செவ்வாய், ஜனவரி 03, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

ரமணி : ரமணியும் நானும் நட்பானது ஒரு சுவாரசியமான நிகழ்வு. என் மகள் படிக்கும் வகுப்பிலேயே அவர்கள் மகனும் படிக்கிறான். சில வருடங்களுக்கு முன் அவன் இந்த பள்ளியில் சேர்ந்த புதிதில், பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக ஒரு மரத்தடியில் காத்திருப்போம். நான் யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது ரமணி தானாகவே வந்து பழக்கமானார். அப்போது அவரை பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லை. ஆனால், சிறிது நாட்களிலேயே அவருக்கு ஒரு பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கு இரண்டு நாட்கள் தான் வேலை பார்த்தார். பின்னர், தாக்கு பிடிக்க முடியாமல் விட்டு விட்டார். ஆனால்,மீண்டும் மரத்தடி மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான் அவரை நம்மவர் என்று என்னை எண்ணவைத்தது. 

அந்த இரண்டு நாட்கள் பள்ளி அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட விதம் அலாதியான நகைச்சுவை நிறைந்தது. பின்னர் நாங்கள் இருவரும் இணைந்தாலே அந்த மரத்தடிக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடும். நாங்கள் இருவரும் பேசுவதை கேட்கவே அந்த மரத்தடியில் ஒரு கூட்டம் கூட ஆரம்பித்தது. அதில் சிலருக்கு பொறாமையும் ஏற்பட்டது. எங்களில் ஒருவர் வரவில்லை என்றாலும், "என்ன உங்க பார்ட்னர் வரலையா?", என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே தொடர்ந்திருந்தால் அந்த மரத்திற்கு எங்கள் பெயரையே வைத்திருப்பார்கள். ஆனால், அதற்குள் ரமணிக்கு வேறு ஒரு பள்ளியில் வேலை கிடைத்து விட்டதால் எங்கள் நட்பில் சிறு இடைவெளி ஏற்பட்டது. 

அவர் தமிழில் எம்.பில். பட்டம் பெற்றவர் என்பதால் உயர் நிலை வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியை ஆனார். இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபின் இப்போது மீண்டும் வேலையை விட்டுவிட்டு என்னோடு தான் வெட்டியாக சுற்றிகொண்டிருக்கிறார்.

இப்போதும் அவர் பள்ளி அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் போது   உண்மையிலேயே அந்த பணியை அவர் எவ்வளவு நேசித்தார் என்பதை உணர முடிகிறது.

"அப்பா ! உங்களுக்கு அந்த வேலைல எவ்வளவு புதிய புதிய அனுபவங்கள் இல்லே ரமணி !?", என்று நான் கேட்டால், "அதுக்கு உங்களுக்கு தாங்க நன்றி சொல்லணும் நீங்க தானே அந்த விளம்பரத்த பார்த்து சொன்னிங்க", என்பார்.

"விளம்பரத்தை பார்த்து தானே சொன்னேன். வேலையே நானா பார்த்துவச்சேன்?" என்பேன்.

இப்போது பதிவெழுத ஆரம்பித்த பின் நாங்கள் சந்தித்து கொள்ளும் போதெல்லாம்  பதிவுலகம் பற்றித்தான் பேசுகிறோம். அவர் பதிவுகளை படிப்பதில்லை என்றாலும் நான் தினமும் நான் எழுதியதை, படித்ததை அவருடன் பகிர்ந்து கொண்டு விடுகிறேன். எனவே, பதிவுலகில் எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரையும் ரமணிக்கும் தெரியும்.

சென்ற வாரத்தில் ஒருநாள் ரமணிக்கு போன் செய்தேன். "ஏங்க, sub-registrar க்கு தமிழ்ல்ல என்னன்னு சொல்லுவாங்க?"

அவரும் நான் ஏதோ தமிழில் சந்தேகம் கேட்கிறேன் என்று எண்ணிக்கொண்டு "ம்...ம்...ம்...யோசிச்சு சொல்லறேங்க."

நான் உடனே,"சார்பதிவாளர் ன்னு வச்சிக்கலாமா?"

"ஆமாங்க, சார்பதிவாளர் தான் சரி!"

"சரி!, அப்படின்னா இன்னைலருந்து நீங்க சார்பதிவாளர் !"

"என்ன சொல்லறிங்க...!!!!"

"நான் பதிவிடுகிறேன் அதனால் நான் பதிவாளர், நீங்க என் மூலமா பதிவுகளை படிக்கிறீர்கள், கருத்துகளையும் சொல்கிறீர்கள் அதனால் நீங்கள் சார்பதிவாளர்."

"!!!!!!!!!" 

                                                                                                                                       .....தொடரும் 

3 கருத்துகள்:

RAMVI சொன்னது…

ஹா,ஹா...நன்னயிருக்கு உங்க விளக்கம்....

தங்கள் பதிவின் சார் பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தா. தலைவி.

ஹுஸைனம்மா சொன்னது…

அவரது ஆசிரியப் பணிகளின் அனுபங்களையும் கேட்டு எழுதுங்க. ஏன் விலகினார் என்று தெரிய ஆவலாயிருக்கு.

Thanai thalaivi சொன்னது…

@ ரமாஜி : வருகைக்கு நன்றி .அடுத்த பதிவையும் படித்து விட்டு வாழ்த்துங்கள், பொருத்தமாக இருக்கும்.

@ ஹுச்சைனம்மா : பையனை காப்பகத்தில் விட்டுவிட்டு தான் வேலைக்கு போய் கொண்டிருந்தார்கள். அவர்கள் காப்பகத்தை மூடி விட்டதால் குழந்தையை பார்த்துக்கொள்ள ஆளில்லை. நாங்கள் வேறு ஏதாவது உபயோகமாக செய்யலாமா என்று சிந்தித்து கொண்டிருக்கிறோம்.

அவர்களின் பள்ளி அனுபவங்களை இனி வரும் காலத்தில் சிறிது கற்பனையும் கலந்து பதியும் எண்ணமும் உள்ளது. வருகைக்கு நன்றி.