புதன், ஆகஸ்ட் 29, 2012

அம்மா வீடு (கதை)

பூஜா அவள் சித்தப்பா வீட்டிற்கு சென்று நான்கு நாட்களாகி விட்டன. இது வரை நான் அவளை பிரிந்து இத்தனை நாட்கள் எல்லாம் இருந்ததே இல்லை. அவளும் தான்.

என் மைத்துனரின் மகளும், பூஜாவும் கிட்டதட்ட ஒரே வயது. தன் வயது ஒத்த  குழந்தையை கண்டவுடன் அவர்களுடன் தான் செல்வேன் என்று ஒரே அடம். "இருக்கட்டுமே அண்ணி ! நாங்க பார்த்துக்கறோம், வெகேஷன் தானே இப்போ ", என்று  மைத்துனரும், ஓர்ப்படியும் மிகவும் வற்புறுத்தி சொன்னதால் அனுப்பிவிட்டேன். பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை, கோயம்புத்தூர். திடீரென்று  "அம்மா வேணும்", என்று கேட்டு அழுதால் என்ன செய்வார்கள்? இவள் அங்கே என்ன பாடு படுத்துவாளோ அவர்கள் முகம் சுளிக்கும் படி எதாவது செய்து விட்டால்...?

இவரோ, "அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையே இல்லை, உன் வளர்ப்பில் உனக்கு நம்பிக்கை இல்லையா, அதோடு எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள்." என்று  சொல்லவும் அனுப்பிவிட்டேன்.

அவள் அங்கு சமர்த்தாக இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. அவளும் தன்  சகோதரியோடு மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். எனக்கு தான் இங்கு பொழுதே போகவில்லை. சமைக்க பிடிக்கவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. அவள் இல்லாத போது தொந்தரவில்லாமல் செய்யவேண்டும் என்று நினைத்திருந்த காரியங்கள் இன்னமும் தொடங்கபடாமலே அப்படியே இருக்கின்றன.

அவள் இருக்கும் போது என் உலகம் அவளை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. இப்போது அவள் இல்லாத போது அது அப்படியே இருந்த இடத்திலேயே நின்று விட்டதாகவே தோன்றுகிறது.

பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் கொண்டு விடவேண்டாம். டிவி சத்தம் இல்லை. தொனதொன கேள்விகள் இல்லை. ஆனாலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

போகிற போக்கை பார்த்தால் அவளுக்கு திரும்பி வரும் எண்ணமே இல்லை என்று தோன்றியது. "எப்படியடி முடிகிறது உன்னால்?", என் மனம் அரற்றியது.

மாலை எல்லா  வேலைகளும் முடிந்து விட்டன. வீட்டிலேயே எவ்வளவு  நேரம் தான் டி.வி பார்த்து கொண்டு உட்கார்ந்திருப்பது. வீட்டை பூட்டிக்கொண்டு மெல்ல தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். இலக்கில்லாமல்  நடந்தவளுக்கு, அம்மா வீட்டுக்கு போய்வந்தால் என்ன என்று தோன்றியது. 

அம்மா வீடு அப்படியொன்றும் தூரத்தில் இல்லை. நான்கைந்து தெருக்கள் தள்ளிதான் இருக்கிறது. ஆனால் அங்கு போகத்தான் எனக்கு நேரமே இருப்பதில்லை.  நான் பெற்றதை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அம்மா வீட்டுக்குப்போய் குறைந்த பட்சம்  ஆறு மாதங்கள் இருக்கும் என்று தோன்றியது.

என் அம்மா எதற்குமே கோபப்படாத சாந்தமான குணம். நான் போகவில்லை என்றாலும் சிலசமயம் நேரம் கிடைத்தால், அவளே வந்துவிடுவாள்.

அம்மா வீட்டில் வருவோர் போவோர் அதிகம். எல்லோரையும் கவனிக்கவே அம்மாவுக்கு நேரம் சரியாக இருக்கும். அப்பா பரப்ரிம்மம் எதிலும் பட்டுக்கொள்ள மாட்டார்.

வீட்டு  வாசலை அடைந்த போது  என் பெரியண்ணன் கணேசன்  வாசலிலேயே உட்கார்ந்திருந்தான். நான் அடிக்கடி சொல்லுவேன்,"நம்ம வீட்டுக்கு வாட்ச் மேனே  வேண்டாம் நீயே போதும்."

"வாங்கோ ! வாங்கோ ! பவித்ரா மாமி ! என்ன திடீர்ன்னு இந்தப்பக்கம்?" அவன் குரலில் கேலியும் கிண்டலும்  சற்று தூக்கலாகவே தெரிந்தது.

ரொம்ப அவமானமாக இருந்தது. ஆனாலும் நான் என்ன செய்யமுடியும்?  "அம்மாவை பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு ...." நான் முடிக்கும் முன்பே,

"ஓ ....., குழந்தைக்கு அம்மா ஞாபகம் வந்துடுத்தா....!?" திருப்பியும் நக்கல்.

உள்ளே திரும்பி "டேய் ! மணி இங்கபாருடா யார் வந்திருக்கான்னு, ஏய் ! துர்கா சீக்கிரம் வா, இங்க ஒரு  அதிசயம் பாரு !" என்று அவன் குரல் கொடுக்கவும் என் சின்னண்ணன் மணியும், தங்கை துர்காவும் ஓடி வந்தார்கள்.

                                                                                                                                       தொடரும்....

பி.கு : இது என் முதல் முயற்சி. உங்கள் விமர்சனங்கள் என்னை பண்படுத்த உதவும். எதையும் சுருக்கமாக சொல்லி பழகாததால், இந்த கதை நீண்டு விட்டது. நிச்சயமாக அடுத்த பதிவில் முடிந்து விடும் என்று உறுதியளிக்கிறேன். எனவே,  எல்லோரும் மனதை தேற்றிக்கொள்ளவும்.

4 கருத்துகள்:

எல் கே சொன்னது…

என்னது நீண்டு போச்சா... ரொம்ப குட்டியா இருக்கு.. சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவள் இருக்கும் போது என் உலகம் அவளை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. இப்போது அவள் இல்லாத போது அது அப்படியே இருந்த இடத்திலேயே நின்று விட்டதாகவே தோன்றுகிறது.உண்மை தான்.. குழந்தைகளைச்சுற்றி உலகம் அமைத்து வாழ்ந்து பழகிவிட்டோம்...

கவிநயா சொன்னது…

ச்வீட்டா இருக்கு! அடுத்த பகுதியை எதிர் நோக்கி...

எல் கே சொன்னது…

அடுத்த பாகம் எங்க