வியாழன், ஜனவரி 12, 2012

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கான பதிவு)


"இது சனி பெயர்ச்சியா தானே இருக்க முடியும் !? எப்படி ராகு-கேது பெயர்ச்சியாச்சு!?"ன்னு நீங்க யோசிக்கலாம். வாஸ்தவம் தான் இந்த க்ரஹமும் சனி அத்தனைக்கு பொல்லாதது தான். ஆனால் சனிக்கு மகரம், கும்பம்னு இரண்டு சொந்த வீடுங்க இருக்கே. இந்த க்ரஹதுக்கு சொந்தமா ஒரு வீடும் கிடையாது. அது மட்டுமில்லாம இந்த கிரஹத்தோட ஜோடி கிரஹமும் இதுவும் எப்பவும் எதிர் எதிர் திசையில தான் இருக்கும்,யோசிக்கும்,செய்யும். அதனால இந்த கிரஹத்த ராகுனும் இதன் ஜோடி கிரஹத்த கேதுனும் வச்சிக்கலாம்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியானது இந்த மாச கடைசில நிகழ போகிறது. ரொம்ப வருசத்துக்கு பிறகு நடக்கிற ஒரு அதிசய வானவியல் நிகழ்வுங்கிறதால இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பலன்கள் : இந்த கிரக  பெயர்ச்சியினால பதிவுலகத்துக்கு மகத்தான நற்பலன்கள் ஏற்பட போகின்றது. எப்படியும் இந்த கிரகம் அடுத்த வீட்டுக்கு போய் அந்த பலன்களை தரத்துக்கு ஒரு மாசமாவது ஆகுமே! பின்ன, போன் கனெக்சன் மாத்தி நெட் கனெக்சன் திரும்பவந்து, அங்க சாமான்களை எல்லாம் அரேஞ்சு பண்ணி செட்டில் ஆகிட்டு அப்புறமா தானே மற்றவர்களை படுத்துவதை பற்றி யோசிக்க முடியும். ஆக, இந்த பெயர்ச்சியினால் பதிவுலக மக்கள் அனைவருக்கும்  மொக்கை போஸ்டுகளில் இருந்தும். ரம்ப கமெண்ட்ஸ்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில் சொல்ல போனால் இந்த பெயர்ச்சியால் இந்த கிரகம் தான் பாடாய் பட போகிறது. 

இந்த கிரகம் போகிற புது ராசியின் பக்கத்துக்கு ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கிரகத்தின் உப கிரகங்கள் இந்த கிரகத்தை விட பொல்லாதவை, அதிக வீரியமுள்ளவை. அவை எப்போதும் தான் இருக்கும் வீட்டில் இருந்து பக்கத்துக்கு வீடுகளை பார்க்கும் தன்மை உடையவை ஆதலால் கூடுதல் எச்சரிக்கை அவசியமாகிறது.

வக்கிர காலம் : இந்த அறிவிப்பு வெளியான உடனே கிரக பெயர்ச்சி ஏற்பட்டு விடாது. எனவே, அவ்வப்போது இந்த கிரகம் வக்கிரமாகி மீண்டும் பதிவுலகை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரம் : இந்த கிரகத்தை புகழ்ந்து தினமும் ஆயிரத்தெட்டு கமெண்டுகளால் அர்ச்சித்தால் கிரக தோஷம் நீங்கி அளவற்ற நற்பலன்களை பெறலாம்.


பின் குறிப்பு : ஹி....ஹி.....ஹி... வீடு மாத்த போறோம். அதுக்குதான் இந்த பதிவு.


அனைவருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜனவரி 06, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

விஜி : ரமணியுடனான எனது நட்பு love marriage என்றால் விஜினுடனான நட்பு  ஒரு arranged marriage.  என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்த போது "தனியா அவ்வளவு தூரம் வரணும், கொஞ்சம் பார்த்துக்கோங்க மிஸ்!" என்று என் அம்மா புஷ்பா மிஸ்ஸிடம் சொல்ல, அவர்கள் பதிலுக்கு "இதோ இந்த பொண்ணு கூட அந்த ஏரியா லர்ந்து தான் வருது, உங்க பொண்ணை இவ கூட வர சொல்லுங்க." என்றார்.

