திங்கள், ஆகஸ்ட் 26, 2013

கண்ணனை நினைப்பவர் சொல்வது பலிக்கும்

நாளைக்கு நம்ம கிருஷ்ணருக்கு  ஹாப்பி பர்த்டே. ஒரு காலத்துல்ல எனக்கு கிருஷ்ணர் தான் ரொம்ப புடிச்ச கடவுள் (இப்போ அதே தெய்வத்தின் வேறு வடிவமான அன்னை பராசக்தி). அப்போ எங்க டியூஷன் அக்கா கூட கிண்டல் பண்ணுவாங்க," ஆமா!, பொம்பளைங்களுக்கெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி கிருஷ்னர புடிக்கும், கல்யாணத்துக்கப்புறம் ராமர புடிக்கும்."ன்னு.

எனக்கு அப்படியெல்லாம் இல்ல. முன்னாடி சின்னவயசுல்ல எப்பவோ கேட்ட ஞாபகம், "உலகத்துல்ல ஒரே ஒரு உருவம் தான் உண்டு. அதன் ஒரு பாதி சக்தியாவும், மறுபாதி சிவனாகவும் இருக்கு. அந்த சக்தியா இருக்குற ஒரு பாதி தான் திருமாலாவும் இருக்குன்னு. இதை எங்கே எப்போ கேள்வி பட்டென்னு ஞாபகம் இல்லை. ஆனா இது  என் மனசுல்ல ரொம்ப ஆழமா பதிந்து விட்டது.

கல்யாணத்துக்கு முன்னாடி கிருஷ்ணன ஜெயந்தின்னா வீட்டையே ரெண்டு பண்ணிடுவேன் (நவராத்திரிக்கும் படுத்துவேன்). இந்த ஸ்லோகம் சொல்லணும், இந்த கோவிலுக்கு போகனும். இப்படி பண்ணனும், அப்படி பண்ணனும் ன்னு. பாவம் எங்கம்மா வீட்டு வேலையோட என்னோட ஆச்சார படுதல்களுக்கெல்லாம் வேற ஆடுவாங்க.பின்ன அவங்க தானே என்னை இப்படி சொல்லி சொல்லி வளர்த்தது.

இப்போ கல்யாணத்துக்கப்புறம் இந்த மாதிரி ஆர்ப்பாட்டமெல்லாம் செய்ய முடியறதில்ல. ஒன்னு வேலை அதிகம். அடுத்தது நான் ஆர்ப்பாட்டம் பண்ணினால் இங்கே அதை கண்டுக்கவே  ஆளில்ல.

இப்படித்தான் போன வருஷம் என் தம்பி போன் பண்ணி, " என்னக்கா இன்னிக்கு உன் கிச்சுக்கு ஹாப்பி பர்த்டே வாச்சே, எப்பவும் போல சாமி ஆடிட்டியா"  ன்னு கேட்டான்.

எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு. "போடா தம்பி ! இங்க நானே பக்ஷணம் பண்ணனும், சுவாமி பாத்திரம் தேய்க்கணும், குழந்தைகளை கவனிசிக்கன்னும். இதுல்ல என்னிஷ்டப்படி பூஜை பண்ணவே முடியலைடா. கோவிலுக்கும் போகணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு ஆனா வீட்டுல்ல வேலை இருக்கே." என்றவுடன் அவன் கட,கட வென்று சிரித்து "நன்னா வேணும் எல்லோரையும் நீ என்ன பாடு படுத்தி வச்சிருப்ப." என்று கொக்கரித்தான்.


உண்மை தான் முன்பெல்லாம் நேரம் அதிகம் இருந்ததால் சம்ப்ரதயங்களின் மேல் அதிக பற்று வைத்து இருந்தேன். அது அப்போது சாத்தியமானதாகவும் இருந்தது. ஆனால், இப்போதோ நேரமின்மையில் தவிக்கும் போது, "பக்தி தான் முக்கியம், பகவான் நாம அன்போட எத குடுத்தாலும் ஏத்துப்பார்." என்று சமாதானம் சொல்ல முற்படுகிறது மனம்.


சரி, விஷயத்துக்கு வருகிறேன். பகவானுக்கு தன்னை பூஜிப்பவர்களை விட தன் பக்தர்களை பூஜிப்பவர்களை தான் அதிகம் பிடிக்குமாம். "அதனால என்ன இப்போ, நாங்கள் எல்லோரும் உன்னை பூஜிக்கனும்ன்னு சொல்லறியா" ன்னு கேட்காதீங்க. அப்படியெல்லாம் இல்லை. ஏன்னென்றால்  எனக்கு அத்தனை பக்தி இல்லை.

நான் இங்கே குறிப்பிட வந்த பக்தர்கள் பாரதியாரும்,கண்ணதாசனும் தான். அவர்களின் பக்தி ஈடுசொல்ல முடியாதது. கடவுளை தன் வீட்டு வேலைக்காரனாக நினக்கவெண்டுமென்றால் பாரதியாருக்கு தன் பக்தியின் மேல் எத்தனை நம்பிக்கை இருக்க வேண்டும். அதைத்தான் நான் முந்திய பத்தியில் சொன்னேன். என் பக்தியில் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்று.

பாரதியார்  அன்னை பராசக்தியை பாடிய அளவுக்கு கண்ணனையும் பாடியுள்ளார், (மற்ற தெய்வங்களை பாடியது குறைவு).

