புதன், செப்டம்பர் 04, 2013

குருவே சரணம்

 "PARENTS ARE THE FIRST TEACHERS, AND THE TEACHERS ARE THE SECOND PARENTS."  என்பார்கள். நிற்பது,நடப்பது,உண்பது,உறங்குவது,பேசுவது என பலவற்றையும் சொல்லிதராமலே பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். சிலவற்றை அவர்கள் கற்றும் தருகிறார்கள். எனவே, PARENTS ARE THE FIRST TEACHERS.


நம்மிடம் இருக்கும் நல்ல குணமோ, கெட்ட குணமோ அவர்களிடமிருந்து தான் பெறுகிறோம்.

அதனால், என் முதல் ஆசிரியர்களான என் பெற்றோருக்கு இன்று ஆசிரியர் தின வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


முன் காலத்தில் குருகுல வாசம் என்ற முறை இருந்தது. குழந்தைகள் குருவின் வீட்டிலேயே தங்கி அவர்களையே பெற்றோராக பாவித்து அவர்கள் சொல்படி கேட்டு கல்வி கற்க வேண்டும். எனவே, THE TEACHERS ARE THE SECOND PARENTS.

 என்னிடம் சில நல்ல பழக்கங்களாவது உள்ளதென்றால் அது என் ஆசிரிய பெருமக்கள் தந்த தன்னலமற்ற கொடையாகும்.

"கார்த்தால  நான் கிளாஸ்குள்ள நுழைஞ்ச உடனே யாரும் எனக்கு குட் மார்னிங் சொல்லக்கூடாது. நான் சொல்லி குடுத்திருக்கேனே அந்த ஸ்லோகங்கள், அதை தான் சொல்லணும்." சொன்னவர் எங்களுக்கு  வரலாறு, மற்றும் ஆங்கிலம் நடத்திய எங்கள் தலைமை ஆசிரியை திருமதி.பத்மாவதி அவர்கள். அந்த ஸ்லோகங்கள் "அசாத்திய சாதக ஸ்வாமின்" என்று தொடங்கும் ஆஞ்சநேயர் சுலோகம் மற்றும் "அன்னையே அருந்துணையே" என்று தொடங்கும் அரவிந்த அன்னை சுலோகம்.

இன்றும் நான் "அசாத்திய சாதக ஸ்வாமின்" சொல்கிறேன். அது மிகவும் சக்திவாய்ந்த சுலோகம் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

அவர் வரலாறு பாடம் நடத்தும்போது. பாடம் மட்டும் நடத்தவில்லை. நம் நாட்டை பற்றிய பொதுவான பல விஷயங்களை சுவைபட கூறுவார். அவர் பேசுவதை கேட்கும் போது கேட்பவருக்கு தேசபக்தி பீறிட்டு கிளம்பும். "எம்டன்" என்றால் என்ன என்பதை எங்களுக்கு விளக்கியவர் அவர் தான்.

நான் வரலாறை சிறப்பு பாடமாக எடுத்துப்படிக்க அவர்தான் காரணம்.

கணக்கே வராது என்று காத தூரம் ஓடிய என்னை கணக்கில் எண்பது சதவிகிதம் வாங்க வைத்தவர் என் லக்ஷ்மி மிஸ். பத்தாம் வகுப்பு முடிவுகள் வந்து நான்  பள்ளிக்கு சென்ற போது எனக்காக வாசலிலேயே காத்திருந்தார். "மாத்ஸ் ன்னாலே பயப்படுவியே எவ்வளவு மார்க் தெரியுமா?" என்று குறும்பாக சிரித்தவர்,"உள்ள போய் மார்க் ஷீட்ட பார்." என்று சஸ்பென்ஸ் வேறு வைத்தார்.

எப்போதும் சிரித்தமுகம் என்று என்னை பலர் சொல்வார்கள். அது அவர்களிடமிருந்து கற்றது தான். ஒரு முறை அவர்களின் சோகமான சொந்த வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்த போது, இத்தனை சோகத்திலுமா இவர் இத்தனை எனர்ஜடிக்காக இருக்கிறார் என்று ஆச்சர்யம் ஏற்பட்டது.