அதோடு விஜியையும் கூப்பிட்டு, "இனிமே இந்த பொண்ணையும் உன் கூட கூட்டிகிட்டு போ என்ன?" என்றார்.

இப்படியாக, என் அம்மாவும், புஷ்பா மிஸ்ஸும் என்னை விஜியிடம் கை பிடித்து கொடுத்தார்கள். அன்று முதல் ஐந்து வருடங்கள் நானும் விஜியும் ஒன்றாகவே இருந்தோம்.

விஜி கட்டையான,குட்டையான,மாநிறமான ஆனால் நல்ல களையான முகம். ஒரு சாயலில் நடிகை ராதிகா போல் இருப்பாள். "நீ ராதிகா போல் இருக்கிறாய்." என்று யாரவது சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவாள்.

விஜி வறுமையிலேயே வாழ்ந்தவள். அதற்கு மேல் இங்கு எழுதுவது அவளை இழிவுபடுத்தியதாகி விடும். நாங்கள் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால், பதினோராம் வகுப்பிற்கு இருவரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்தோம்.

பள்ளி கடைசி நாளில் கட்டிபிடித்து அழுவது போன்ற எந்த விதமான உணர்வு பூர்வமான விஷயங்களும் இல்லாமல், இயல்பாகவே பிரிந்தோம்.

விஜி ரொம்ப அழுத்தமானவள். என் வீட்டிற்க்கு இது வரை ஒரே ஒரு முறைதான் வந்திருக்கிறாள். ஆனால்,நான் அடிக்கடி அவள் வீட்டிற்க்கு போவேன். இந்த மானம், ரோசமெல்லாம் நட்பில் கிடையாது.

பின்னர்,இருவரும் வேறு வேறு திசையில் போய் விட்ட போதும் நான் முடிந்த போதெல்லாம் அவள் வீட்டிற்க்கு போய் அவளுடன் தொடர்பில் இருப்பேன்.  வாழ்கையில் மிக பெரிய துயரங்களை சந்தித்தவள் அவள். அவற்றை தாண்டி எப்படி வாழவேண்டும் என்பதை நிகழ் காலத்தில் வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறாள்.

"விஜி, கல்யாணம் பண்ணிக்கோடீ!, நீ நல்லாஇருப்ப." என்று நான் கெஞ்சும் போதெல்லாம் "ப்ச், பார்க்கலாம், என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் நான் வேறு எதை பற்றியுமே யோசிக்கணும்."  என்று சொன்னவள், சொன்னபடியே உழைத்து வறுமையுடன் போராடி வெற்றி கண்டிருக்கிறாள். தன் தங்கைக்கு திருமணத்தை நல்ல விதமாக முடித்து வைத்து விட்டு தானும் ஒரு நல்லவரை பார்த்து திருமாணம் செய்து கொண்டிருக்கிறாள்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன் என் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு புகைப்படம் வந்தது. அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விஜியின் திருமண புகைப்படமே அது.

இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். விஜி ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்திருந்தாள். இன்றைய தினம் நான் அதை குறிப்பிட கூடாது என்றாலும் அவளில் தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் எல்லோரும் அறியும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இதை குறிப்பிட்டேன்.


இன்று மார்கழி மாதம் ரோகினி நக்ஷத்திரம் சார் பதிவாளரான ரமணிக்கும், சலியாத மன உறுதி கொண்ட விஜிக்கும் பிறந்தநாள். என் நட்புகளுக்கு நான் செய்யகூடியது எதாவது உண்டென்றால் அது அவர்கள் நல்வாழ்விற்க்காக இறைவனை வேண்டுவதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.


என் அருமை தோழிகளின் பிறந்த நாளுக்காகவே இந்த பதிவு.


                                                          சுபம்

செவ்வாய், ஜனவரி 03, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

ரமணி : ரமணியும் நானும் நட்பானது ஒரு சுவாரசியமான நிகழ்வு. என் மகள் படிக்கும் வகுப்பிலேயே அவர்கள் மகனும் படிக்கிறான். சில வருடங்களுக்கு முன் அவன் இந்த பள்ளியில் சேர்ந்த புதிதில், பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக ஒரு மரத்தடியில் காத்திருப்போம். நான் யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது ரமணி தானாகவே வந்து பழக்கமானார். அப்போது அவரை பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லை. ஆனால், சிறிது நாட்களிலேயே அவருக்கு ஒரு பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கு இரண்டு நாட்கள் தான் வேலை பார்த்தார். பின்னர், தாக்கு பிடிக்க முடியாமல் விட்டு விட்டார். ஆனால்,மீண்டும் மரத்தடி மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான் அவரை நம்மவர் என்று என்னை எண்ணவைத்தது. 