திருமால் மோகினியாக அவதாரம் எடுக்க முடிந்ததற்கு காரணம், அவரே பராசக்தியாகவும் இருப்பதால் தான் என்று பொருள்படும்படியான ஒரு பாடல் கூட உள்ளது (பாரதியார் பாடல் அல்ல).

 கண்ணதாசனும் தானே ராதையாக மாறி ,கண்ணா ! கண்ணா ! என்று உருகி இருக்கிறார். "காதல் கொண்டோர் சொல்லும் சொல் அல்லவோ. என் கண்ணா என்பாரன்றி வேறென்னவோ. சாதல் வந்தால் கூட கவலை இல்லை. என் சங்கீதம் அவனன்றி யாருமில்லை." என்கிறார். அன்பின் மிகுதியில் நாம் சொல்லும் சொல் "கண்ணே! அல்லது கண்ணா !" என்பது தானே.

நமக்கெல்லாம் கந்த சஷ்டி கவசம்,ஸ்கந்த குரு கவசம், ஸ்ரீ புவனேஸ்வரி கவசம் தெரியும். கேள்விப்பட்டிருக்கோம். ஸ்ரீ கிருஷ்ண கவசம் தெரியுமா. இதை எழுதியவர் கண்ணதாசன். அதன் முன்னுரையில் அவர் கூறுகிறார். கண்ணன் ஒரு காவல் தெய்வம். அவனை நினைப்பவர்களுக்கு துக்கமில்லை. "கண்ணனை நினைப்பவர் சொல்வது பலிக்கும்".

இதே விஷயத்தை நீங்கள் சாக்த வழிபாட்டிலும் காணலாம். அன்னை பராசக்தியை வழிபடுபவர்களுக்கு வாக்கு வன்மை ஏற்படும்  என்பது  அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.


இந்த "ஸ்ரீ கிருஷ்ண கவசம்", என்ற சிறு நூலை வானதி பதிப்பகத்தார் வெளி இட்டுள்ளார்கள். விலை கொஞ்சம் அதிகம் தான். ஒரு ரூபாய் விலை. ஸ்ரீ கிருஷ்ண கவசத்தை இங்கே பதிவிடலாமா என்பது தெரியவில்லை. எனவே, இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு அதை படிக்க விரும்பும் அன்பர்கள் அந்த நூலை வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


அனைவருக்கும் அன்னை பராசக்தியும், அவளுருவாய் இருக்கும் கண்ண பெருமானும் அனைத்து நலன்களையும் வழங்கட்டும்.வியாழன், ஆகஸ்ட் 22, 2013

ரீ என்ட்ரீ

இந்த சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி கொஞ்ச காலம் நடிக்காம இருந்துட்டு திரும்பவும் நடிக்க வரும்போது அதற்கு நிறைய தடபுடல் இருக்கும். நான் என்ன நடிக்கவா செய்யறேன். அதனால என் ரீ என்ட்ரி க்கு எந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பும் தேவையில்லை (நீ கேட்டாலும் இங்க யாரும் குடுக்க தயாரில்லை).

என் தம்பியின் திருமணதிற்கு பின், என் கம்ப்யூட்டர் ரொம்பவே தொல்லை கொடுத்து விட்டது. நிறைய சர்வீஸ் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து விட்டு, அதனால தான் இதனால தான் என்று காரணம் சொல்லிவிட்டு போனார்கள். ஏதோ ஒரு அஜீத் படத்துல ஆட்டோ கண்ணாடிய திருப்பினா ஆட்டோ கிளம்புமே அந்த மாதிரி,"மேடம்!, உங்க கேஸ் அடுப்ப கொஞ்சம் நிறுத்துங்க !, அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும்!", ன்னு தான் யாரும் சொல்லலை.

அந்தளவுக்கு புதுமையான காரணங்கள் சொல்லப்பட்டன. அவ்வப்போது என் தம்பியின் லாப் டாப்பிலும், பிரௌசிங் சென்டரிலும் சென்று மெயில் மட்டும் பார்த்து வந்தேன். அப்போதெல்லாம் வலை உலகத்தில் என்ன நடக்கிறதோ தெரியவில்லையே என்ற ஏக்கம் பிடித்து வாட்டும். ஒரு சில தளங்களில் மட்டும் சென்று அவ்வப்போது சில கமெண்டுகளை தூவிவிட்டு போய் விடுவேன்.

இத்தனை நாட்களும் என்னை யாரும் தேடியிருக்க மாட்டார்கள் (தேடுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் பெரிதாக எழுதிவிடவில்லை).

இருந்தாலும், " நான் வந்துட்டேன்............!" என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ரீ என்ட்ரி யை ஒரு நல்ல செய்தியோடு ஆரம்பிப்போம் என்று எண்ணுகிறேன்.

சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாட பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. வரும் செப்டெம்பர் 11 ஆம் தேதி  (அன்று சுவாமிஜி சிகாகோவில் சொற்பொழிவாற்றிய நாள்) சென்னை கடற்கரையில் உள்ள ஸ்ரீ விவேகானந்தர் இல்லத்தில் மாலை நான்கு மணிக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. பெரிய தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். பின்னர், விவேகானந்தர் இல்லத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை  "தேசத்திற்காக ஓடுவோம்", என்ற  ஒரு ஓட்டம் (mass run ) நடைபெற உள்ளது. இதில் பதினெட்டு முதல் நாற்பது வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு ஓடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, எல்லோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேச பணியில் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.