"ஏம்மா நீங்களாம் இந்த காதலை பற்றி என்னம்மா நினைக்கிறிங்க?" என்று கேள்வி கேட்டு எங்களை சிந்திக்க தூண்டி சிறுவயதில் நாங்கள் வழிதவறி விடாமல் இருக்க காரணமாய் இருந்தவர் எங்கள் தமிழ் ஆசிரியை திருமதி.மணிமேகலை மிஸ். பல பெண்ணிய கருத்துக்கள் என்னுள் பதிய காரணமாய் இருந்தவரும் அவர்தான்.

ஒருமுறை அவர்  "தினமும் படுக்க போறதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது படிக்கணும், இல்லன்னா ஒரு நோட்டாவது திருத்தணும். அப்பத்தான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். என் வீட்டுல கூட சொல்லிவச்சிருக்கேன்  நான் இறந்த பிறகு என் தலைமாட்டுல ஒரு புக்கும், பேனாவும் வச்சிடுங்க அப்பத்தான் என் ஆத்மா சாந்தி அடையும்ன்னு." என்று சொல்ல நாங்கள் அசந்து போனோம்.

இன்று, "ராத்திரி பத்து மணிக்கும் முடியல,முடியலன்னு  சொல்லிண்டு அப்படியாவது என்ன படிக்கன்னுமா." ன்னு தலைவர் சத்தம் போட்டாலும் நான் தினமும் தூங்குவதற்கு முன் ஏதாவது படிப்பது அவர் கற்றுத்தந்தது தான்.

நானும் தலைவரும் கண் தானம் செய்திருப்பதும் நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது தான்.

புஷ்பா மிஸ், இந்திரா மிஸ் இவர்களை பார்த்தால் தாய் பாசம் பொங்கி வரும். .

எங்களுக்கு பரிட்சை வரும்போது உருகி உருகி அவர்களின் மதப்படி ப்ராத்திப்பதை பார்த்தால் எங்கள் மேல் எங்களை விட அவர்களுக்கு எவ்வளவு பாசம் என்பது புரியும்.

சாந்தா மிஸ், பேருக்கேற்றார் போல் சாந்தமான மிஸ். இவர் கிளாஸ் என்றால் எங்களுக்கு கொண்டாட்டம் தான். அவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் கூச்சல் போட்டு கொண்டு குஷியாக இருப்போம்.

"இப்படி வருடாவருடம் வரும் குழந்தைகளை இவர்களால் எப்படி நேசிக்க முடிகிறது?",  என்று எனக்கு வியப்பாக இருக்கிறது.

இப்படி ஆன்மீகம்,சமூகம்,அரசியல்,அன்பு,பாசம் என்று பல விஷயங்களை என் ஆசிரியைகளிடம் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன்.

என் குழந்தைகளிடம் சொல்லிவைத்திருக்கிறேன், "உங்களால் உங்கள் பள்ளிக்கும், ஆசிரியார்களுக்கும், வீட்டுக்கும்,நாட்டுக்கும் பெருமை ஏற்ப்படவேண்டும். அப்படிபட்ட காரியங்களையே நீங்கள் செய்யவேண்டும். இது தான் நீங்கள் செய்யக்கூடியது."

உலகில் எல்லோரும் நமக்கு எத்தனையோ பாடங்களை கற்று கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

எனக்கு உலகத்தை காட்டிய என் ஆசிரிய பெருமக்களுக்கு என் கோடானுகோடி வணக்கங்கள்.


3 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய் ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

Kavinaya சொன்னது…

மிகவும் அருமையான, மனதை நெகிழ வைத்த பதிவு. நானும் எனக்கு வாழ்க்கையில் பல பாடங்களையும், வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தந்த அனைவரையும் இந்தச் சமயத்தில் வணங்கிக் கொள்கிறேன்.

சுசி சொன்னது…

@ இராஜ ராஜேஸ்வரி : நன்றி மேடம் ! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.

@ கவிநயா : நன்றி கவிநயா.