அந்த இரண்டு நாட்கள் பள்ளி அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட விதம் அலாதியான நகைச்சுவை நிறைந்தது. பின்னர் நாங்கள் இருவரும் இணைந்தாலே அந்த மரத்தடிக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடும். நாங்கள் இருவரும் பேசுவதை கேட்கவே அந்த மரத்தடியில் ஒரு கூட்டம் கூட ஆரம்பித்தது. அதில் சிலருக்கு பொறாமையும் ஏற்பட்டது. எங்களில் ஒருவர் வரவில்லை என்றாலும், "என்ன உங்க பார்ட்னர் வரலையா?", என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே தொடர்ந்திருந்தால் அந்த மரத்திற்கு எங்கள் பெயரையே வைத்திருப்பார்கள். ஆனால், அதற்குள் ரமணிக்கு வேறு ஒரு பள்ளியில் வேலை கிடைத்து விட்டதால் எங்கள் நட்பில் சிறு இடைவெளி ஏற்பட்டது. 

அவர் தமிழில் எம்.பில். பட்டம் பெற்றவர் என்பதால் உயர் நிலை வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியை ஆனார். இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபின் இப்போது மீண்டும் வேலையை விட்டுவிட்டு என்னோடு தான் வெட்டியாக சுற்றிகொண்டிருக்கிறார்.

இப்போதும் அவர் பள்ளி அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் போது   உண்மையிலேயே அந்த பணியை அவர் எவ்வளவு நேசித்தார் என்பதை உணர முடிகிறது.

"அப்பா ! உங்களுக்கு அந்த வேலைல எவ்வளவு புதிய புதிய அனுபவங்கள் இல்லே ரமணி !?", என்று நான் கேட்டால், "அதுக்கு உங்களுக்கு தாங்க நன்றி சொல்லணும் நீங்க தானே அந்த விளம்பரத்த பார்த்து சொன்னிங்க", என்பார்.

"விளம்பரத்தை பார்த்து தானே சொன்னேன். வேலையே நானா பார்த்துவச்சேன்?" என்பேன்.

இப்போது பதிவெழுத ஆரம்பித்த பின் நாங்கள் சந்தித்து கொள்ளும் போதெல்லாம்  பதிவுலகம் பற்றித்தான் பேசுகிறோம். அவர் பதிவுகளை படிப்பதில்லை என்றாலும் நான் தினமும் நான் எழுதியதை, படித்ததை அவருடன் பகிர்ந்து கொண்டு விடுகிறேன். எனவே, பதிவுலகில் எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரையும் ரமணிக்கும் தெரியும்.

சென்ற வாரத்தில் ஒருநாள் ரமணிக்கு போன் செய்தேன். "ஏங்க, sub-registrar க்கு தமிழ்ல்ல என்னன்னு சொல்லுவாங்க?"

அவரும் நான் ஏதோ தமிழில் சந்தேகம் கேட்கிறேன் என்று எண்ணிக்கொண்டு "ம்...ம்...ம்...யோசிச்சு சொல்லறேங்க."

நான் உடனே,"சார்பதிவாளர் ன்னு வச்சிக்கலாமா?"

"ஆமாங்க, சார்பதிவாளர் தான் சரி!"

"சரி!, அப்படின்னா இன்னைலருந்து நீங்க சார்பதிவாளர் !"

"என்ன சொல்லறிங்க...!!!!"

"நான் பதிவிடுகிறேன் அதனால் நான் பதிவாளர், நீங்க என் மூலமா பதிவுகளை படிக்கிறீர்கள், கருத்துகளையும் சொல்கிறீர்கள் அதனால் நீங்கள் சார்பதிவாளர்."

"!!!!!!!!!" 

                                                                                                                                       .....தொடரும்