்தோம். நான் லக்ஷ்மிக்கு ஒவ்வொரு முறை சேவை செய்யும் போதும் முன்னால் இருக்கும் தன்வந்திரி பகவான் ஆட ஆரம்பித்தார். "அட ! இதென்னடா வம்பாய் போய்விட்டதே ! யாருக்கோ பத்திரமாய் திருப்பி தரவேண்டிய மூர்த்தி இப்படி ஆடுகிறதே ! உடைந்துவிட்டால் என்ன செய்வது !"   என்று என்னை கவலை பிடித்து கொண்டது. நான் தன்வந்திரியை பிடித்து கொண்டேன். ஒரு கையால் தன்வந்திரியை பிடித்து கொண்டே பூஜையை தொடர்ந்தேன். ஒருவேளை நம்ம health ஆட்டம் காண்ணறது என்பதை தான் இவர் symbolic ஆ சொல்றாரோ என்று கூட தோன்றியது.

லக்ஷ்மி அஷ்டோத்தரம்,கனகதாரா ஸ்தோத்ரம் எல்லாம் சொல்லி பூஜை நடந்தது. பூஜையின் நடுவில் சற்றே திரும்பி பார்த்தேன். கூட்டம் கூட்டமாய் மக்கள். மக்களுக்கும் மேடைக்கும் நடுவில் ஒரு கயறு கட்டி விட்டிருந்தார்கள். என் சின்ன பெண், "அம்மாவிடம் போவேன்", என்று என் அம்மாவை படுத்திகொண்டிருந்தாள்.

ஒருவழியாய் பூஜை நல்ல படியாய் முடிந்தது. அங்கு பிரசாதமாக பச்சை குங்குமம்,பச்சை ப்ளௌஸ்  பிட்,பச்சை கேசரி,மஞ்சள்,திருமாங்கல்ய சரடு முதலானவை வைக்கபட்டிருந்தன. அவற்றை எங்களையே எடுத்து கொள்ள சொன்னார்கள். 

பின்னர், பூஜை செய்தவர்கள் அவரவர் மூர்த்தங்களை எடுத்து கொண்டு சந்நிதிக்கு வந்து பிரசாதம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார்கள். நாங்கள் பூஜை மட்டும் தானே செய்தோம் அதனால் உபயதரர்களே அவரவர் லக்ஷ்மியை எடுத்துக்கொண்டு சென்று பிரசாதம் வாங்கிகொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

முடிவில் டான்ஸ் ஸ்கூல் குழந்தைகளும் நாங்களும் அழைக்கப்பட்டோம். குழந்தைகள் அனைவரையும் வரிசையாக நின்று குரு வணக்கம் செய்ய சொன்னார்கள். குழந்தைகளும் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சிறு மலர் சரம் சூட்டி ஒரு குபேரன் பொம்மை (நான் கேலி செய்தேனே ! அதே தான் ) பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தார்கள்.

பின்னர், டான்ஸ் டீச்சரை கர்ப்ப கிருஹதிற்குள் அழைத்தார்கள். டீச்சரும் ஏறி நின்றார். பின்னர், கூட்டத்தில் குருக்கள் கண்களால் துழாவினார். அவர் பார்வை என்மேல் நின்றது. என்னை கை காட்டி,"நீங்க வாங்க !" என்றார்.

நானும், "சரி, டீச்சர் பெண் என்பதால் ஆண்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்ய முடியாது. அதனால், அவருக்கு மாலை போட நம்மை அழைக்கிறார்கள் போலிருக்கிறது." என்று எண்ணியபடியே மேலேறினேன்.

நான் மேலேறி நின்றதும் டீச்சரிடம்,"இவங்க தானே உங்களுக்கு அடுத்தபடி (assistant) !?" என்றார் குருக்கள். நான் திரு திருவென விழிக்க டீச்சரோ சட்டேன்று ,"ஆமாம்!" என்றுவிட்டார்.

நான்,"என்ன மிஸ்.....!?" என்று அதிர்ச்சியோடு நோக்க, அவரோ என்னை "எல்லாம் சரிதான் !" என்பது போல் பார்வையாலேயே கையமர்த்தினார். 

டீச்சருக்கு ஒரு ஒண்ணரையடி லக்ஷ்மி பொம்மையும்,குபேரன் பொம்மையும், பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயமும் தந்தார்கள்.

அடுத்ததாக எனக்கும் அதேபோல் ஒண்ணரையடி லக்ஷ்மி பொம்மையும்,குபேரன் பொம்மையும், பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயமும் தந்தார்கள்.

எல்லோரும், "உங்களுக்கு அதிர்ஷ்டம் ! " என்றார்கள்.

குழந்தைகள், "அந்த அம்பாள தாம்மா! கொஞ்சம் கொஞ்சிட்டு தரோம் !" என்றார்கள்.

"ம்ம்ம்... நான் பணம் கொடுத்து குபேரன் பொம்மை வாங்கினேன். இவள் என்னை கிண்டல் செய்தாள்,இவளுக்கு பணம் தராமலே, மூன்று குபேரன்,லக்ஷ்மி எல்லாம் கிடைச்சிருக்கு." என்று என் அம்மா எல்லோரிடமும் சொன்னார்கள்.


வீட்டிற்கு வந்து ஆரத்தி எடுத்து கொலுவில் வைத்தோம். எந்த குபேரன் பொம்மையை என் அம்மா வாங்கியதை கேலி செய்தேனோ அதே குபேரன் பொம்மை எனக்கும், குழந்தைகளுக்கும் ஆளுக்கொன்றாய் மூன்று வந்து வீட்டில் உட்கார்ந்திருக்கின்றனர்.

லக்ஷ்மி பொம்மையை கொலு பொம்மைகள் வைக்கும் பெட்டிக்குள் வைத்து மேலே வைக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. தனியாக ஒரு அட்டை பெட்டி கடையில் இருந்து வாங்கிவந்தேன். அதனுள்ளும் வைக்க முடியாமல் பெரியதாக இருப்பதால், என்னை தினமும் கேலி செய்து கொண்டு என் கண்ணெதிரிலேயே ஹால்லில் இருக்கிறாள் என் ச்வீகார புத்ரி.


ச்வீகார புத்ரி 

அடுத்தவருடம் இவள் உயரத்திற்கு தகுந்தார் போல ஒரு மகாவிஷ்ணுவை வாங்கி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தலைவரிடம் கூறியிருக்கிறேன். 

 பின்னே, பெண்ணை பெற்றுவிட்டால் பொறுப்பு வேண்டாமா !?

"வருந்தி அழைத்தாலும் வாராது, வாரா !
பொருந்துமெனில் போமினேன்றால் போகா"


சிறுவயதில் செல்வத்தை பற்றி படித்தது நினைவிற்கு வந்தது.

மூன்று குபேரர்கள்அது சரி, சகோதர சகோதரிகளே! நீங்கள் சொல்லுங்கள், எல்லோரும் "உங்களுக்கு அதிர்ஷ்டம்! உங்களுக்கு அதிர்ஷ்டம்!" என்றார்களே. எனக்கு என்ன கிடைத்தது "அருளா?" "பொருளா?"

13 கருத்துகள்:

RAMVI சொன்னது…

அருமையாக எழுதி இருக்கீங்க.

உங்களுக்கு கிடைத்தது அருள்.அது இருந்தால் பொருள் பின்னாலேயெ வந்துவிடும்.

Thanai thalaivi சொன்னது…

நன்றி ரமாஜி, தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

Lakshmi சொன்னது…

ரொம்ப அழ்கா சொல்லி இருக்கீங்க உங்களுக்கு அருளும், பொருளும் சேர்ந்தே கிடச்சிருக்கே. வாழ்த்துக்கள்.

Thanai thalaivi சொன்னது…

@ ராஜா : நன்றி திரு.ராஜா. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

@ லக்ஷ்மி அம்மா : நன்றி அம்மா ! திடீரென்று பூஜை செய்ய சொன்னதும், ஒன்றுமே புரியவில்லை. ஏதோ கனவு மாதிரி இருந்தது.

கவிநயா சொன்னது…

உங்களுக்கு அவள் அருள் பூரணமாக இருப்பது தெரிகிறது :) அருமையான அனுபவப் பகிவுக்கு நன்றி!

Thanai thalaivi சொன்னது…

நன்றி கவிநயா ! சில நாட்களாகவே அவள் என்னுடன் இருப்பதாய் பல சம்பவங்களால் உணர்த்தி கொண்டிருகிறாள். இதனால், நம்மை அவள் பார்த்து கொண்டிருகிறாள் என்கிற எண்ணமும். அதனால் என் சிந்தனையையும், செயலையும் நேரான திசையில் செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

பதிவுலகிலும் ஆன்மீக ஆர்வம் மிகுந்த உங்களை போன்றவர்களின் அறிமுகத்தையும் அவள் தான் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறாள் என்றே எண்ணுகிறேன்.

Vasudevan Tirumurti சொன்னது…

:-)))
நெருங்க நெருங்க தள்ளி போவதும் வேண்டாமென்றால் கிட்டே வருவதுண் பகவான் விளையாட்டு! எஞ்சாய்!

Vasudevan Tirumurti சொன்னது…

பசங்க டான்ஸ் பத்தி ஒன்னும் சொல்லலை போலிருக்கே!

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

தேடினால் நான் புலப்படமாட்டேன். விரும்பினால் நான் வரமாட்டென். வெறுத்தால் நான் விளையாடுவேன். நாந்தான் அவள்

Thanai thalaivi சொன்னது…

@.T.R.C : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

@ வாசுதேவன் திருமூர்த்தி : நன்றி அண்ணா ! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

குழந்தைகளின் டான்ஸ் தான் திருப்தியாக அமையவில்லை. பூஜையின் நடுவில் "நிருத்யம் சமர்ப்பயாமி" என்று சொல்லும் போது ஒரு நாலு அடி ஆட சொன்னார்கள். அவ்வளவுதான். குழந்தைகளுக்கு ரொம்ப ஏமாற்றம். "உங்களுக்கு அவள் அருள் கிடைக்க டான்சை ஒரு சாக்காக வைத்து அழைத்திருக்கிறாள்.", என்று எல்லோரும் சொன்னார்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"வருந்தி அழைத்தாலும் வாராது, வாரா !
பொருந்துமெனில் போமினேன்றால் போகா"

aஅருமையான லக்ஷ்மி கடாட்சமான பகிர்வு.. வாழ்த்துக்கள்..